வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

திங்கள், 26 செப்டம்பர், 2011



தோழர் கவித்துவன் இல்ல
புதுமனை புகுவிழாவின் ஒரு பகுதியாக
அவரது இல்ல நூலகத் திறப்பு விழாவில்
வாழ்த்துரைத்துப் பேசிய காணொளி


 

சனி, 30 ஜூலை, 2011


மாயாவதி அரசின்
புதிய நில கையகப்படுத்தும் கொள்கை

சு.அழகேஸ்வரன்


          நொய்டா கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து நிவாரணம் அளிக்கவும், நிலம் கையகப்படுத்துவது குறித்து புதிய கொள்கை வகுப்பதற்காக விவசாய பஞ்சாயத்து நடத்தப்படும் என்று மாயாவதி தெரிவித்ததால் இதன்படி கடந்த 02.04.2011 அன்று விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் மாநிலத்தில் புதிய நில கையகப்படுத்தும் கொள்கையை அறிவித்தார். மேலும் அவர் இக்கொள்கையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்றும் நாடு முழுவதற்கும் இக்கொள்கையை ஐக்கிய முன்னனி அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் நாட்டிலேயே தமது அரசு மட்டும்தான் விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் இக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

          கடந்த 2010 செப்டம்பர் 3க்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள உத்திரபிரதேச அரசின் இந்த இரண்டாவது நிலக்கொள்கையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ளதாவது, இனி புதிய திட்டத்திற்கு நிலத்தை அரசு கையகப்படுத்தாது. திட்டத்தை அமல்படுத்தும் தனியார் நிறுவனங்களே விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலத்தைக் கையகப்படுத்தும் நிறுவனங்களும் சேர்ந்து நிர்ணயித்துக் கொள்ளும். இதில் அரசின் பங்கு திட்டத்தை தீட்டி அதற்கு அனுமதி அளிப்பதுதான் (Facilitator).

          ஒரு பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்டுமானால் அப்பகுதியைச் சேர்ந்த 70 சதவீத விவசாயிகள் அதற்குச் சம்மதிக்க வேண்டும். அப்போது மட்டுமே அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படும். அவ்வாறு சம்மதிக்காவிட்டால் அத்திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்யும். மேலும், கையகப்படுத்தும் நிலத்தில் 16 சதவீதம் பகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டு (Allotment or developed Land) கையகப்படுத்தும் நிறுவனங்களே அப்பணிகளை மேற்கொள்ளும். வளர்ச்சிப் பணிகள் நிறைவுற்ற பின்னர் திரும்பி விவசாயிகளுக்கு அளிக்கப்படும். மேலும் 33 வருடங்களுக்கு மானியமாக ஆண்டிற்கு ரூ.23,000 அளிக்கப்படும் அல்லது ஆண்டிற்கு ரூ.23,000 இழப்பீட்டுத் தொகையாக அளிக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் ரூ. 800 உயர்த்தப்பட்டு இது ஒரு ஏக்கருக்கு இழப்பீட்டு தொகையாக அளிக்கப்படும்.
         
          வருடாந்திர மானியத் தொகை வேண்டாதவர்களுக்கு மாநிலத்தின் Relief and Rehabilitation -2010 சட்டத்தின் படி ஏக்கருக்கு ரூ.2.40 rehabilitation grand ஆக அளிக்கப்படும். இரண்டாம் பகுதியில் விளை நிலத்தை அளிக்கும் விவசாயின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். அத்துடன் அக்குறிப்பிட்ட நிறுவனத்தில் 25% பங்குகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் நிலம், கையகப்படுத்தும் நடவடிக்கை முற்றிலுமாக விவசாயி-நிறுவனங்கள் ஆகிய இருவரின் சம்மதத்துடன் (Through a consensual Approach) மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

          எதிர்வரும் மாநில தேர்தலை முன்னிட்டு இந்த நிலப்பிரச்சனையில் தீவிரமாக தலையிட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட முடிவாக இந்த புதிய நிலக்கொள்கை கருதப்படுகிறது. திருமதி. சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு வடிவமைத்துள்ள வரைவு மசோதாவை ஒப்பிடும் பொழுது மாயாவதி அரசின் புதிய நிலக்கொள்கை முக்கிய அம்சங்களில் வேறுபடுகிறது. அதாவது தனியார் நிறுவனங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இனிமேல் நேரடியாக ஈடுபடாது. அத்துடன் வளர்ச்சி திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் 16 சதவீத நிலம் விவசாயிகளுக்கு திரும்பி அளிக்கப்படும், மேலும் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.23,000 மானியமாக 33 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும் என்ற சரத்துக்கள் இந்த புதிய கொள்கையின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.

