வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

வியாழன், 24 டிசம்பர், 2015






தோழர்கள் நீண்ட நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்த 
எமது 'கீழைத் தீ' (பின் வெண்மணி) நாவலின் இரண்டாம் பதிப்பு 
'புலம்' வெளியீட்டில் நாளை வெண்மணி நாளில்... 
வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில்... 
தோழர் புலம் லோகநாதன் அவர்கள் வெளியீடுகிறார்.

புதன், 2 டிசம்பர், 2015




கவிஞர் அகவி அவர்களின் தொப்புள் புள்ளி கவிதை நூலுக்கான எமது மதிப்புரை கீற்றுவில்.......
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/29788-2015-12-02-07-50-10


இரண்டாவது தொப்புள் கொடி
                                                                                                - பாட்டாளி
          நதி ஒரே திசையில்தான் நகர முடியும். நதிப்படகு இரு திசைகளிலும் நகரும். நதி மீன் நான்கு திசைகளிலும் நகர முடியும். ஆனால், அதை ரசித்துக் கொண்டிருக்கும் மனிதனின் மனமோ எல்லா திசைகளிலும் நகரும். இது பெர்க்ஸனின் உருவகக் கதை தரும் செய்தி. இதை நாம் படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். சில எழுத்துக்கள் ஒற்றைத்தனமாய் அமைந்திருக்கும். ஒரு சில படைப்புகள் கொஞ்சம் கூடுதலாகச் சென்று படைப்பாளி, வாசகன் என்ற இருமை அனுபவத்தைக் கோரும். சாத்தியப்படுத்தும். வேறுசில படைப்புகள் நாலாபுறமும் விசிறியடித்து பன்முகப் படைப்பாய் விகசிக்கும். ஆனால், ஒரு உன்னதப் படைப்பு என்பது எல்லா வாசகனுக்கும் எல்லாபுறமும் எல்லையற்று விரியும் அனுபவத் தொகுப்பாய் காலகாலத்தையும் விஞ்சி நிற்கும்.
          பொதுவாக படைப்புப் புலங்களில் தலைமை வகிப்பது கவிதைகள்தான். ஒரு தேர்ந்த சிறுகதையோ அல்லது ஒரு புதினக் காட்சியோ அல்லது அந்தப் புதின மாந்தரின் பாத்திரத்தின் ஒரு செய்கையோ நாம் கவிதைபோல என்று விளிப்பதுண்டு. வியப்பதுண்டு. ஆக, கவிதை என்பது காலகால உன்னதம். தீவிர மன எழுச்சியின் சன்னதம். எம்மைப் பொறுத்தவரை நான் எழுதுவது கொஞ்சம். ஆனால், படிப்பது நிறைய. அதன் வரிசையில் சமீபத்தில் வெளியான கவிஞர் அகவியின் 'தொப்புள் புள்ளி' என்கிற கவிதை நூலைப் படித்து முடித்தேன்.
          'தொப்புள் புள்ளி' தலைப்பு எம்மை வெகுவாக யோசிக்க வைத்தது. பொதுவாக இன்றைய வழக்கில் தொப்புள் என்றும் நல்ல தமிழ்ச் சொல்லாக 'கொப்பூழ்' என்று இலக்கியங்களிலும் விளிக்கப்படுகிற தொப்புள், தாய்க்கும் நமக்கும் உறவுக்கொடி, உணவுக்கொடி, உணர்வுக்கொடி, நம் உருவ வடிவமைப்புக் கொடி என மகத்தானதொரு மையம் ஆகும். அந்த மகத்தானதொரு மையத்தை விரசமாக்கி விகாரமாக்கி, சீரழித்து, சின்னா பின்னமாக்கி, அதை ஒரு பாலியல் பண்டமாக்கிய பெருமை நம் சினிமாக்காரர்களுக்கு உண்டு. பம்பரம் விடுவதும், மணல் அள்ளிப் போடுவதும், ஏன் உச்சமாய் ஆம்லேட் போடுவதுமாய்... விரசமாக்கி, விகாரமாக்கி, சீரழித்து, அதை ஒரு பாலியல் பண்டமாக்கிய பெருமை நம் சினிமாக்காரர்களுக்கு உண்டு.
          ஆனால், உண்மையில் நமது கலை இலக்கியங்களிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் மிக உயர்வாகவே, மரியாதையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆன்மீக வழிபாட்டு மையங்களிலும் கூட இதன் தாத்பர்யம் முகாமையாகியிருக்கிறது. ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும், அதன் எதிரே செம்மாந்து காணப்படும் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று நாம் வணங்கக்கூடாது என்றொரு விதி உண்டு. ஏன்? ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான் கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயிர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக்கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இது கோயிற் கட்டுமான இடவமைப்புக் கலையின் விதிகளுள் ஒன்றாகும்.  அதன்படி இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே, நாம் மூலவருக்கும் நந்திக்கும் இடையே குறுக்கே நின்று வணங்கக் கூடாது என்கிறது கோயிலமைப்பு விதி.
