இம்மாத (மார்ச் 2015) 'அம்ருதா' இதழில் 'தஞ்சை இலக்கிய வட்டம்' தோழர்
சண்முக சுந்தரம் அவர்கள் எமது ஆய்வு நூலான "திராவிட நாடும் தேசிய இன
விடுதலையும்" நூலுக்கு எழுதியுள்ள விமர்சனம்.
புதைந்துபோன தமிழியம்
கீழைத்தீ படைத்திட்ட பாட்டாளியின் மற்றுமொரு
ஆய்வுப் படைப்பு "திராவிட நாடும் தேசிய இன விடுதலையும்". ஆம்பிரம்
பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.கீழவெண்மணி நிகழ்வுக்குப் பிறகு ஆரம்பிக்கும்
கீழைத்தீ நாவலின் கதை இறுதியில் அதற்குக் காரணமாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவை
வதம் செய்யும் படலத்தோடு முடிந்திருக்கும்.அந்த வதம் கீழத்தஞ்சையின்
நிலப்பிரபுத்துவக் கொடுமைக்கும் சேர்த்துதான்.கீழவெண்மணிக்குப் பிறகு நம்பிக்கை
இழந்திருந்த,மிகப்பெரும் கோபத்தின் உச்சத்திலிருந்த
தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்களின் வாழ்க்கையை மிகவும் நேர்த்தியாக
பின்னியிருப்பார் கீழைத்தீயில். அவரது சமீபத்திய ஆய்வு நூல் "திராவிட நாடும்
தேசிய இன விடுதலையும்". ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் அகப்பட்டு
நசுங்கிக் கிடக்கும் தமிழ்தேசியத்தைப் பற்றி விரித்துரைக்கும் நூலாக
வெளிவந்துள்ளது. நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது போன்று 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக
வைத்து ஒரு நாவல் எழுதத் திட்டமிட்டதாகவும் அதற்கான தரவுகளைக் கொண்டு, நாவல் வருவதற்கு முன்னர் இவ்வாய்வு
நூலை எழுதி முடித்ததாகவும் அவர் கூறுகிறார். நிதர்சனமான நிகழ்கால
தமிழ்தேசியத்தையும்,கடந்த கால வரலாற்றில் தவிர்க்க முடியாத
பாத்திரமாக விளங்கிய திராவிடத்தையும் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டுப் பார்க்கும்
நூலாசிரியர், நூலின் இறுதியில் அவர் காண விழையும்
தமிழ்தேசியம் சாதிப்பிரிவினைகளற்ற,பெண்
அடிமைத்தனமற்ற,வர்க்கபேதமற்ற ஒன்றாகத்தான் இருக்க
முடியும் என அவர் கனவு காண்கிறார். அதாவது பெரியார் இயங்கிய தளங்களில் தான் வந்து
நிற்கிறார். இன்று சமூக ஊடகங்களிலும்,வலைத்தளங்களிலும்
மிக வலுவாக பேசப்படும்,விவாதிக்கப்படும் ஒன்றாக திராவிடம்,தமிழும்தான் இருக்கின்றன .திராவிட இனம்
என்ற ஒன்று உண்டா என்பது தொடங்கி திராவிடம் தமிழனுக்கு நன்மை செய்ததா,தமிழ்த்தேசியம் சாதிக்குமா என்பது வரை
விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.முற்றுப்பெறாத விவாதங்கள் இவை.
தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக வாதிடும் நண்பர்கள் பெரியாரை முதன்மையாக வம்புக்கு
இழுப்பது தொடங்கி பெரியாரை தமிழுக்கு,தமிழர்க்கு
விரோதி என்னும் இறுதிக்கருத்துக்கு வந்து நிற்கிறார்கள்.எவ்வளவு பெரிய தமிழ்தேசிய
வாதத்தினாலும் பெரியாரின் வரலாற்றுப் பாத்திரத்தை புறந்தள்ளிவிட முடியாது.அதைப்போல
திராவிடநாடு வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திராவிட
இயக்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது பதவி சுகத்திற்காக கச்சத்தீவு முதல்
ஈழத்தமிழர்களின் உயிர் வரை காவு கொடுத்துவிட்டு தமிழர்களுக்கு வெறும் கையையும், தங்கள் சொந்தங்களுக்கும்,நட்புக்களுக்கும் தங்கப்புதையலையும்
சேர்த்து வைத்திருக்கும் அவலத்தைப் பார்த்து அவர்களின் மீதான தமிழ்மக்களின் கோபம்
இயல்பாக அவர்களது பாரம்பரிய இயக்கமான திராவிட இயக்கத்தின்மீது விழுவதையும் நம்மால்
தவிர்க்க முடியவில்லை.
