வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

சனி, 31 டிசம்பர், 2022

 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 30

 

கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், சிற்றிதழாளர் எனப் பன்முக ஆற்றலுடையவர் திரு. இதயா ஏசுராஜ் அவர்கள். கோவையில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணி புரிபவர்.

இவரது முதல் சிறுகதை 'நேசமுள்ள நெஞ்சங்கள்' தஞ்சையிலிருந்து வெளிவந்த 'வேளாங்கண்ணி குரலொலி' என்ற சிற்றிதழில் வெளிவந்தது.

தொடர்ந்து பாக்யா, தினத்தந்தி, தினபூமி, மாலை மலர், கல்கி என வணிக இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கதைகளும், ஐம்பதுக்கும் அதிகமான கவிதைகளும் எழுதியுள்ளார்.

'வருகைக்கான ஆயத்தங்கள்' இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு (2018).

'பயணிகள் உலவும் காகிதக்காடு' இவரின் முதல் நாவல் (2019). 'இல்லம் சொர்க்கமாக' நூல் முதல் 'தமிழ் சினிமாவின் வரலாறு' நூல்வரை 12 கட்டுரை நூல்கள் வெளி வந்துள்ளன.

'விழி', 'திருவிழா' என்கிற இரண்டு சிற்றிதழ்களை நடத்திய அனுபவமுள்ளவர்.

'நம் உரத்த சிந்தனை விருது' 'சென்னை வானதி விருது' 'கலை இலக்கியப் பெருமன்ற விருது' போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

விரைவில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், நாவலும் வர இருக்கின்றன. அவைகளோடு மேலும் மேலுமாய்த் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க, திரு. இதயா ஏசுராஜ் அவர்களை மனதார வாழ்த்துவோம்.








 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 29

 

உலகப் புகழ் பெற்ற கல்வியாளர், உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஐந்து முதுகலைப் பட்டங்கள் பெற்றவர், தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலி, ஃபிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பன்மொழிப் புலமையாளர், சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க உரையாளர், தேர்ந்த இதழாளர், தனிநாயகம் இதழியல் கல்லூரி நிறுவனர், முதல்வர், முனைவர், அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்கள். எமக்கோ தோழர். எப்பொழுதும் எம்மைத் தோழர் என்றுதான் அன்போடு அழைப்பார்.

1. நெஞ்சம் நிறைந்தவர் (1986) 2. தமிழர் செல்வம் (1991) 3. உலகெல்லாம் தமிழ் முழக்கம் (1992) 4. தனிநாயக அடிகளார் (1993) 5. இத்தாலி நாட்டு வித்தகத் தமிழர் (1995) 6. நெஞ்சம் மறப்பதில்லை (1996) 7. வள்ளலார் காட்டும் ஆன்ம நேயம் (2008) 8. வரலாற்றில் புன்னைக்காயல் (2012) 9. தனிநாயகம் என்னும் தமிழ்நாயகம் (2013) போன்ற பல நூல்களை எழுதியவர்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலாளராக இருந்தபோது, 'இலக்கிய வட்டம்' என்கிற இலக்கிய அமைப்பை நிறுவி, திருச்சியிலுள்ள எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், நவீன இலக்கிய விமர்சகர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்.

1995ஆம் ஆண்டில் அமுதன் அடிகளாரின் குருத்துவ வெள்ளி விழாவின்போது நிறுவப்பட்ட ‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை’, சாதி, சமய, இன வேறுபாடு இன்றி சிறந்ததொரு தமிழ் எழுத்தாளருக்கு, ஆண்டுதோறும் ரூபாய் 15,000/- பணமுடிப்பும், 'அமுதன் அடிகள் இலக்கிய விருது'ம் வழங்கிச் சிறப்பித்தவர். அந்த விருதினைப் பெற்றவர்களில் நானும் ஒருவன்.

இலக்கியப் பணிக்காக 'செந்தமிழ்ச் செல்வர்' (1992) 'இதழியல் செம்மல்' (1993) 'இலக்கியத் தென்றல்' (1994) 'சமத்துவப் பேரொளி' (2005) 'தமிழ் மாமணி' (2005) 'நல்லிணக்கச் செம்மல்' (2006) 'மாமன்னன் இராசராசன் விருது' (2008) 'தமிழ் வளர் தகவர்' (2015) 'புலவர் மாமணி' (2016) போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.

இறுதியாக நாம் மொழிவது... அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்கள் நம் திருச்சியின் பெருமை. அவரோடு நாம் வாழ்வது நமக்குப் பெருமை மட்டுமல்ல... பெரும் பேறு. அடிகளாரை வணங்கி மகிழ்வோம்.






 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 28

 

கவிஞர், கட்டுரையாளர், சிறுகதையாளர், பத்திரிகையாளர், மக்கள் நலம் நாடும் அரசியலியளாளர் (இங்கே அரசியல்வாதி என்கிற வார்த்தை கொச்சையாகிப் போனதால் அரசியலியளாளர் என்கிற புதிய பதம்) எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் தோழர் த.இந்திரஜித் அவர்கள்.