          நம் தமிழ் இலக்கியங்களில் பொருநராற்றுப்படையில் ஒரு பாடினியின் வடிவழகை வர்ணிக்கும்போது "நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்" என்று குறிப்பிடப்படுகிறது. "நீரிடத்துத் தோன்றும் சுழிபோன்ற இலக்கணம் பொருந்திய தொப்புள்" என்பது இதன் பொருளாகும். சீவக சிந்தாமணியில் விசயையின் தோற்றம் பற்றிக் குறிப்பிடுகிறபோது "அங்கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்" என்று தொப்புள் வர்ணிக்கப்படுகிறது. ஒரு பெண்ணிற்கு தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அந்தக்காலத்து நம்பிக்கை. இடது பக்கமாக சுழித்திருந்தால் உகந்தது அல்ல என்றும் நம்பப்பட்டது. தொப்புள் என்பது பெண்களுக்கு மட்டுமா என்ன? ஆண்களுக்கு இல்லையா? இலக்கியத்தின் கண்களுக்கு அது படவில்லையா? என்று கேள்விகேட்டு அவசரப்படக்கூடாது. நாச்சியார் திருமொழி ஆண்களுக்கும் அழகிய கொப்பூழ் உண்டு என்று சொல்கிறது "குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர் எம்மானார்" என்று "அவன் குழல் அழகு, வாய் அழகு, கண் அழகு, தாமரை மலர்ந்து கிடக்கும் தொப்புள் அழகு" என்று அழகுற வர்ணிக்கிறது
          இப்படியான கொப்பூழ் என்கிற தொப்புளை 'தொப்புள் புள்ளி' என்று தலைப்பிட்டு என்னவாகக் காண்கிறார் கவிஞர் அகவி? கவிஞர் அப்துல் ரகுமான், தான் படித்த கல்லூரியை இரண்டாவது கருப்பை என்பாரே அதுபோல, கவிஞர் அகவி தாம் பிள்ளைப் பிராயத்தில் படித்த பள்ளியை இரண்டாவது கொப்பூழ் கொடியாகக் காண்கிறார். அதுமட்டுமல்ல. அவரின் அரிச்சுவடிக்கு அடியெடுத்துக் கொடுத்த முதலாசான் பீமசேனன், மார்த்தாள் டீச்சர், பல்லைக் கடித்துத் தண்டிக்கும் செல்லத்துரை வாத்தியார், காது நுனியையும் மென் தொடைச் சதையையும் திருகித் திருகிக் கற்பித்த சிவானந்தம், வெண்பாவூர் துரைராசு, பழனிமுத்து எனத் தொடர்ந்து தமது அடிநாளைய ஆசிரியப் பெருமக்களையெல்லாம் நினைவு கூர்கிறார். அதோடு மட்டுமல்ல கால்சட்டை காலத்து நட்பு நெத்தமுட்டி வரதராசன், மஞ்சள்மாவு கோதுமை உப்புமாவை சுடச்சுட பரிமாறிய செல்லம்மா ஆயா என பசிய நினைவுகளாய் அந்த தொப்புள் புள்ளியைக் காணுகிறபோது, நமக்கு மரியாதை கூடுகிறது. கிட்டத்தட்ட நம் எல்லோருக்கும் வாய்த்த அனுபவம்தான்இது என்றாலும், அதை மடைமாற்றி நல்லதொரு கவிதையாய் நெய்கிறார் கவிஞர் அகவி.
          "பெருமழை நின்றபிறகு/ கூரை விளிம்பில்/ குதிக்கும் நீர்க்குஞ்சுகள்" என்று சட்டென்று அழகியல் கட்புலப் படிமமாய் அழகியதொரு காட்சியை நம் முன் விரித்துப்போடுகிறார் 'சிறிதினும் சிறிது பார்' என்கிற கவிதையில். (.87) "சூரியனின் கறுப்பு வெளிச்சம்" (.62) என்று நிழலை உருவகிக்கிறபோதும், "புளியம்பூ உண்ணும்/ பெருவீடாய்க் கொண்ட/ மென் பஞ்சு அணில்கள்/ மரஞ்சாய்த்த முரட்டு எந்திரத்தை/ சபிக்கும்... 'மனிதர் தழைக்க' (.30) என்கிற கவிதையில், நமக்கு அழகுணர்வைவிட அளவிளாக் கோபம்தான் எழுகிறது.
          இயற்கையின் மீதான நேசத்தையும், அழகிலையும் மட்டும் இவர் பாடு பொருளாக்கவில்லை. அடக்கப்படும், ஒடுக்கப்படும், தாழ்த்தி வைக்கப்படும், எளிய மனிதர்கள், கூலி உழைப்பாளிகள் என அவர்களின் வதைபடும் வாழ்வை, வலி மிகும் வாழ்வை, கருணையோடு மட்டும் அல்ல. அந்த அவல வாழ்வின் விடுதலைக்கும், விடிவுக்கும் சேர்த்துப் பாடுகிறார். கூடவே நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பு வன் கொடுமைகளுக்கெதிராய் கொதித்தெழுந்தும் பாடியுள்ளார். 
          இங்கு புதுக்கவிதை, மரபுக்கவிதை என்கிற பிழையான சொல்லாடல் காலத்தில் நாம் இயங்குகிறோம். உண்மையில் மரபில்லாத கவிதை இருக்க முடியாது. புதுமையில்லாமல் ஒரு கவிதை இயங்கவும் முடியாது. எழுதப்படுகிற மொழியின், எழுதுகிற கவிஞனின் இனத்தின் மரபின்றி எந்தப் படைப்பும் எழ முடியாது. ஆனால், நாம் இங்கு  மரபு என்று சொல்லிக் கொள்வது என்பது எதுகை, மோனை, சந்தம் என்கிற உருவ உத்தியே அன்றி வேறில்லை. அதன்நோக்கில் கவிஞர் அகவிக்கு அருமையாய் சந்த இயைபுகளோடு கூடிய, எதுகை, மோனைகளின் களிநடங் கொள்ளும் கவிதைகளைப் படைத்தளிக்கும் வல்லமை வாய்த்திருக்கிறது என்பதையும் வாசகனுள் கடத்திப்போகிறார்.

