பிரம்மரதம் என்னும் அடிமை ரதம்
பாட்டாளி
பொதுவாக நான்கு புறமும் கடல் நீரால் சூழப்பட்டு நடுவில் இருக்கும் நிலப்பகுதியை நாம் ‘தீவு’ என்றழைப்போம். ஆனால், ஓர் ஆற்றின் நடுவே சூழப்பட்ட தீவு எங்கிருக்கிறது தெரியுமா? ஆற்றின் நடுவிலே தீவு போன்ற சிறிய சிறிய நிலத் திட்டைகளை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், திரளான மக்கள் வாழும் பகுதியாய் உள்ள, ஆற்று நீரால் சூழப்பட்ட தீவுதான் 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானதும், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம். இனி நாம் அதை திருவரங்கம் என்றே குறிப்பிடுவோம்.
தமிழகத்தின் முதன்மை பெற்றுள்ள ஆறு பொன்னியாறு. இது பெரிதும் காவிரி என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. “நடந்தாய் வாழி காவிரி” என்று பழந்தமிழ் இலக்கியங்களும், ‘தட்சிண கங்கை’ என்றும், பரத கண்டத்துள் ஏழு புண்ணிய நதிகளுள் ஒன்று ‘காவிரி’ என்றும் பார்ப்பனப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகு பொன்னி ஆற்றில் மூன்று தீவுகள் இருக்கின்றன. அம்மூன்றும் ‘அரங்கம்’ என்று பெயர் பெறுகின்றன. ‘ஆதிரங்கம்’, ‘மத்தியரங்கம்’, ‘அந்தரங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன. முதல் இரண்டும் கர்நாடக மாநிலத்தில் உள்ளன. ‘அந்தரங்கம்’ என்று அழைக்கப்படும் மூன்றாவது அரங்கமே திருவரங்கம் ஆகும்.
காவிரி, கொள்ளிடம் என்னும் இரு நதிகளாகப் பிரியுமிடத்து இருபது மைல் நீளமும், நட்ட நடுவே இரண்டு மைல் அகலமும் உடையது இத் திருவரங்கத் தீவு. இத் தீவில்தான் ஆசியாவிலேயே மிக உயர்ந்த ராஜகோபுரம் அமைந்துள்ளது. இத் திருத்தலம் சங்ககாலப் பாடல்களிலேயே பாடல் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில்,
“விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்” என்ற பாடலாலும்,
அகநானூற்றில் பாலை உறையூர் முதுகூத்தனார் பாடலில் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழாவைப் பற்றிய குறிப்பும் காணக்கிடைக்கிறது.
“வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவவெண் மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
தீஇல் அடுப்பின் அரங்கம் போல”
- அகம் : 137
உருவவெண் மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
தீஇல் அடுப்பின் அரங்கம் போல”
- அகம் : 137
என சங்க இலக்கியப் பாடல்களிலேயே இத்திருத்தலம் குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கிறபடியால் இதன் காலம் சங்ககாலத்திற்கும் முந்தையது என்று கூறலாம். மேலும், சங்கம் மருவிய காலத்தில், பல ஆழ்வார்கள் (கி.பி 5ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை) திருவரங்கனைப் பற்றிப் பாடியுள்ளனர். நாலாயிர திவ்ய பிரபந்தத்திலுள்ள பாடல்களில் 247 பாசுரங்கள் திருவரங்கனின் மேல் மட்டுமே பாடப்பட்டுள்ளன.
இப்படியாக, சங்ககாலத்துக்கு முன்பே திருவரங்கக் கோவில் இருந்துவந்தாலும், கி.பி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீராமானுஜரின் வழிபாட்டு முறைகள்தான் கோவிலில் இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதை இந்து அறநிலையத் துறையும் உறுதிப்படுத்துகின்றன.