திராவிடத்தையும்,தமிழியத்தையும் தனது ஆய்வின் பொருள்களாக எடுத்துக்கொண்டுள்ள ஆசிரியர்
எவ்வித பாகுபாடுமின்றி,விருப்பு வெறுப்பின்றி தன்னுடைய ஆய்வுகளை
நூலில் முன் வைக்கிறார்.நூலின் முதல் இயலில் ஆசிரியர் கோசாம்பியின் வார்த்தைகளை
மேற்கோள் காட்டுகிறார்: " நம் முன்னால் இருக்கிற மிகப்பெரிய கடமை வரலாற்றை
எழுதுவது அல்ல.எழுதப்பட்ட வரலாற்றைத் திருத்தி எழுதுவதுதான்".
வரலாற்றுக்குள்ளிருந்து வரலாற்றையும்,உண்மைக்குள்ளிருந்து
உண்மைகளையும் தோண்டி எடுத்து வெளிக்கொணர வேண்டியது மக்கள் விடுதலைக்கான
ஆய்வாளர்களின் பணி என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இந்தியாவின் ஒரு தேசிய இனமாக
விளங்கும் தமிழர்களும்,தமிழ்நாடும் தங்களுடைய கடந்தகால
வரலாற்றை மிகத்தெளிவாக ஆராய்ந்து தெளிந்துகொள்ளவேண்டும்.அக்கடமையை மிகத்தெளிவாகச்
செய்திருக்கிறார் ஆசிரியர் பாட்டாளி.இது திராவிடத்திற்கு ஆதரவான நூலா, அல்லது தமிழ்தேசியத்திற்கு ஆதரவான நூலா
என்று தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.இது ஒவ்வொரு தமிழனுக்கும்
தேவைப்படும் ஆக மிகச்சிறந்த நூல்.தமிழ்,திராவிட
ஆய்வாளர்களுக்குத் தேவைப்படும் சிறந்த வழிகாட்டி. பிரபஞ்சத்தின் தோற்றம் முதல்
தனது ஆய்வைத் தொடங்கி,ஆப்பிரிக்க கண்டத்து மக்களின்
இடப்பெயர்ச்சி,தமிழர்களின் தொல்வாழிடம்,மனிதகுலத்தின் பல்வேறு படிநிலை
வளர்ச்சிகளையும்,அரசு என்பதன் தோற்றுவாயையும் ஆசிரியர்
விளக்கிச்செல்கிறார்.அடுத்து தேசிய இனம் குறித்த வரையறைக்குச்
செல்கிறார்.தேசியஇனம் என்று வரையறுப்பதற்கு பல்வேறு அலகுகள் தேவைப்பட்டாலும் தேசிய
இனம் என்பது மொழிவழி இனமே என்கிற தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தை நமக்கு தந்தது
மார்க்சியமே என்கிறார்.இத்தகைய தெளிவான வரையறுப்புகளை முன்னேற்பாடுகளாகக் கொண்டு
திராவிடம்,ஆரியம்,தமிழியம் என்பது என்ன என்று ஆசிரியர் ஆராயப்புகுகிறார்.