"தொப்புள் புள்ளி" கவிஞர் அகவி. முதல் பதிப்பு : செப்டம்பர் 2015.
விலை ரூ. 80 வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011.

திங்கள், 11 மே, 2015

                


          தஞ்சை இலக்கிய வட்டமும்
, ரிவோல்ட் அமைப்பும் இணைந்து நடத்திய இரு நூல்களின் திறனாய்வுக் கூட்டம் 09.05.2014 சனிக்கிழமை மாலை தஞ்சையில் நடைபெற்றது. பசு கவுதமனின் "ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும், நிகழ்வுகளும்", பாட்டாளியின் "திராவிடநாடும் தேசிய இன விடுதலையும்" என்னும் இரு நூல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
               


         


        இவ்விரு நூல்களைப் பற்றி சுருக்கமான அறிமுக உரையை பசு கவுதமன் நிகழ்த்தினார்.


      முகநூல் எழுத்தாளர் தோழர் மக்கள் பிரதிநிதி அவர்களும், 'தறியுடன்' நாவலாசிரியர் தோழர் இரா பாரதிநாதன் அவர்களும், தோழர் விடுதலை வேந்தன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். 








       ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்,நிகழ்வுகளும் குறித்த ஆய்வுரையை திருச்சி மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றச் செயலாளர் திரு. கலியமூர்த்தி வழங்கினார். கீழத்தஞ்சையின் திராவிடக் கழகப் போராளியாகவும் பின் கம்யூனிசப் போராளியாகவும் விளங்கிய ஏ.ஜி.கே., பெரியாரிய தத்துவங்களையும், கம்யூனிசத் தத்துவங்களையும் தான் போராடிய களத்தில் இணைத்துச் செயல்படுத்திக் காட்டினார். அதன்மூலம் கீழத்தஞ்சையின் வரப்புகளில் பெரியாரியமும், மார்க்சியமும் கை கோர்த்து நடனமாடுவதை அவர் சாத்தியமாக்கினார் என்று ஏ.ஜி.கேவின் வாழ்வை விளக்கிப்பேசிய கலியமூர்த்தி, அவரின் போராட்ட அனுபவங்களையும்,பண்ணைகளின் கொடுமைகளுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்ட வடிவங்களையும் விளக்கிப்பேசினார்.
        







        முன்னதாக தோழர் பாட்டாளி தமது ஏற்புரையை வழங்கினார்.
                



        இவ்விரு நூல்கள் குறித்த தனது பார்வையை மீ.த. பாண்டியன் முன் வைத்தார். ஏ.ஜி.கே திராவிடக் கழகத்தில் இருந்து பெரியாரிய சுயமரியாதைக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்தாலும் அவர் ஒரு வர்க்கப் போராளியாகவே இருந்தார் என்னும் பதிவைதான் இப்புத்தகத்தின் வாயிலாக நான் பார்க்கிறேன் என்றார். திராவிடக்கழகத்தில் அவர் இருந்தபோது ஒரு வர்க்கப்போராளியாக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது சாதி ஒழிப்பு குறித்த பெரியார் சிந்தனைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தார்..அப்படித்தான் இருக்கமுடியும்.ஏ.ஜி.கே அப்படித்தான் இருந்தார். இவ்விரு குணாம்சங்களும் எந்த ஒரு இயக்கத்துக்கும் அப்போது மட்டுமல்ல இப்போதும் தேவை. இவ்விரண்டும் இல்லாது இருக்கும் பட்சத்தில் அவ்வியக்கம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுத்தான் நிற்கும் என்றார் மீ.த.பாண்டியன். பாட்டாளியின் திராவிடநாடும் தேசிய இனவிடுதலையும் நூல் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.
      



        நிகழ்வின் இறுதியில் பாட்டாளியின் திராவிடநாடும் தேசிய இன விடுதலையும் நூல் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். திராவிடம் என்னும் சொல் தீண்டத்தகாத சொல்லாக இப்போது இருப்பதாகவும், நாட்டில் நிலவும் அனைத்து தீங்குகளுக்கும் திராவிடமே காரணம் என்றும் 2009க்குப் பிறகு அரசியலுக்கு வந்த இளைஞர்கள் மட்டுமல்ல, அரசியல் புரிந்த தமிழ்தேசியர்களும் கூட அப்படித்தான் பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திராவிடம் குறித்த சரியான ஒரு பதிவை, ஒரு ஆய்வை பாட்டாளி இந்நூலின் மூலம் கொண்டு வந்திருக்கிறார். திராவிட என்னும் பெயர்ச்சொல் குறித்தும், பிராமணரல்லாத என்னும் எதிர்மறை சொல்லுக்குப் பதிலாக பெரியாரால் அது எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். இவ்வுலகின் சமத்துவமற்ற நிலைக்கு பார்ப்பனர்களும் அவர்களது தத்துவமான பார்ப்பனியமும்தான் காரணம் என சொன்னவர் பெரியார். இத்தத்துவத்தைக் கொண்டு வந்த பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களை முறியடிக்க ஒரு எதிர்ச்சொல்லை அவர் தேடிக்கொண்டிருந்தார். இப்படியாகத்தான் அவர் திராவிடம் என்னும் சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தார். அச்சொல் தமிழிலக்கியத்தில் இருந்ததா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. சூத்திரர் என்னும் சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக திராவிடர் என்னும் சொல்லை அவர் பயன்படுத்தினார். பெரியார் திராவிட அரசியலுக்குள் வருவதற்கு முன்னரே திராவிடம் என்னும் சொல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பல வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைத்த கொளத்தூர் மணி அவர்களின் ஆய்வு இன்றைய "திராவிடமா ,தமிழ்த்தேசியமா" என்னும் விவாதத்திற்கு மிகச்சிறந்த பதிலாகவும் அமைந்தது.
      