இப்படிப்பட்ட திருவரங்கம் கோயிலில்தான் மனிதனை மனிதன் மதிக்காத, மனிதனை மனிதன் கேவலப்படுத்தும் மனித உரிமை மீறல், கோயில் பழக்க வழக்கம், பக்திப் பண்பாடு என்ற பெயரால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவரங்கம் கோயிலில் புகழ் பெற்ற விழாக்களின் உச்சம் ‘பரமபதம்’ என்னும் சொர்க்க வாசல் திறப்பு விழாவாகும். அன்றைய தினம் மட்டுமே அதிகாலையில் திறக்கப்படும் அந்த வாசல் வழி போனால், நேராக சொர்க்கம்தானாம். நரகம் எல்லாம் கிடையாதாம். உயிரோடு வாழும்போதே சொர்க்கமாய் இருக்க வேண்டிய இந்தப் பூமியை நரகம் ஆக்கிவிட்டு, செத்த பின்பு சொர்க்கமாம். கால காலமாய் உழைக்கும் மக்களை ஏமாற்றி வரும் கதை இது. அத்தகைய பரமபத விழா என்பது ‘இராப் பத்து’ ‘பகல் பத்து’ என வெகு உற்சாகமாக நடைபெறும். அப்படியான ஒரு நாளில்தான், மனிதர்களை (பார்ப்பனர்களை) மனிதர்களே தோளில் தூக்கிவைத்து, பல்லக்கில் சுமந்து வரும் ‘அடிமைக்கால நடைமுறை’ இன்றும் தொடர்கிறது. அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா? நாம் இருப்பது என்ன 21ம் நூற்றாண்டிலா? அல்லது அடிமைக் காலத்திலா? ஒரு புறம் அணு சக்தி, நியூட்ரினோ, நானோ தொழில் நுட்பம், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில் என ஏன் திருவரங்கம் அரங்கநாத சுவாமிகளே வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் இந்த அறிவியல் தொழில் நுட்ப அபரிமித வளர்ச்சி காலத்தில்.... இருண்ட புறமாக, அடிமைக் காலத்தின் மிச்ச சொச்சமாக, மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் சுமந்து செல்லும் மடமைப் பழக்க வழக்கத்தை, இழி செயலைக் கைக் கொண்டிருக்கிறது திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்.
திருவரங்கத்தில் வேதவியாச பட்டர் குடும்பத்தினர்கள், பராசர பட்டர் குடும்பத்தினர்கள், அறையர் குடும்பத்தினர்கள் என்ற மூன்று குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோயிலில் கைசிக எகாதசி நாளில், கைசிக புராணம் வாசிப்பதற்கும், அத்யயன இராப்பத்து உற்சவத்தில் சாற்றுமுறை நாளில், வேத பாராயணம் வாசிப்பதற்கும் மற்றும் நம் பெருமாள் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளும் சமயம் பிரபந்தங்களை தாள இசையுடன் சேவித்தல், திரு அத்யயன உற்சவத்தில் அறையர் சுவாமிகள் அவரவர் குடும்ப விகிதாச்சார முறைப்படி நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும் (தமிழ் வேதம்) இசை, தாளம் மற்றும் அபிநயத்துடன் சேவித்தல் போன்ற வேலைகளைச் செய்வார்களாம். இதற்காக கோயில் நிர்வாகம் அவர்களுக்கு ‘பிரம்மரத’ மரியாதை செய்யவேண்டுமாம்.
அது என்ன பிரம்மரத மரியாதை. நிறைவு நாளன்று, பெருமாள் தோளில் போட்டிருக்கும் மாலையை இவர்களுக்கு, அதாவது மேற்குறிப்பிட்ட அந்த மூன்று குடும்பத்தவர்களின் வாரிசுகளுக்குப் போட்டு, அவர்களை பல்லக்கில் தூக்கிச் சுமந்துகொண்டு, அவர்களது வீடுகளில் போய் இறக்கி விட்டு வர வேண்டுமாம். இது காலங்காலமாக நடந்து வரும் நடைமுறையாம்.