கார்ல் மார்க்ஸும்,எங்கெல்சும் மனிதகுலத்தின் ஒவ்வொரு
கட்டத்தையும் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற
புதியதொரு கோட்பாட்டை மனிதகுலத்திற்கு வழங்கினார்கள்.அதுபோல வரலாற்று பொருள்முதல்
வாதத்தோடு தமிழின் இலக்கண,இலக்கிய நூலான தொல்காப்பியம் வழங்கும்
திணைமவியலையும் இணைத்து தமிழ் மண்ணுக்கேற்ற ஆய்வை நிகழ்த்த "தமிழிய
வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாடு" என்னும் புதிய ஆய்வுக்கூற்றை
ஆசிரியர் முன்வைக்கிறார்.இக்கோட்பாட்டின் வழி தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம்
வழி தமிழர்களின் தொல் வரலாற்றை ஆசிரியர் பகுத்தாய்கிறார்.தொல்தமிழர்களின்
வாழ்விடம்,சமூகப் பண்பாட்டு நிலைகளையும் மிக
எளிமையாக விளக்கிச் செல்கிறார்.தமிழர்களின் சுய ஆளுமையையும் அவர்களின் இன்றைய
அடிமைத்தனத்தையும் விளக்குகிறார்.அடுத்த இயலில் ஆரியர் குறித்த தெளிவை நமக்கு
ஏற்படுத்துகிறார்.வேதங்களின் துணை கொண்டும்,தமிழர்களின்
அகம்,புறம் நூல்கொண்டும் ஆரியர்கள் என்பவர்
யார் என்று கோடி காட்டுகிறார்.ஆங்கிலேய மொழி ஆய்வாளர்கள் தொடக்கத்தில் தமிழைவிட
சமஸ்கிருதத்தோடு காட்டிய நெருக்கம் காரணமாக அம்மொழி மேலை நாடுகளில் மிகப்பரந்த
செல்வாக்கைப் பெற்றது.சமஸ்கிருத மொழியில் இருக்கக்கூடிய வேதங்கள்,புராணங்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கின்றனர்.தங்கள் மொழியின் ஒரு பிரிவாக சமஸ்கிருதத்தைக் கருதத்
தொடங்கினர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஒப்புமொழித்துறைப் பேராசிரியராக
மாக்ஸ்முல்லர் நியமிக்கப்படுகிறார்.சமஸ்கிருத மொழி சார்ந்தும் ஐரோப்பிய மொழிகள்
சார்ந்தும் ஒரு இனவியல் கோட்பாட்டைக் கட்டமைப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை அவர்
முன்னெடுக்கிறார். ஆரியம் என்ற ஒன்றை இப்படியாகத்தான் அவர்
கட்டமைக்கிறார்.இப்படித்தான் ஆரியம் மேலாண்மை பெறுகிறது.ஆரிய இனம் என்பது மாக்ஸ்
முல்லரால் இப்படியாகத்தான் தோர்றுவிக்கப்படுகிறது.அதன் மொழியான சமஸ்கிருதம்
இந்தியாவின் மூலமொழியாக மாற்றப்படுகிறது.மாக்ஸ்முல்லரின் புகழ்பெற்ற மேற்கோளை
ஆசிரியர் தருகிறார்: " நான் ஆரியன் என்று சொன்னால் நான் அவர்களது ரத்தம்,எலும்புகள்,முடி அல்லது மண்டையோடு முதலியவற்றைக்
குறிக்கவில்லை.அம்மொழி பேசுபவர்களைத்தான் குறிக்கிறேன் என்று மறுபடி மறுபடி
அறிவித்துவிட்டேன்."
திராவிடர் என்னும் சொல்லின் வரலாற்றை ஆசிரியர்
சுய விருப்பு வெறுப்பின்றி மிக விரிவாக அலசி ஆராய்கிறார்.அதற்காக அவர்
பட்டிருக்கும் சிரமங்களை நூலை படிக்கும்போது உணர்ந்துகொள்ளமுடியும்.பழந்தமிழ்
இலக்கியங்களில் திராவிடர் என்னும் சொல் இல்லை.ஆரியர் என்னும் சொல் சங்க
இலக்கியங்களில் காணப்படுவது போல திராவிட என்னும் சொல் காணப்படவில்லை.திரவிட,திரவடி,திரவிடம்,திரமிள என்னும் அதன் பக்கச் சொற்களும்
இல்லை என்று ஆசிரியர் தெளிவாக நிறுவுகிறார்.திராவிடம் என்னும் சொல் 17ம் நூற்றாண்டில்