        நிகழ்வின் கடைசி வரை நண்பர்களும், தோழர்களும் அமைதியாக, கவனமாக கருத்துரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். நிகழ்வின் முடிவில் பல நண்பர்களும் நிகழ்வைப் பாராட்டி சொன்ன வார்த்தைகள் எங்களுக்கு இது போன்ற பல நிகழ்வுகளை எதிர்காலத்தில் நடத்தவேண்டும் என்ற உறுதியை எங்களுக்கு அளித்தது.

செய்தியை எழுதி வழங்கியவர்
தோழர் செ. சண்முகசுந்தரம்

தஞ்சை இலக்கிய வட்டம் 

புதன், 29 ஏப்ரல், 2015

ஆய்வரங்கம்





எதிர் வரும் 09.05.2015,சனிக்கிழமையன்று 
தஞ்சை இலக்கிய வட்டமும், ரிவோல்ட் அமைப்பும் இணைந்து நடத்தும் 
இரண்டு நூல்கள் குறித்த ஆய்வரங்கம்.

அருமைத் தோழர் பசு கவதமன் அவர்கள் எழுதிய 
"ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்,நிகழ்வுகளும்", 
எமது ஆய்வு நூலான 
"திராவிட நாடும் தேசிய இன விடுதலையும்"

கருத்துரையாளர்கள்: 
தோழர்கள் கொளத்தூர் மணி, 
மீ.த.பாண்டியன், 
கவின்மலர், 
சண்முக சுந்தரம்.

இடம் : பெசன்ட் அரங்கம்,தஞ்சாவூர்.
நாள் : 09.05.2015,சனிக்கிழமை,
மாலை சரியாக 5.30 மணிக்கு.


வாருங்கள் தோழர்களே....

திங்கள், 13 ஏப்ரல், 2015

மனசை அறுக்குது ஐ.மா.பா.







இம்மாத அம்ருதா இதழில் (ஏப்ரல் 15) வெளியான மூத்த முதுபெரும் தோழர் தியாகி ஐ.மா.பா குறித்த எமது அஞ்சலிக் கட்டுரை 

மனசை அறுக்குது ஐ.மா.பா.