திருவரங்கம் கோயிலின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ள மனிதராய் இருப்பார் போல. தன் கண் முன்னே நடக்கும் இந்த இழி செயலைக் காணச் சகிக்காது ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி முறைப்படியான முதல் நடவடிக்கையாக, விளக்கம் கேட்டு அந்த மூன்று குடும்பத்தினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
“பிரம்மரத மரியாதையன்று மேற்படியாருக்கு பெருமாள் மாலை சாற்றி, மரியாதை செய்து, பல்லக்கில் தூக்கிக் கொண்டு, திருக்கோயில் வளாகத்திலிருந்து அவரவர் இல்லங்களில் இறக்கி விடப்படுவது நடைமுறையிலுள்ளது. திருக்கோயில் வழிபாடு செய்யும் இறைவனைத்தான் பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்வது முறையாகும். அவ்வாறின்றி, மனிதனை மனிதனே தூக்கிக் கொண்டு செல்வது தவிர்க்க வேண்டிய செயலாகும். ஆலயத்தில் மனிதன் இறைவனைத்தான் வணங்க வேண்டும். ஆலய வளாகத்தில் பிரம்மரத மரியாதை நடைபெறும் நாட்களில், மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிக் கொண்டு வருவதும், அதைப் பார்க்கும் வேறொரு மனிதன் வணங்குவதும் ஏற்கத்தக்கதல்ல. அரசாங்கமே மனிதனை மனிதன் உட்கார வைத்து கையினால் இழுத்துக் கொண்டு செல்லும் கை ரிக்ஷாவினை ஒழித்து விட்டது. பல்லக்கில் தூக்கி செல்வது, பழக்க வழக்கம் என்ற பெயரால் மனிதனுக்கு மனிதன் ஆலயத்திற்குள் பதவி, இனம், பால், மொழி என்ற காரணமாக வேறுபாடு இருத்தல் கூடாது என்பது தங்களுக்குத் தெரிந்ததே. எனவே, தங்களை பல்லக்கில் செல்வதை ரத்து செய்வது குறித்து தங்கள் கருத்தினை 15 நாட்களுக்குள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது “ என்று நோட்டீஸ் அனுப்பினார். (இணை ஆணையரின் விளக்கம் கேட்கும் கடிதத்திலிருந்து)
கடிதத்தினைக் கண்டவுடன் கோபம் உச்சிக் குடுமிக்கு ஏறியது அவர்களுக்கு. சும்மா இருப்பார்களா அவர்கள்? காலகாலமாய் சொகுசாய் அடுத்தவன் முதுகில் சவாரி செய்தவர்களாயிற்றே. இழக்கச் சம்மதிப்பார்களா அந்தச் சுகத்தை? உடனே தங்கள் அம்பிகளிடம் அழுது முறையிட, அவர்களின் ஆலோசனையின் பேரில் இணை ஆணையருக்கு விட்டார்கள் ஒரு வக்கில் நோட்டீசு. இணை ஆணையர், தங்களை ‘கேவலம் கைரிக்ஷா இழுப்பவர்’களோடு போய் ஒப்பிட்டு இழிவு படுத்தி விட்டார். எங்கள் மனம் புண்ணாகிவிட்டது. எனவே, 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மான நஷ்ட வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
“ஆருள்மிகு ஸ்ரீ அரங்கநாதரின் கைங்கரியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டிருக்கும் கைங்கரிய பரம்பரையில் வந்தவர்களுக்கு, அவர்கள் கைங்கர்யத்திற்கு ப்ரதிபலனாக, ப்ரம்மரதம் என்ற அற்புத மரியாதை அரங்கன் அளிக்க, (ஒய்யாரமாக தலைக்கு கை வைத்து எவனுக்கு வந்த விதியோ என்று படுத்துக் கிடக்கும் அந்த பெருமாளே வந்து இவர்களுக்கு மரியாதை அளித்தாராம். என்னடா கதை இது?) அதை கை ரிக்ஷாவிற்கு சமமாக எழுதியிருப்பது, அரங்கனையும், அரங்கனின் கைங்கர்யத்தையும், கைங்கர்யம் செய்யும் தொண்டர்களையும், அவமதிப்பதாகவும், மனதை புண்படுத்துவதாகவும், திருக்கோயிலின் நீண்டகால பழக்க வழக்கங்களை கேலி செய்வதாகவும் அமைந்துள்ளது”. (மேற்படி பட்டர்கள் இணை ஆணையருக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசிலிருந்து) பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம் இவர்களால். உடல் உழைப்பாளர்களோடு தம்மை ஒப்பிட்டு விட்டார்களே என்பதுதான் ஆகப் பெரிய கோபம் இவர்களுக்கு.