தாயுமானசுவாமிகளிடம்தான் நாம் காணமுடிகிறது.தமிழ் மொழியில்தான் இல்லை.பிற
மொழிகளில் இச்சொல் புழங்கியிருக்கிறதா? என்று
ஆராய்ந்து பார்க்கும் ஆசிரியர் அச்சொல் சமஸ்கிருதம்,காந்தம்,வடநூல்களில் நிரம்பி வழிகிறது
என்கிறார்.தமிழ் என்னும் உச்சரிப்பு வராத தமிழ்நாட்டைச் சாராத மக்கள் தமிழ்,த்ரமிள,த்ரமிட,த்ரவிட,த்ராவிட என்று உச்சரித்தார்கள் என்ற பாவாணரின் முடிவுக்கு ஆசிரியர்
வருகிறார்.அதை நிறுவுவதற்காக பல்வேறு புவியியல் பிரதேசங்களின் ஒலிப்பியல்
கூறுகளையும் அவர் ஆய்வுக்கு உட்படுத்தும் விதம் ஆசிரியரின் மேதைமையைக்
காட்டுகிறது.தமிழ் என்பதை உச்சரிக்கத் திறனற்றவர்களினால்தான் தமிழ் திராவிடம்
என்றானது.தமிழைத் தமிழ் என்று உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களுக்கு,தமிழ்ப்புலவர்களுக்கு திராவிடம் என்கிற
வார்த்தை தேவைப்படவில்லை.தமிழைத் தமிழ் என்று ஒலிக்கத் திறனற்ற வேற்றவர்கள்
குறிப்பாக ஆரியர்கள் தமது சமஸ்கிருத மொழியில் திராவிட என்று ஒலித்து அதை நிலை
நிறுத்தினார்கள் என்று தனது ஆய்வு முடிவுகளை ஆசிரியர் விளக்குகிறார். மேலும்
மானுடவியல் நோக்கிலும் தென்னிந்தியர்கள்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள் என்று
தெளிவுபட நிறுவுகிறார்.
களப்பிரர்கள்,பல்லவர்கள் குறித்த வரலாற்று ஆய்வையும் ஆசிரியர்
முன்வைக்கிறார்.ஆய்வின் மூலம் களப்பிரர்களும்,பல்லவர்களும்
தமிழ்நாட்டிற்கு அயலார்களே.களப்பிரரின் ஆட்சிமொழி பாலி.பல்லவர்களின் ஆட்சிமொழி
வடமொழி.அவர்கள் தமிழை என்றும் ஆதரித்தது இல்லை.அவர்கள் என்றும் தங்களை
திராவிடர்கள் என்று அழைத்துக் கொண்டது கிடையாது.பிற்காலத்திய வரலாற்று
ஆசிரியர்கள்தான் அவர்களை திராவிடர்கள் என்று வலிய அழைத்தார்கள் என்றும் ஆசிரியர்
தெரிவிக்கிறார்.பேராசிரியர் த.செயராமன் முன்வைக்கும் கூற்றான "திராவிடர்கள்
என்பவர்கள் தென்னிந்தியப் பார்ப்பனர்களே" என்பதை நகைப்புக்கிடமானது என்று
கூறுகிறார்.இப்படியாக பல்வேறு ஆய்வுகளின் முடிவில் ஆசிரியர் கீழ்க்காணும்
முடிவுகளுக்கு வந்து சேருகிறார்: "வரலாற்றில் முதன்முதலில் ஆதிமனிதன் தோன்றிய
இடமான ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிய
இனக்குழுக் கூட்டம் ஒன்று,அந்தமான் நிக்கோபார் வழியாக
தென்னிந்தியாவிற்குள் நுழைந்து வாழ்ந்து,அங்கிருந்து
வட இந்தியப்பகுதிகளுக்குள் விரிவடைந்து,வளர்ச்சிப்போக்கில்
திருந்தாத மொழி பேசி,மெல்ல மெல்ல நாகரிகமடைந்து,ஒரு திருத்தமான வாழ்வினை நோக்கி
நகர்ந்தது.அதன் தொடர்போக்கில் திருந்தாத மொழி வளர்ச்சியடைந்து திருந்திய தமிழ்
மொழியாகி அந்தத் தமிழ் மொழியினைப் பேசிடும் மக்கள் கூட்டம் தமிழர்கள் ஆயினர்"
இதற்கு மொகஞ்சதா, ஹரப்பா போன்ற சிந்து சமவெளி ஆய்வுகளை
நமக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்."தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய தமிழர்
கூட்டம் வடக்கிலிருந்து உள்நுழைந்த ஆரியக்கூட்டத்தோடு கலப்புற்று,பேசுமொழி சிதைவுற்று,சிதைவுற்று வேறு பல மொழிகளாகத்