                                                                                           - பாட்டாளி

           
            து 1968ன் அந்திமக் காலம். அப்போதுதான் கீழத்தஞ்சையில், வெண்மணித் தீயில்... சாதியாலும் வர்க்கத்தாலும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெண்கள், ஓடி ஒளிய முடியாத வயதான ஆண்கள் என 44 பேர்கள் பண்ணை ஆதிக்கத்தால் துடிக்கத் துடிக்க எரித்துக் கொல்லப்பட்ட காலம். செய்தி அறிந்து குன்றக்குடி அடிகளாரும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதனும், ஜெகநாத அய்யரும் ஒரு பக்கம் விரைந்து வந்து சேர, மறுபக்கம் திருவனந்தபுரத்தில் கட்சி மாநாட்டிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் விரைந்து வந்து சேர, அக்கம்பக்கத்திலிருந்த உணர்வாளர்கள், பொதுவுடைமையாளர்கள் எல்லோரும் பதைபதைப்போடு வந்து குழும, அந்தச் சுடுசாம்பல் மேட்டில் ஒரு உருவம் குத்த வைத்து உட்கார்ந்து, பொசுங்கிப்போன, சாம்பலாகிப்போன எலும்புகளையும், அந்தச் சுடுசாம்பலையும் மனசு கனக்க ஒரு காகிதத்தில் சேகரித்து பொட்டலமாக்கிப் பாதுகாத்தது. அவர்தான் ஐ.மா.பா என்று எல்லோராலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் ஐ.மாயாண்டி பாரதி அவர்கள். அவர்தான் பின்னாட்களில், ஒரு ஆகப் பெரிய பொக்கிஷமாகச் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருந்த அந்தச் சுடுசாம்பலையும், குருத்து எலும்புகளையும் கட்சியினருக்கு வழங்கிட, அவர் சேகரித்த அந்தச் சுடுசாம்பலும், குருத்து எலும்புகளும் இன்னும் வெண்மணி நினைவிடத்தில், அந்த வன்கொடுமைக்குச் சாட்சியமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
            இருளப்பன் மாயாண்டி என்கிற ஐ.மாயாண்டி என்கிறவர் பாரதி மேல் கொண்ட பற்றும், அவர் கவிதைகளின் மேல் கொண்ட தாளாத தாகமும், காதலும் அவரை பாரதி என்ற இணைப்பெயரைச் சூட்டிக்கொள்ள, ஐ. மாயாண்டி பாரதி என்கிற அப்பழுக்கற்ற சுதத்திரப் போராட்ட வீரர் ஒருவர் மதுரை மண்ணிலிருந்து இத் தமிழ்கூறு நல்லுலகிற்கு கிடைத்தார். நாம் இங்கு தோழர் ஐ.மா.பாவின் பிறப்பு, இறப்பு, வாழ்க்கைக் குறிப்பு என்றெல்லாம் பட்டியலிடப் போவதில்லை. அது ஏற்கெனவே இங்கு கொட்டிக் கிடக்கிறது. நமது கவனமெல்லாம் ஐ.மா.பா என்கிற ஆளுமை, அது இந்தத் தமிழ் கூறு நல்லுலகில் ஆற்றிய வினை, அதன் மீதான மதிப்பீடுகள், அதன் வழி நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள், படிப்பினைகள், அனுபவங்கள், இவற்றின் மீதுதான்.
            தோழர் ஐ.மா.பாவைச் பற்றிச் சொல்ல வருகிற போதெல்லாம், ‘அவர் சுதந்திரப் போராட்டத் தியாகி’ ‘ஏறினா ரயிலு. எறங்கினா ஜெயிலுஎன்கிற புகழ் பெற்ற வரிகள்தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் சிறைக் கொடுமை அனுபவித்தவர் அவர். அதை விட முக்கியமானது, நாடு நாற்பத்தியேழில் சுதந்திரம் பெற்றுவிட்ட பின்பும், அந்தச் சுதந்திர இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்த ஒரு சில தேச பக்தர்களில் ஐ.மா.பாவும் ஒருவர்.
            1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, ஐ.மா.பாவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், 1949ம் ஆண்டு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அப்போது தலைமறைவாகயிருந்த கட்சித் தலைமை அவரை கட்சி ஊழியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நடப்பு அரசியலை போதிக்கும் பணியினைக் கொடுத்து நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பியது. கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்க தோழர் ஐ.மா.பா நெல்லை சென்று கட்சி ஊழியர்களுக்கு அரசியல் கல்வி புகட்டிக் கொண்டிருக்கும்போது, சேலம் சிறையில் சில அரசியல் கைதிகள் உரிமை கேட்டுப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் சுதந்திர இந்தியாவின் இந்தியத் தலைமை 22 பேர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டது. இந்தச் சம்பவம் தோழர் ஐ.மா.பாவின் மனதை மிகவும் காயப்படுத்தியது. இவ்வளவு நாள் வெள்ளைக்காரன் செய்த வேலையைத்தானே சுதந்திர இந்தியத் தலைமையும் செய்கிறது என்று மிகவும் வேதனைப்பட்டார். வேதனையில் பல நாட்கள் சாப்பிடவில்லை அவர். சரியாகத் தூங்கவும் இல்லை. இதற்கு எதிராக ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவரைத் துளைத்துக் கொண்டே இருந்தது.
            இதேபோல எண்ணம் கொண்டிருந்த நான்கு தோழர்களும் ஐ.மா.பாவும் ஒரு குழுவாகச் சேர்ந்தார்கள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது அந்தக் குழு. தூத்துக்குடி அருகே மீளவிட்டான்என்கிற இடத்தில் ரயிலைக் கவிழ்க்கவேண்டும் என்று முடிவெடுத்தது. ஐந்துபேர்களைக் கொண்ட அந்தக் குழு, குறிப்பிட்ட நாளன்று நள்ளிரவில் தண்டவாளத்தைக் கழற்றிவிட்டுக் காத்திருந்தது. அதிகாலையில் வந்த அந்த ரயில் பயங்கர சத்தத்தோடு கவிழ்ந்தது. உயிர் சேதம் ஏதும் இல்லை. காவல்துறை முழு வீச்சில் தேட, கடைசியில் இவர்கள்தான் என்று கண்டுபிடித்து, மேலப்பாளையம் அருகே கைது செய்தது.
            'ஏகலாம் சிறைச்சாலையே -
            நமக்கு அதைவிட வேறென்ன வேலையேன்னு
பாடிக்கிட்டே ஜெயிலுக்குப் போனார்களாம்.
            தோழர் ஐ.மா.பா அங்கே மிகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டார். சுதந்திர இந்தியத் தலைமையின் கீழுள்ள அரசினால் அவரது குறுக்கு எலும்பு, கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன. ஆயினும் வெஞ்சிறையும் சித்திரவதையும் ஐ.மா.பாவை குலைத்துவிடவில்லை. மாறாக, அடக்குமுறைக்கு எதிராக... ஆதிக்கத்திற்கு எதிராக... அது வெள்ளை ஆதிக்கமாயினும் சரி. இந்திய வல்லாதிக்கமாயினும் சரி. சமரமில்லாது அந்தக் கடைசி 99வயதுவரை, உடல் வலு இருக்கும்வரை எதிர் நின்று போராடியவர் அவர். உடல் ஒத்துழைக்காதபோது கடைசிவரை எதிர்ப்புக் குரல் கொடுத்துப் போராடியவர் அவர்.
           