'வர்க்கப்போராளியின் வரலாற்றுச் சுவடுகள்' 'செவலக்காளை' (சிறுகதை) 'வெளிச்சத்தை நோக்கி' (கவிதை) 'காந்திவேடமிடும் கோட்சேக்கள்', 'வல்லரசின் அக்னிச்சாட்டை'  (கட்டுரை) எனப் பல்தள எழுத்தாளர்.

ஆரம்பத்தில் தினகரன் பத்திரிகையில் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றிப் பின்னர் இந்திய பொதுவுடைமை கட்சியின் (சிபிஅய்)அதிகாரப்பூர்வ அரசியல் நாளேடான 'ஜனசக்தி' நாளிதழின் பொறுப்பாசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய சிறப்புடையவர்.

'செவலக்காளை' சிறுகதை நூலில் உள்ள 'சுமை' என்கிற கதை கொங்கு கல்லூரியில் பாடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் செவலக்காளை நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எம்.ஏ, எல்.எல்.பி பட்டம் பெற்று, இலக்கியம், அரசியல் என இரண்டு தளங்களிலும் பயணிக்கும் தோழரின் மக்கள் பயணம் சிறக்க வாழ்த்துவோம்.



 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 27


இளம் எழுத்தாளர், சமூக ஆர்வலர் செல்வி கீர்த்தனா அவர்கள்.

யோகா ஆசிரியரும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி.

இளம் வயதிலேயே தனது தந்தை செய்யும் யோகா பயிற்சியினைப் பார்த்து தானும் யோகா பயிற்சி செய்து அதை நூலாக வெளியிட வேண்டும் என்ற நோக்கில், 'யோகா' 'எளிய உடற்பயிற்சி', 'சூரிய நமஸ்காரம்', உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிகாம் எல்எல்பி ஹானர்ஸ் சட்டப்படிப்பினைப் படித்து வருபவர். தனது தாய், தந்தையுடன் இணைந்து உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதிலேயே எழுத வந்திருக்கும் செல்வி கீர்த்தனா அவர்களின் எழுத்தாற்றல் சிறக்க வாழ்த்துகள்.






 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 26

கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தனிநகைச்சுவைச் சொற்பொழிவாளர் திரு. ப. சங்கரன் அவர்கள்.

இவரது கவிதை நூல் 'காக்கா முட்டை'.

காவேரி எழுத்தாளர் களஞ்சியம் என்கிற அமைப்பின் நிறுவனர். பாரத மிகு மின் நிறுவனத்தின் முத்தமிழ் மன்ற வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.

ஐநூறுக்கு மேற்பட்ட அவைகளில் கவியரங்கம், பட்டிமன்றம், தனிநகைச்சுவைச் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவரது மிகு திறன்களில் ஒன்று நகைச்சுவையுடன் கூடிய மேடைப் பேச்சு.

கவிதை, கட்டுரை, பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகப் போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகள், நினைவுப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

மேலும் மேலுமாய் சிறக்க நமது நல் வாழ்த்துகள்.




திங்கள், 12 டிசம்பர், 2022

 

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 25

 

"நான் சமரசமற்ற நாத்திகன். பொதுவுடைமைச் சிந்தனையன்.

மனித வாசிப்பு மனித நேசிப்பு சுகமானது" என்பதென் கோட்பாடு.

 

"என் எழுத்துகள்

உங்களுக்கானவை.

இதுவே என் நற்செய்தி"

என்பதென் பிரகடனம்.

"காற்றே இனிக் காகிதம்.

நம் ஆயுதம்"

என்பதென் வியூகம்.

ஒரு தாவரம், தன் திரட்சி தாங்காது பிஞ்சிறக்குவது போலத்தான் இலக்கியம் பிறப்பதும்!

"இருதரப்புக்கும் இலாபம் கிடைக்கும் அனுபவங்களுள் கலவி ஒன்று.

கதை மற்றொன்று"

என்கிறான் எனக்குள் ஒருவன்.

"எழுதுவது என் சமூகக் கடமை" எனும் பொறுப்புணர்ந்து இயங்குகிறேன் என்று தம்மை வித்தியாசமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர் திரு. அறிவுச்செல்வன் அவர்கள். மணப்பாறையைச் சேர்ந்தவர்.