திரிந்து,அம்மொழிகளைப் பேசிடும் வேறு பல
இனங்களாகப் பிளவுபட்டு,பிரிவுபட்டு,தொடர்ந்த ஆரிய
ஆக்கிரமிப்பினால்தென்னிந்திய ஆக்கிரமிப்பினால் தென்னிந்தியப்ப்பகுதியில், வட வேங்கடம் முதல் தென்குமரியாயிடைத்
தமிழ் கூறு நல்லுலகமாகத் திடப்பட்டது"."ஆக வரலாற்று நெடுகிலும்
தமிழர்கள் இருந்திருக்கிறார்களே தவிர,தமிழ்
இனம் மூல இனமாக இருந்து சிதைவுற்று,சிதைவுற்று
வேறு பல இனங்களாக,கிளைகளாகப் பிரிந்திருக்கிறதே தவிர,அந்த பிரிவுபட்ட இனங்களும்,பேசு மொழியால் அந்தந்த மொழிவழி இனமாக
வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர,ஒருபோதும் திராவிடர் என்கிற கூட்டு இனம் அல்லது தனித்த இனம்
இருந்ததில்லை என்பதே நமது முடிவு.வரலாறு நமக்குக் காட்டும் முடிவு.இதைத் தமிழ்
இலக்கியம் நமக்குச் சொல்கிறது.ஒலிப்பியல் மற்றும் அமைப்பியல் நமக்குச்
சொல்கிறது.மானுடவியல் நமக்குச் சொல்கிறது.உடற்கூற்றியல் மற்றும் மரபணுக்
குறியீடுகள் கொண்ட நவீன ஆய்வுகளின் முடிவுகள் நமக்குச் சொல்கிறது".என்று
ஆசிரியர் தெளிவுபட நிறுவுகிறார். மூலத்தமிழினம் என்பது மரபினம்.அதிலிருந்து
கிளைத்த தேசிய இனங்கள்தான் தமிழ்த்தேசிய இனம்,கன்னடத்
தேசிய இனம்,தெலுங்குத் தேசிய இனம்,மலையாளத் தேசிய இனம் என்பவை.நிலைமை
இப்படி இருக்க இதில் எங்கிருந்து வந்தது திராவிட இனம்?திராவிட இனம் என்கிறதொரு இனம்
வரலாற்றிலும் சரி,தேசிய இனங்களின் வரைவியல்
அடிப்படையிலும் சரி இருந்ததே இல்லை என்பதை ஆசிரியர் உறுதிபடக்
கூறுகிறார்.அப்படியானால் இல்லாத திராவிடம்,திராவிடர்
எப்படி நிலை பெற்றது.திடப்பட்டது?
திராவிடர் ஒரு அரசியற் சொல்லாடலே என்னும்
தலைப்பில் ஆசிரியர் சொல்லவரும் கருத்துகள் மிக முக்கியமானவை.இடைக்காலத்தில்
தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் நிலை பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர்,அங்கு நிலவிய அந்நிய ஆட்சியையும் அதன்
விளைவாக ஏற்பட்ட சமூக,மொழி,பண்பாட்டுக் கலப்புகளையும் விரிவாக எடுத்துக்கூறுகிறார்.வடமொழி
ஊடுருவலால் தமிழ்மொழியும் கலப்படமானது.அதுபோலவே தமிழ்ச்சமூகத்தின் சமயம் என்பது
ஆதி இனக்குழு சமூகத்தின் சமய நம்பிக்கைகளைப் போல இயற்கை வழிபாடும்,அதற்குப் பின்னர் காளி,கொற்றவை வழிபாடும் இருந்தது.ஆரிய
இனக்கலப்பால் தமிழர்களின் ஒவ்வொரு சமய,சமூக,பண்பாட்டு நகர்வுகளிலும் பார்ப்பனியம்
ஆ ட்கொண்டது என்று ஆசிரியர் விளக்குகிறார்.தொடக்கத்தில் செய்யும் தொழிலைக் கொண்டு
பிரிந்திருந்த தமிழ்ச்சமூகம் பின்னர் ஆரியத்தின் தாக்கத்தினால் பிறப்பின் அடிப்படையிலான
சாதிய சமூகமாக மாறியது.தென்னாடும்,தென்னாட்டு
மக்களும் சமுதாயத்தில் ஆரியனுக்கு அடிமையாயும்,பொருளாதாரத்தில்
வடநாட்டானுக்கு அடிமையாயும்,அரசியலில்
ஆங்கிலேயனுக்கு அடிமையாயும் இருந்தது.இருந்தார்கள் என்று ஆசிரியர்
விளக்குகிறார்.சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக்கல்லூரியில் இடம் என்ற