            காலம் தன்னளவில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது இயங்கியல்தான் என்றாலும், இயங்கியல் புரிதலைத் தாண்டி... இன்றின் அவலங்கள் தந்த காயத்தில், நேற்றையவைகளை பொன்னுலகக் கனாவாக காணுகிறது மனது. அன்றெல்லாம் தலைவர்கள் அப்படியிருந்தார்கள். இப்படியிருந்தார்கள் என்று ஏக்கம் மேலிட புலம்பித் தவிக்கிறது மனது. அன்றைய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு வேறு. இன்றைய தாராளமய, தனியார் மய, உலக மயமாக்கல் சூழல் வேறு என்ற அரசியல் அரிச்சுவடி நமக்கு உள்ளூர உணர்த்தித் தொலைத்தாலும், அதை உதறி, பொன்னுலகக் கனாக் காணுகிறோம் நாம்.
            காலம் அதன் கதியில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருப்பதால், நிறை வாழ்வு வாழ்ந்த அன்றைய தலைவர்களை, தியாகிகளை இழந்து கொண்டே வருகிறோம்.  அதன் வரிசையில் 99 வயதுவரை நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தவர் தோழர் ஐ.மா.பா. அவர் சிறார்களுக்கு தன் கால சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை, சம்பவங்களைச் சொல்லிச் சொல்லி அலுக்காதவர். அதிலே அளவற்ற இன்பங் காண்பவர். நம் காலத்தில் இவ்வாறான நேரடியான களப்போராளிகளை, அவர்களின் கள அனுபவங்களை, நேருக்கு நேர் கேட்கும் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. இன்னும் கொஞ்ச காலத்தில் மிச்சமின்றிப்போய்விட... இனி அவர்களின் எழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.
            “அதான் படிச்சு முடிச்சாச்சே. இன்னும் எதுக்குப் படிக்கணும்?” என்கிற இன்றைய சூழலில், ஏட்டுக் கல்வி என்பதைத் தாண்டி, அந்த வட்டத்தைத் தாண்டி, எதையும் படிக்கத் தேவையேயில்லை என்கிற இன்றைய கல்விமயச் சூழலில், ஐ.மா.பா போன்ற முதுபெரும் தோழர்களின், தலைவர்களின், நல்ல விழுமியமுள்ள மனிதர்களின்  எழுத்துக்கள் எந்தவித விளைவுகளை எதிர்கால சந்ததியர்களுக்குத் தந்துவிடப்போகிறது என்று நினைக்கிறபோது மனசு ரணம் ரணமாக அறுபடுகிறது.


            தோழர் ஐ.மா.பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தியாகி. பொதுவுடைமைப் போராளி. எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர், என்பதைத் தாண்டி எமக்கு ஆச்சரியமூட்டிய விஷயம் அவர் இந்து மகா சபையில் உறுப்பினராக அல்ல, பொறுப்பாளராக இயங்கியது. சாவர்க்கரை இங்கு அழைத்து வந்தது என்பது போன்ற விஷயங்கள் கவனம் ஈர்த்தது. அது குறித்து கொஞ்சம் அவதானிப்போம்.
            ஒரு பொதுவுடைமைக்காரர், ஆரம்பத்திலிருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றெல்லாம் களமாடிய ஒருவர், எப்படி இந்து மகா சபையில்? அன்றைய இந்தியாவில்.. அதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவினையற்ற ஒன்றுபட்ட இந்தியாவில், 1939ல் இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான்என்கிற தனி நாடு கோரிப் போராடினார்கள். இது பாரதமாதா, பாரதம், இந்து, இந்தியா என்கிற கற்பிதத்தில் மிதந்திருந்த லட்சோபலட்ச இந்து இந்தியர்களில்.. ஆரம்ப அரசியல் காலகட்டங்களில்... தோழர் ஐ.மா.பாவும் ஒருவர். அவர் அன்றைக்கு அந்த கற்பிதத்தில்தான் இருந்தார். அந்தத் தனி நாடு கோரிக்கையால் இந்திய தேசிய காங்கிரசில் அன்றைக்கு இருந்த முஸ்லீம்கள் முக்கியத்துவம் இழந்ததோடு மட்டுமல்ல. அவர்களைப் பகைமையுணர்வோடும் பார்க்கத் துவங்கினார்கள். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பாரதமாதாவை இரு கூறாகப் பிரிப்பதா? கூடாது! என்று இந்து மகா சபை உருவாக்கப்பட்டது. அதன் வழியில் இயங்கிய தோழர் ஐ.மா.பா 1940ல் மதுரை - ராமநாதபுர மாவட்ட இந்து மகா சபை அமைப்புச் செயலாளராக இயங்கினார். அப்படி அமைப்புச் செயலாளராக இயங்கி வந்த நாட்களில்தான் மதுரைக்கு சாவர்க்கரை அழைத்து வந்திருக்கிறார்.
            என்னவொரு முரண்? பின்னாட்களில் ஒரு பொதுவுடைமைப் போராளி.. ஆதி காலந் தொட்டே ஏகாதிபத்திய எதிர்ப்புக்காரர்... வரலாற்றில் இப்படியான முரண்களை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டே இருக்கலாம். எமது திராவிடநாடும் தேசிய இன விடுதலையும்நூலில் இதுபோன்ற வேடிக்கையான, வினோதமான பல அரசியல் முரண்களைச் சொல்லியிருப்பேன். ஒரு இந்து மகா சபை அமைப்புச் செயலாளர்.. பின்னாட்களில் எப்படி அதிலிருந்து வெளியேறினார்? அதிலிருந்து வெளியேறி ஒரு காங்கிரசுக்காரராக இயங்கியவர் ஏன் அதிலிருந்து வெளியேறி ஒரு பொதுவுடைமைக்காரர் ஆனார்? ஒரு சுவையான அரசியல் முரண் வரலாறு இது.
            அப்போது ஒருபுறம் வெள்ளையனே வெளியேறுஇயக்கம் தீவிரமடைந்திருந்த நேரம். மற்றொரு புறம் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அப்போது நாடெங்கும் யுத்த எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். தோழர் ஐ.மா.பா யுத்த எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்திச் சிறையில் இருந்தார். அப்போது இந்து மகா சபையினர் அவரிடம் சென்று இரண்டாம் உலகப்போர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்புக் கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்தால் விடுதலை செய்து விடுவார்கள். அதனால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிடடு விடுதலை ஆகும்படி கூறினார்கள். ஆனால் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு இள ரத்தத்திலிருந்தே ஊறியிருந்ததால் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக, இந்து மகா சபை மீதே கடும் கோபம் கொண்டு, அதிலிருந்து வெளியேறினார் என்பது வரலாறு.
            மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தப்பித்துக் கொள்வது என்பது இந்து மகா சபைக்கு மட்டுமல்ல. காங்கிரசுக்கும் அது பொருந்தும் என்பது ஐ.மா.பா நமக்குச் சொல்லும்  வரலாறு. ஒருமுறை கடலூர் சிறையில் இருந்திருக்கிறார் தோழர் ஐ.மா.பா. அவரைப் பார்க்க அவர் மனைவி சிறைக்கு மனுப்போட்டு வந்திருக்கிறார். அந்தச் சம்பவத்தை தோழர் ஐ.மா.பா அவர்களின் வார்த்தைகளிலேயே கேட்கலாம்.
            “நான் கடலூர் ஜெயிலில் இருந்தப்ப, மனு எழுதிப்போட்டு பார்க்க வந்தா எம் பொஞ்சாதி. 'ஏன் மாமா, இந்தச் சீனாக்காரன் பண்ணுறது தப்புனு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா, உங்களை வெளியில் விட்டுருவாகளாமே?’ன்னு கேட்டா. அன்னைக்கு அவ கன்னத்துல ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டேன். 'இதுக்காடி நீ இங்க வந்தே, காங்கிரஸ்காரன் அனுப்பிவெச்சானா?’ன்னு கேட்டேன். அவ அழுதுக்கிட்டே போயிட்டா. ஆனா, அதுக்குப் பிறகு அவ சாகிற வரைக்கும், அவ மேல் கோபமா என் கை பட்டது இல்லை”.
            அவர் இந்து மகா சபையிலிருந்து வெளியேறியதற்கும், காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றில்லை என்பதுதான் அவர் நமக்குச் சொல்லும் பாடம்.