காலம் காலமாக, உடல் உழைப்பாளர்களை ஏமாற்றிப் பிடுங்கிய காசு கேவலமில்லை. அவர்களின் உழைப்புச் சுரண்டல் இனித்தது. ஆனால், அவர்களோடு ஒப்பிட்டது மட்டும் இவர்களுக்குத் தாங்க முடியவில்லை.
பொதுவாக, தொழிலில் உயர்வு தாழ்வு கற்பிப்பது தவறு என்றாலும் நாமும் கேட்கிறோம். கழிவறையைச் சுத்தம் செய்யும் எமது சுகாதார சுத்திகரிப்புத் தோழனின் உழைப்பை விட, எந்த வகையில் உயர்ந்து இவர்களின் உழைப்பு?
நம் சமூகத்தில் சூத்திரப் பெண்களோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களோ, அதிகாலையில் எழுந்தவுடன் என்ன செய்கிறார்கள்? வாசலைக் கூட்டி சுத்தம் செய்கிறார்கள். மாட்டுக் கொட்டங்களைச் சுத்தம் செய்கிறார்கள். பிறரின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்கிறார்கள் என சூழலைச் சுத்திகரிக்கிறார்கள். ஆனால், ஒரு பார்ப்பனன் காலை எழுந்ததும் என்ன செய்கிறான்? குளிக்கிறான். பட்டையோ, நாமமோ போட்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். தன்னை மட்டுமே சுத்தம் செய்துகொண்டு, நம்மைப் பார்த்துச் சொல்கிறான், ‘நாம் சுத்தமில்லாதவர்கள்’ என்று. உண்மையில் யார் சுத்தமானவர்கள்? தன்னை மட்டுமே சுத்தம் செய்து கொள்கிறவர்களா? அல்லது தன்னோடு சுற்றுச் சூழலையும் சேர்த்துச் சுத்தம் செய்பவர்களா? யார்? சூழலியச் சிந்தனையில் புதிய பார்வை வேண்டும் நமக்கு.
ஆக, கை ரிக்ஷா இழுக்கும் உடலுழைப்புத் தொழிலாளியோடு ஒப்பிட்டதைத் தாங்க முடியாமலும், தனக்கான வருமானம் போச்சே என்ற கொதிப்பிலும், உடனே ஓடினார்கள் பட்டர்கள். எங்கே பெருமாளிடமா? அதுதான் இல்லை. அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். பெருமாளும் இல்லை. எந்தப் பெருச்சாளியும் இல்லை என்று. சாமி சாமி என்று நமது உழைக்கிற மக்கள் வெள்ளந்தியாய்க் கும்பிட்டு, கருவறைக்குள் எட்டிப் பார்ப்பதே ஆகப் பெரிய சொர்க்கம் என்று நினைக்கிற அதே கருவறைக்குள்தான், தேவநாதன்கள் காமலீலைகள் புரிந்தார்கள். அந்தத் தேவநாதன்களுக்கு சர்வ சத்தியமாய்த் தெரியும் கருவறைக்குள் எந்தத் தெய்வங்களும் இல்லை என்று. இல்லை என்றால், இவ்வளவு சர்வ சுதந்திரமாய் அந்த இடத்தில் காமக் களியாட்டத்தில் திளைப்பார்களா?
எனவே, ஓடினார்கள் பட்டர்கள் சென்னைக்கு. அங்கு ராகவாச்சாரி என்ற உச்சிக் குடுமி வக்கீலிடம் போய் முறையிட்டார்கள். அவரும் சிண்டுக்குடுமி சிலிர்க்க, இணை ஆணையருக்கு விட்டார் ஒரு வக்கீல் நோட்டீசு. பிரம்மரத மரியாதை என்பது காலங் காலமாய் நடந்து வருவது. எனவே, இதைத் தடுக்க அரசுக்கோ அல்லது அறநிலையத் துறைக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை. மேலும், ‘எங்களவா’க்களைப் போய்க் கேவலம் கைரிக்ஷா இழுக்கிறவாளோடு போய் ஒப்பிட்டுட்டேளே. எங்களவா மனசு புண்பட்டுடுத்து. அதை ஆத்தணுமுன்னா நெறையச் செலவாகும். எனவே, பத்து லட்சம் நஷ்டு ஈடு தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீசு விட்டார். இதைவிடக் கொடுமை ஒன்று.