நிலைமையில் பார்ப்பனர்கள் மிக அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்தது பற்றியும்,ஆங்கிலக் கல்வியில் முன்னணியில் இருந்த
பார்ப்பனர்கள் அதிக எண்ணிகையில் நீதிபதிகளாக நியமனம் பெற்றார்கள் என்பது
குறித்தும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.சமூகத்தின் சகலத்திலும் பார்ப்பனர்கள்
உச்சத்திலிருந்தாலும் மிகக்குறைந்த அளவிலான பார்ப்பனரல்லாதவர்கள் ஜமீன்களாகவும்,சமஸ்தான அரசர்களாகவும்,வணிக முதலாளிகளாகவும் இருந்தமையால்
பார்ப்பனர்களின் அதிகாரம் பார்ப்பனரல்லாதவர்கள் மத்தியில் நெருடலை தோற்றுவிக்கிறது.இச்சூழலில்
பார்ப்பனர்,பார்ப்பனரல்லாதார்,சூத்திரர் போன்ற சொற்றொடர்கள்
பயன்படுத்தப்படுகின்றன.ராவ் பகதூர் எம்.சி.ராஜா தன்னுடைய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' என்கிற நூலில் இவ்வாறு
குறிப்பிடுகிறார்: "சூத்திரர் என்று கூறிக்கொள்ளப்பிடிக்காத பிராமணரல்லாத சாதி
இந்துக்கள் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்".இப்படியாக
பார்ப்பனரல்லாதார் இயக்கம் திராவிட இயக்கமாக வளர்ந்தவிதம்,சூத்திரர்கள் திராவிடர்களாக மாறியவிதம்,தாழ்த்தப்பட்டவர்கள் ஆதி திராவிடர்களாக
மாறியவிதம் குறித்து பல வரலாற்றுத் தரவுகளுடன் மிக விரிவாக ஆசிரியர்
எடுத்துரைக்கிறார்.நீதிக்கட்சி திராவிடர் கழகமான வரலாற்றையும் விவரிக்கிறார்.இட
ஒதுக்கீட்டுக்கு பங்காற்றிய பல அறிஞர்களை நினைவு கூர்கிறார்.பெரியாரின் அரசியல்
வரலாற்றையும் நினைவு கூரும் ஆசிரியர் 1917ம்
ஆண்டில் பெரியார் ஈரோட்டின் நகராட்சித்தலைவராக இருந்தபோதுதான் "கொங்கப்
பறைத்தெரு" என்பதை "வள்ளுவர் தெரு" எனப் பெயர் மாற்றம் செய்தார்
என்னும் அரிய தகவலையும் தருகிறார்.பெரியார் மீதான தலித் இயக்கங்களின்
விமர்சனத்திற்கு பதிலுரைப்பதாக இந்நிகழ்வு அமைந்துவிடுகிறது.வரலாற்று சிறப்பு வாய்ந்த
செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டைப்பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.1938 செப்டம்பரில் நடந்த சென்னை கடற்கரைப்
பொதுக்கூட்டத்தில் பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று
முழங்குகிறார்.மொழிப்பிரச்னையில் தனித்தமிழ்நாடு கேட்கும் பெரியார் அப்பிரச்னை
தீர்ந்ததும் திராவிடத்தைக் கையில் ஏந்துகிறார்.நாட்டுப்பிரச்னை என்று வரும்போது
தமிழினம்,மலையாள இனம்,தெலுங்கு இனம், கன்னட இன மக்கள் எல்லாம் ஒன்று
சேர்ந்து அல்லது வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட,சென்னை
ராஜதானி என்றழைக்கப்பட்ட,சென்னையை அரசியல் மையமாகக் கொண்டு
வாழ்ந்துவந்த அனைத்து இன மக்களுக்குமான விடுதலை என்று வருகிறபோது திராவிட நாடு
திராவிடருக்கே என்று குரல் கொடுத்தார் பெரியார்.பிரிட்டிஷ் இந்தியாவிலோ அல்லது
பார்ப்பன பனியாக்கள் தலைமையிலான சுதந்திர இந்தியாவிலோ அப்படியான எதன் தலைமையின்
கீழும் அடிமையாய் இருக்க ஒரு நாளும் ஒப்பவில்லை பெரியார்.மிகத் தெளிவாக,துணிச்சலாக தனித் தமிழ்நாடு கேட்டார்.