           
            தோழர் ஐ.மா.பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தியாகி. பொதுவுடைமைப் போராளி என்பதெல்லாம் அவரது அரசியல் ஆளுமை என்றால்... எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்பது அவரின் இலக்கிய ஆளுமை. தனது 22ஆவது வயதிலேயே எழுதியதுதான் படுகளத்தில் பாரத தேவிஎன்னும் விடுதலை வேட்கை எழுப்பும் நூல். அதில் அவரின் நடை என்பது, போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கும் வீரர்கள் மத்தியில், ஒரு வீரத் தளபதி எழுப்பிடும் வீர உரை போன்ற எழுத்து நடை அது.
            “அதோ! மேலே பாருங்கள் ! ஆகா! அதென்ன அவ்வளவு அற்புதம்!
            என்ற முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை எழுச்சி மிக்க வீர உரைகளின் அணிவகுப்புதான் அது. அதைவிட ஏகாதிபத்தியத்தை, பிற ஏகாதிபத்தியங்களை அவர் சாடும் வார்த்தையாடல் என்பது நமக்கு புதுமைப்பித்தனை நினைவுபடுத்திடும்.  அவ்வளவு தேர்ந்த பகடியும், படிமமும் அதில் இருக்கும்.
           
            “வருகிறாள் அகிலலோக அதிகாரிணி, ஏகாதிபத்திய வெறிகொண்ட இங்கிலாந்திணி, பேராசை பிடித்த பிரெஞ்சு தேவி, ஆணவக்குள்ளி அமெரிக்க அரசி, ஜனசத்துரு ஜப்பானியக்குள்ளி, ஜெர்மானிய ஹிட்லர் ஒரு பேய், ரோமானிய முசோலினி ஒரு பிசாசு, மாதாவைக் கொன்ற மாபாதகி
            அதேபோல அவர் எழுதும் கட்டுரைகளின் தலைப்பு எதுகைமோனை மிகுந்ததாய், நல்லதொரு உரைக் கவிதையாய் மிளிரும். 
            “செந்தமிழ் நாட்டு இளந்தமிழ் வீரனே! தீராதிதீரனே!” (1939, லோகசக்தி)
            “போருக்குப் புறப்படு!” (1939, லோகசக்தி)
            “சுதந்திரப் போருக்கு அழைப்பு!” (1939, லோகசக்தி)
            “கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்!” (1939, பாரதசக்தி)
            (வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி முதன்முறையாக எழுதப்பட்ட கட்டுரை இது)
            நூலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் என்றெல்லாம் இயங்கியவர் அப்படி என்னதான் கல்வி கற்றிருக்கிறார் என்று பார்த்தால்...? எல்லாம் அனுபவக் கல்விதான். ஏட்டுக் கல்வி ஏக தூரம் இவருக்கு. பத்தாம்வகுப்பு பள்ளித் தேர்வில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் தோல்வியுற்று, குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார் என்கிற இந்தத் தகவல், சுய முன்னேற்ற எழுத்தாளர்கள், தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் இனி தங்கள் பட்டியலில் தோழர் ஐ.மா.பாவையும் இணைத்துக் கொள்ளலாம்.
           