இதே திருவரங்கத்தில் தந்தை பெரியார் சிலை உடைப்பு வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேடப்பட்ட குற்றவாளியான கிருஷ்ணமாச்சாரி என்கிற பழங்குடுமி, அரசுக்கு ஒரு விநோதமான விண்ணப்பத்தை முன் வைத்தது. என்ன அந்த விண்ணப்பம்.
“ஸ்ரீ பாதம் தாங்கிகள்’ பிரம்ம ரதத்தை சுமந்து செல்ல, மேலே பட்டர்கள் ஒய்யாரமாய் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க, பின்னே வாத்திய கோஷ்டிகள் மங்கள நாதமிசைக்க, பல்லக்கின் முன்னே அரிதாரம் பூசிய தேவதாசிகள் ஆடிவர (அழுத்தம் எம்முடையது) இணை ஆணையர் ஆவண செய்ய வேண்டு”மாம். எப்படியிருக்கிறது கொழுப்பு? பல்லக்கைச் சுமப்பதே பெருங் குற்றம். இழிவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால், கூட ஒரு படி மேலே போய், பெண்கள் அதுவும் தேவதாசிகள் பல்லக்கின் முன்னே ஆடிவர வேண்டுமாம். எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் இவர்கள்? அரசே தேவதாசி முறையை முற்றிலுமாக ஒழித்து விட்டபோதும், இன்னும் இவர்களுக்குள் நப்பாசை ஓடிக்கொண்டிருக்கிறது. மன வக்கிரம் பிடித்தலைகிறார்கள்.
இப்படித்தான் முன்பு தமிழக சட்டமன்றத்தில் ‘தேவதாசிகள் ஒழிப்புச் சட்ட’த்தை முன்மொழிந்த போது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருவாளர் சத்திய மூர்த்தி கடுமையாக அட்சேபித்தாராம். “தேவதாசி முறையை ஒழித்து விட்டால் பிறகு யார் சதிர் ஆடுவது?” என்று கேட்டாராம். அதற்கு, கடுமையாக அவருக்கு எதிரிலேயே பதில் தந்தார் டாக்டர் முத்து லட்சுமி அம்மையார். “இதுநாள் வரை எங்கள் பெண்கள் ஆடினார்கள். இனி வேண்டுமானால், உங்கள் குலப் பெண்கள் ஆடிக் கொள்ளட்டும்” என்றார்கள் காட்டமாக. ஆக, சத்தியமூர்த்திகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பது கிருஷ்ணமாச்சாரி போன்றோர்களின் வாயிலாகத் தெரிகிறது. நம்மைப் பொருத்தவரை, பார்ப்பனப் பெண்களோ அல்லது பார்ப்பனரல்லாத பெண்களோ, எந்தக் குலப் பெண்களானாலும் சரி. யாரும் யாராலும் இழிவு படுத்தப்படக் கூடாது என்பதுதான் நமது நிலை. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் கூடாது என்பதைக் கடந்து, குலங்களே அற்றுப்போன, மனித மாண்புகள் உயர்ந்திட்ட நிலை எய்திட வேண்டும் என்பதுதான் நமது நிலை.
உண்மையில், பிரம்மரத மரியாதை என்பதன் உள் ரகசியம் என்ன என்று பார்த்தோமானால், அது வெறும் மரியாதை மட்டுமல்ல. மாறாக, அதற்குள் அவர்களுக்கு மிகப் பெரிய வருமானம் இருக்கிறது. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாய்க் குவிந்திருக்கும்போது, பலர் பல்லக்கைத் தூக்கிச் சுமக்க, அதில் ஒய்யாரமாய் அமர்ந்து பவனி வருகையில், பக்தர்கள், ‘ஏதோ பெரிய மகான் போலிருக்கிறது’ என்று கீழே விழுந்து கும்பிடுவதும், இந்தக் காட்சியைப் பட்டர்கள் படம் எடுத்து, அதை ஆந்திரா மற்றும் வட நாட்டு அப்பாவிப் பக்தர்களிடம் காட்டி, லட்ச லட்சமாய்த் தட்சணை வாங்குவது நின்று போய்விடும் என்ற கலக்கத்தில்தான், பூணூல்கள் விடைக்க நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார்கள்.