          இதனிடையே மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பருகுணா ஜோசி அவர்கள் நொய்டா கலவரத்தை எதிர்த்து திரு. ராகுல் காந்தி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து இப்பிரச்சனை தேசிய அளவில் விவாதத்திற்குள்ளானது. இதன் விளைவாக ஏற்கனவே மத்திய அரசின் நில கையகப்படுத்தும் சரத்துக்களை எடுத்துக் கொண்டு மாயாவதி தனது புதிய நிலக் கொள்கையாக அறிவித்துள்ளார். இக்கொள்கை விவசாயிகளுடன் பரந்தளவு விவாதம் மேற்கொள்ளப்படாமல் அறிவிக்கப்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளார்.

          மேலும், இந்தக் கொள்கை பின் தேதியிட்டு அறிவிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பாட்டா-பர்சௌல் இக்கொள்கையினால் பயனேதுமில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இப்புதிய கொள்கையில் வளர்ச்சிப்பணிகளுக்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அக்குறிப்பிட்ட நிறுவனத்தில் பங்குதாரராகவும் ஆக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வளர்ச்சி பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் 16 சதவீதம் விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதல்லவா? இந்தச் சரத்துக்களை பொருத்தமட்டில் 16 சதவீதம் என்பதை நிலையானதாகக் கொள்ளக் கூடாது, மாறாக அங்கே அமையவிருக்கும் தொழிற்கூடங்களின் தன்மை தங்கள் நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

          இந்த கருத்தையே சற்று விரிவாகச் சொல்ல வேண்டுமானால் இயற்கை வளங்கள் உள்ள பகுதிகளை கையகப்படுத்தும் போது எத்தகைய இழப்பீடு மற்றும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது குறித்து அசோக் சாவ்லா கமிட்டி அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதில் கனிம சுரங்கங்கள் அமைப்பதற்காக அல்லது நிலக்கரி, பெட்ரோலிய பொருட்களை எடுப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் போது அந்த தொழிற்கூடங்களின் மதிப்பிற்கேற்ப இந்த நிலத்தின் மதிப்பு எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்கிற பார்முலாவை இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இந்த பார்முலாவை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சிப்பணிகளுக்கான நிலத்தின் சதவீதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்( Percentage of allotment or developed land). மேலும், நிறுவன பங்குதாரர்கள் என்ற நடைமுறை பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகும். சிறு விவசாயிகள் இந்த நடைமுறையை அறிந்து செயல்படுவது சிரமம் என்றும் கருதப்படுகிறது.

புதன், 20 ஜூலை, 2011




          உலகமயம் உழைக்கும் மக்களின் வாழ்வை, அவர்களின் வாழ்வாதாரங்களை மிகக் கொடூரமாய் அழித்து வருகிறது. குரூரமான அதன் கோர முகத்தை இதுவரை எந்த உலகப் புகழ் பெற்ற ஓவியனாலும் சித்தரிக்க இயலவில்லை.
         
          முன்பு தனியார் செய்தவைகளை எல்லாம் இன்று அரசுகள் செய்து வருகின்றன. அரசுகள் செய்ய வேண்டியவைகளையெல்லாம் தனியார்கள் செய்து வருகிறார்கள். முன்பு சாராயம் காய்ச்சி விற்றவர்கள் கல்வி வணிகத்தில் இறங்கிவிட, கல்வித் தந்தைகளாகி விட, கல்வியும் மருத்துவமும் தர வேண்டிய அரசுகள் இன்று சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றன.
         
          "அவர் என்ன வேலை செய்கிறார்? அவரா? தரகு வேலை செய்கிறார்" என்றால், அவரை மிக இழிவாகப் பார்ப்பது எமது பால்ய காலப் பண்பாடு. இன்று அதே வேலைகளை மக்கள் நலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று சொல்லப்படுகிற அரசுகள் செய்து வருகின்றன.
         
          விளை நிலங்களை உழைக்கும் மக்களிடமிருந்து பறித்து, பன்னாட்டு ஏகாதிபத்தியங்களுக்குப் பட்டாப் போட்டுக் கொடுத்து வருகின்றன மக்கள் நலங்களைக் காக்க வேண்டிய அரசுகள். இந்த இழிசெயல்களைத் தோலுரிக்கும் வண்ணம், தமது எழுத்துக்களை, கட்டுரைகளைத் தொடர்ந்து தரவிருக்கிறார் நமது தோழர் அழகேஸ்வரன் அவர்கள்.
         
          இன்று உத்திரப்பிரதேசத்தில் பற்றி எரியும் இந்த பிரச்சனையில் ஆரம்பித்து, தொடர்ந்து இந்தியா முழுமைக்குமாய் விரிக்க இருக்கிறார். வாருங்கள். அவரோடு சேர்ந்து பயணிப்போம்.

தோழமையுள்ள........
பாட்டாளி

உத்திரபிரதேச விவசாயிகள் போராட்டம்

சு.அழகேஸ்வரன்

          உத்திரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிராமத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்திரபிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல் துறையினர் உள்பட நால்வர் இறந்திருக்கிறார்கள்.