            ஒருமுறை காந்தியார், தோழர் ஜீவா நடத்திக் கொண்டிருந்த காரைக்குடி ஆசிரமத்துக்கு வந்திருந்தபோது, தோழர் ஜீவாவின் சேவைகளைப் பார்த்துவிட்டு, ஜீவாவிடம் கேட்டாராம். இவ்வளவு அருமையாகச் செய்கிறீர்களே! உங்களுக்கு எவ்வளவு சொத்துள்ளது?” என்று. அதற்கு ஜீவா, “இந்தியாதான் எனது சொத்துஎன்றாராம்.  அதைக் கேட்ட காந்தியார், அகமகிழ்ந்து, “இல்லை. இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்துஎன்றாராம். அதுபோல, தமிழ்நாட்டையே தமது சொத்தாகப் பாவித்தவர் தோழர் ஐ.மா.பா. அதை அவரின் மொழியிலேயே கேட்போம்.
            “ரெண்டாவது உலக யுத்தம் தொடங்கினப்போ, ஆங்கிலேயர்கள் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தாங்க. யுத்த நிதி திரட்டினாங்க. 'பட்டாளத்தில் சேராதே... பணம் காசு கொடுக்காதேன்னு சிவகாசியில் பேசினேன். அதுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சப் ஜெயிலில் ஆறு மாசம் அடைச்சு, 50 ரூபாய் அபராதம் விதிச்சாங்க. எனக்கு ஜாமீன் கொடுக்க, அப்போ இருந்த வெள்ளைக்கார டெபுடி கலெக்டர், 'உனக்கு சொத்து ஏதும் இருக்கா?’ன்னு கேட்டார். 'இருக்குங்கய்யா... மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற மங்கம்மா சத்திரம் என் சொத்து. மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் எல்லாம் எங்க அப்பாவோட சொத்து. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எங்க பாட்டன், முப்பாட்டன் சொத்துதாங்கன்னு சொன்னேன். இதை மொழிபெயர்த்துச் சொன்னதும், டெபுடி கலெக்டர் கடுப்பாகி, 'இவனுக்கு ஜாமீன் கிடையாது. ஜெயிலில் தூக்கிப்போடுங்கனு சொல்லிட்டுப் போயிட்டாரு”.
            ஆக, துவக்ககால பொதுவுடைமைவாதிகள் இந்த தேசத்தையே தமது சொத்தாகப் பாவித்தவர்கள். தாமே தேசத்திற்கு சொத்தாகவும் இருந்தவர்கள். அவர்கள் வழி வந்த இன்றைய இடதுசாரிகள், கட்சி சார்ந்த மார்க்சியர்கள், சிந்தனை சார்ந்த மார்க்சியர்களின் இன்றைய நிதர்சனம் என்பது?... அது வேறொரு தளத்தில் பேசப்படவேண்டியது.
            தோழர் ஐ.மா.பா துவக்க காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல, உடல் தளர்ந்து, உள்ளம் தளராத தனது தள்ளாத இறுதிக் காலத்திலும், கனிம வளக் கொள்ளையர்களை, மதுரை மேலூரில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையை எதிர்த்தும் போராடியிருக்கிறார் என்பது நமக்கு சிலிர்ப்பூட்டுகிறதொன்றாகும்.
            இறுதியாக தோழர் ஐ.மா.பா அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு வருத்தத்தை அவரின் குரலிலேயே கேட்போம்.
            “ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் என் மனசை அறுக்குது!''
            சற்றுநேர மௌனத்துக்குப் பிறகு,
            ''அப்ப போலீஸ்காரன் எங்களை அடிக்கிறப்ப நாலு அடிதான் வலிக்கும். மீதி நாப்பது அடி பொத்து பொத்துனு சத்தம்தான் கேட்கும். இப்ப பேப்பர்களில் வர்ற செய்திகளைப் பார்த்தா ஒவ்வொரு வரியும் வலி தருது. இதுக்குத்தானா இத்தனை வருஷம் சிறைப்பட்டோம். அடிபட்டோம். குடும்பம் பெருசு இல்லை, நாடுதான் முக்கியம்னு அலைஞ்சோம்?’ன்னு வருத்தமா இருக்கு. சாதிச் சண்டைங்கிறான். மதக் கலவரம்கிறான். சொத்துக் குவிச்சிட்டாங்கங்கிறான். அரசியல்ல ஆலமரங்கள்கூட காளான்கள்கிட்ட அண்டி நிக்குது. ஒண்ணு மட்டும் சொல்றேன்... அதிக சொத்தும் பணமும் சேர்ந்தா, அது சனியன் பிடிச்சது மாதிரி. எனக்கு இருந்த சொத்துக்களைப் பிரிச்சு சொந்தபந்தங்களுக்குக் கொடுத்திட்டு, பென்ஷன் பணத்தில் நிம்மதியா இருக்கேன். எனக்கு புள்ளகுட்டி இல்லைங்கிற குறைகூட இல்லை. எல்லாருமே என் புள்ளைங்கதானே!'' என்கிறார் ஐ.மா.பா.
            மனசை அறுப்பது உங்களுக்கு மட்டுமல்ல ஐ.மா.பா.

- பாட்டாளி
நன்றி :
1. விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி எழுதிய படுகளத்தில் பாரததேவி - தி.வரதராஜன்

2. ரெட் சல்யூட்! - சௌபா