மனிதனை மனிதனே சுமக்கும் பழைமைவாத, பிற்போக்குத்தனத்தை, இந்த மனித உரிமை மீறலை, அவலத்தைத் துடைக்க வேண்டும், போக்க வேண்டும் என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட அறநிலையத்துறை ஆணையரின் விருப்பம் மட்டுமல்ல. மனித நேயங் கொண்ட, மனித உரிமை நோக்கு கொண்ட, முற்போக்கு, சனநாயக சக்திகளின் விருப்பம் மட்டுமல்ல. மாறாக, கொஞ்ச நஞ்ச மனிதாபிமானம் உள்ள மற்ற வைணவ அய்யங்கார்களும் இதை விரும்பவில்லை. அறங்காவலர் குழுவோ, அரசு நிர்வாகமோ, அல்லது கோவில் பணியாளர்களோ ஆதரிக்கிறார்களா என்றால்? அவர்களும் இதை விரும்பவில்லை. எதிர்க்கிறார்கள். அறங்காவலர்கள் குழு இயற்றிய தீர்மானம் இதற்கு எதிராகவே இருக்கிறது. கோவில் பணியாளர்கள் வட்டத்திலும் இந்த இழிவை எதிர்த்து தீர்மானமே போட்டுவிட்டார்கள். அதைவிட ஒரு படி மேலே போய், ‘ஸ்ரீ பாதம் தாங்கிகள்’ என்றழைக்கப்படும், இந்தப் பல்லக்கைத் தூக்கிச் சுமக்கும் பணியாளர்கள் தனியாக எழுத்து மூலமாகவே, ‘எங்களுக்குச் சுமக்க விருப்பமில்லை’ என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
ஆக, சகல தரப்பினர்களும் விரும்பாத இந்த இழி நிலையைத் துடைத்தெறிய வேண்டி களம் இறங்கின திருச்சியிலிருக்கும் பல்வேறு புரட்சிகர அமைப்புகள். தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம், பெரியார் தத்துவ மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் சக தோழமை அமைப்புகளையும் உடனிணைத்துக் கொண்டது. முதலில் இந்த இழி நிலை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று பரப்புரை செய்தது. துண்டறிக்கை வடிவிலும், சுவரொட்டி வடிவிலும் முதலில் தொடங்கிய பரப்புரை இயக்கம் பிறகு, அடுத்த நகர்வாய் தெரு முனைக் கூட்டங்களால் பரப்புரை செய்தது. அதன் உச்சமாக, “மனித குலத்திற்கு விரோதமான இந்த இழி நிலை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். அதற்கு அரசும், அறநிலையத் துறையும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ‘மாபெரும் பிரம்மரத மறியல் போராட்டம்’ மேற்கொள்ளப்படும்” என்றும் அறைகூவியது. சமரசமின்றித் தொடர்ந்து போராடியதன் பலன்....
கடந்த 2010 நவம்பர் 17 அன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் பிரம்ம ரதம் தடை செய்யப்பட்டு மனித உரிமை நிலை நாட்டப்பட்டது. அதிலிருந்து 2011, 2012 என தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதேசி திருவிழாக்களிலும் முற்றிலுமாக இந்த இழி நிலை துடைத்தெறியப்பட்டிருக்கிறது. இனியும் தலைகாட்டாது என உறுதியாக நாம் நம்பலாம். இது நமது போராட்டத்திற்குக் கிடைத்த ஒரு தள வெற்றிதான் என்றாலும், வென்றெடுக்க வேண்டிய தளங்களின் எண்ணிக்கை நம்முன் நிறையவே உள்ளது என்பதுதான் நிதர்சனம்.
நன்றி
"பண்புடன்" இணைய இதழ்
மார்ச் 4, 2012
.