இவர் இதுவரை

1. சொட்டக்காரன் கதை 2. மூளை மழை 3. காடுகள்... கூடுகள்... வீதிகள்... வெளிகள்... 4. தொழுகையைவிடத் தூக்கம் மேலானது 5. நானும் நாமும் என ஐந்து கவிதை நூல்களும், 6. சொக்கம்பட்டிச் சாக்ரடீஸ் 7. சைக்கிள் சுனாமி 8. நிறைசூலி 9. முன்கதைச் 'சுருக்' 10. சூழல்கைப் பாவைகள் என

ஐந்து சிறுகதைத் தொகுதிகளும், 11. கூரின கூறு 12. ராவாயி 13. அப்பாவின் மகள்களும் அம்மாவின் மகன்களும் என மூன்று கட்டுரைத் தொகுதிகளுமாக மொத்தம் பதின்மூன்று நூல்கள் எழுதியிருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் இப் பதின்மூன்று நூல்களையும் கடந்த 1-5-22 மேதினத்தன்று மணப்பாறையில் ஒரே மேடையில் ஒருசேர வெளியிட்டதுதான்.

திரு. அறிவுச்செல்வன் அவர்களின் இது போன்ற தனித்துவம் மிகுந்த செயல்களுக்கு நமது வாழ்த்துகளைக் கூறுவோம்.






மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் -பதிவு 24

நாடக ஆசிரியர், சிறுகதையாளர், நாவலாசிரியர், குறும்பட நடிகர் என வியக்கத்தகு எழுத்தாளர் திரு. க. முருகேசன் அவர்கள். துறையூர் பயணியர் மாளிகை அருகில் வாழைப்பழக்கடை வைத்துள்ளார். இவர் சொந்த ஊர் ஒக்கரை. பதினோராம் வகுப்பு வரை படித்துள்ளார்.

1980ல் 'நீலா' என்ற பகுத்தறிவுச் சிந்தனை நாடகம், 1982ல் 'உரிமை கீதம்' என்ற நாடகம், 1984ல் 'கண்ணீரே கதை' என்ற நாடகம் என்பன இவரது நாடக ஆக்கங்கள்.

'உண்மை' என்கிற பகுத்தறிவு இதழில் பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகள், 'மானுடம்' இதழில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

இவரை நாயகனாக வைத்து திரு. சுரேஷ் ஆறுமுகம் அவர்கள் இயக்கிய, பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறும்படம் 'பழக்கடை முருகேசன்' புகழ்பெற்ற திரை இயக்குனர்களின் பாராட்டைப் பெற்றது.

இவர் 2010ல் எழுதிய 'செங்குருதி' நாவல் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள முத்தமிழ் கலை பண்பாட்டு மையத்தின் முதல் பரிசைப் பெற்றுள்ளது. 2012ல் 'பச்சைமலைக் குயில்' சிறுகதைத் தொகுப்பு கார்முகிலோன் நினைவு பரிசு பெற்றது. 2017-2018ல் 'மாண்புரு மனிதர்கள்' நாவல் தமிழ்நாடு அரசு ஆதி திராவிட நல வாரியத்தில் இயங்கும் கலை பண்பாட்டு மையத்தின் முதல் பரிசினைப் பெற்றது. 2022ல் திருச்சி புத்தகக் கண்காட்சியில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

'தன்மானத் தளபதி', 'நேற்று இன்று' என்கிற இரண்டு நாவல்கள் விரைவில் வெளியிடும் நிலையில் உள்ளது. துறையூர் திரு. க. முருகேசன் அவர்களின் நாவல்கள் விரைவில் வெளிவந்து தடம் பதிக்க வாழ்த்துவோம்.







 

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 23

கவிஞர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், கல்வி சார் பயிற்சியாளர், கருத்தாளர் மற்றும் லால்குடி அறம் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் அமைப்பாளர் திரு. எஸ்.டி.ஜி. இளஞ்சேட்சென்னி அவர்கள்.

இலால்குடி வட்டம், வாளாடியைச் சேர்ந்த எஸ் டி ஜி. இளஞ்சேட் சென்னி அவர்கள் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர். கடந்த ஓராண்டு காலமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

துவக்கத்தில் பாக்யா இதழில் கவிதை எழுத ஆரம்பித்தவர் பிறகு முத்தாரம், கல்கண்டு, ராணி, குங்குமம், குமுதம், ஆனந்த விகடன், போன்ற வார இதழ்களில் கவிதைகளும், நகைச்சுவைத் துணுக்குகளும் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக வெளிவரும் செய்தி இதழ், நாளேடுகளின் இணைப்புகளான தினத்தந்தி குடும்பமலர், தினமலர் சிறுவர் மலர் ஆகிய இதழ்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

கன்னிக்கோயில் திரு. ராஜா அவர்களின் 'தேநீர் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ', வாசகன் பதிப்பகத்தின் மூலம் 'கவித்துளி' என்கிற தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றோடு திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் மற்றும் பொதிகை தொலைக்காட்சியில் கல்வி சார் நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கிறார்.

போல்ட் விருது, அன்பு பாலம் விருது, கவிச் சிந்தனை சிற்பி விருது, ஆற்றல் மிகு ஆசான் விருது. அறப்பணிச் செம்மல் விருது போன்ற பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர். கூடிய விரைவில் கவிதை நூலும், ஹைக்கூ நூலும் வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெற நாமனைவரும் வாழ்த்துவோம்.