"தமிழ் என்பதும் தமிழர் கழகம் என்பதும் மொழிப்போராட்டத்திற்குத்தான்
பயன்படுமேயொழிய இனப்போராட்டத்திற்கோ,கலாச்சாரப்போராட்டத்திற்கோ
சிறிதும் பயன்படாது"
"திராவிடத் தேசம் என்பது அவசியப்பட்டால் திராவிட மொழிவாரியான மாகாணங்களைக்கொண்டதாக
இருக்கும்.உதாரணமாக பிரிட்டனானது ஒரு தேசமாகவும்,ஒரு ஆட்சியாகவும்,ஒரு
சமயம் ஒரே சமுதாயக் கொள்கை கொண்டதாகவும் இருந்தபோதிலும் வேல்ஸ் இங்கிலாந்து,ஸ்காட்லாந்து,அயர்லாந்து ஆகிய மாகாணங்கள் பெரிதும்
மொழிவாரியாக இருப்பதுபோலும் மற்றும் பல மேல்நாடுகளில் இருக்கும் உள்
மாகாணப்பிரிவுகள் போலும்,திராவிடம் என்ற தலை தேசத்தில் மொழிவாரி
மாகாணங்கள் இருக்கும்".
ஆக தென்னிந்தியாவை மையப்படுத்திய தனிநாடாக
ஆக்கி,திராவிடநாடு என்று தனி அரசு நிறுவி,அதற்குள் தமிழ்,தெலுங்கு,கன்னட,மலையாள தேசிய இனங்கள் கொண்ட மொழிவாரி மாகாணங்கள் கொண்ட கூட்டமைப்பாக
இருக்கும் என்றெல்லாம் பெரியார் வரையறுத்தார்.ஆக மொழிப்பிரச்னை என்று வரும்போது
தமிழ்நாடு தமிழருக்கே என்று எழுந்த முழக்கம் நாட்டுப் பிரச்னை என்று வரும்போது
அன்றைய கால அரசியல் தேவையை ஒட்டி திராவிட நாடாக எழுந்தவிதத்தை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக்கழகமாகி,தேர்தலில்
நின்று ஆட்சிபிடித்து திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு இப்போது கழகங்கள் நிலை
என்ன என்பது வரை ஆசிரியர் விரித்துரைக்கிறார்.இந்த நூல் மிகச்சிறந்த ஆய்வு நூல்,திராவிட,தமிழிய சொல்லாடலைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் அவசியம்
பயன்படும்.அதற்கும் மேலாக இன்றைய திராவிட எதிர் தமிழிய விவாதங்களை மிகவும்
நாகரிகமாகவும்,நட்பு முரண் ரீதியாகவும் நடத்திச்
செல்வதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.பெரியார் ஒரு விவாதப்பொருளாகிவிட்டது
குறித்து பெரியாரே கவலைப்படப்போவதில்லை.அது பற்றி நமக்கு வருத்தம்
இருக்கமுடியாது.ஆனால் பெரியாரின் சமூகப் பங்களிப்புகளையும்,அரசியல் பங்களிப்புகளையும்,சூத்திரர்களின் இழிநிலையைப் போக்க அவர்
ஆற்றிய மிக முக்கிய வரலாற்றுப் பாத்திரத்தையும் தமிழ்த்தேசியவாதிகள் யாரும்
எளிதில் மறுத்துவிடமுடியாது.பெரியாரைப் பற்றி விவாதம் செய்ய நிறைய இருக்கிறது.அதே
நேரத்தில் அவர் செயல்பட்ட வரலாற்றுச் சூழலையும் மனதில் கொள்ளவேண்டும்.