          மாயாவதி அரசாங்கமானது, கிரேட்டர் நொய்டாவிலிருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஜே.டி. அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக கவுதம் புத் நகரிலிருந்து ஆக்ரா வரை 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையகப் படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், கையகப்படுத்துதல் என்பது இத்துடன் முடிந்துவிடவில்லை.

          யமுனா எக்ஸ்பிரஸ் பாதை தொழிற் வளர்ச்சிக் குழுமம் (The Yamuna Express way Industrial Development Authority) எக்ஸ்பிரஸ் பாதையைச் சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களையும், விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி அதன்பின்னர் அவற்றை பத்திலிருந்து இருபது மடங்கு விலை வைத்து ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. வீடுகள் கட்டும் கட்டிடக்காரர்களுக்கும் (builders), ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் அவ்வாறு பெற்ற நிலங்களை நூறு மடங்கு விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கின்றன.

          2010 டிசம்பரிலிருந்து உத்திரப் பிரதேச மாநில அரசாங்கமானது அறிக்கை வெளியிட்டது. அதன்படி யமுனா எக்ஸ்பிரஸ் பாதை செல்லும் 6 மாவட்டங்களில் உள்ள 1187 கிராமங்களை யமுனா எக்ஸ்பிரஸ் பாதை தொழிற் வளர்ச்சி அதிகார குழுமத்தின் கீழ் கொண்டு வந்தது. இப்பகுதியில் நகர்புற மையங்களும் (Urban centre’s) தொழிற்பேட்டைகளும் (Industrial areas) கட்ட வேண்டும் என்பதே இக்குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியாகும்.

          நொய்டாவிற்கும் கிரேட்டர் நொய்டாவிற்கும் இடையில் உள்ள நிலங்களை கையகப்படுத்துதலில் என்ன நடைபெற்றது? இப்பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும்போது, ஒவ்வொரு 300 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்திற்கும், விவசாயிகளுக்கும் தலா 50 ரூபாய் என்கிற முறையில் தரப்பட்டது, ஆனால், இன்று அதே இடத்தில் ஜே.பி. கம்பெனி 2500 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறது. இக்கம்பெனி இங்கே மனைகளை ஒரு சதுர மீட்டர் 15 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 50 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதே நிலத்தை 15 ஆயிரம் விற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் விவசாயிகளை கோபமடைய வைத்திருக்கிறது.

          யமுனா எக்ஸ்பிரஸ் பாதை நெடுக இவ்வாறு கடந்த ஓராண்டு காலமாக நிலங்களை விற்ற விவசாயிகள் தற்போது கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அலிகார் மாவட்டத்தில் தப்பால் என்னுமிடத்தில் 2010 ஆகஸ்டில் விவசாயிகள் கிளர்ச்சி & போராட்டம் நடத்திய சமயத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு மூவர் பலியாகினர். மதுரா, ஆக்ரா மற்றும் கவுதம்புத் நகர் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகளின் கிளர்ச்சி & போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

          பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற மே 11ல் நள்ளிரவில் ராகுல் கைது தொடர்ந்து, பி.ஜே.பி யின் முன்னால் தலைவர் ராஜ்நாத்சிங், லோக் ஐன சக்தி தலைவர் ராம்விலாஸ்பஸ்வான், ராஷ்ட்டிரிய லோக்தல் தலைவர் அஜீத் சிங் போன்றவர்களும் கைதானார்கள். விவசாயிகள் பிரச்சனையாக ஆரம்பித்த ஒன்று கிடுகிடுவென ஒரு சில நாட்களில் நாடுதழுவிய சூடான அரசியல் பிரச்சனையாக உருவானதோடில்லாமல், முக்கியமான சில விவாதங்களையும் சமூக வெளிக்கு கொண்டு வந்துள்ளது.

போராட்டக்களம் எழுப்பியுள்ள முக்கிய விவாதங்கள்

          நாட்டில் இதர மாநிலங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ராகுல் உள்பட இந்த அரசியல் தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை, உண்மையில் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்டு போராட்டத்தில் தலையீடு செய்யவில்லை, மாறாக 2012 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் தேடுவதற்குத்தான் இப்பிரச்சனையில் தலையிடுகிறார்கள் என்ற விவாதம் முன்னெழுந்துள்ளது.

          மேலும், இப்பிரச்சனை நில ஆர்ஜித சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்று ஒரு சாரரும், அண்மையில் இப்பிரச்சனை நில ஆர்ஜிதம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல நாட்டின் வளர்ச்சி குறித்த பிரச்சனைதான் என்று மேதாபட்கர் போன்ற சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். நில கையகப்படுத்தும் சட்டத்தின் தேவையை இப்பிரச்சனை உணர்த்துகிறது என்றாலும் மயாவதி போன்ற அரசுகள் இருக்கும்வரை எந்த சட்டமும் விவசாயிகளுக்கு பயனளிக்கப் போவதில்லை என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

          உண்மையில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் விளைவுகளை மாயாவதி அரசு மூடி மறைக்கவும், நியாயப்படுத்தவும் முயலுகின்ற அதே வேளையில் அந்த அரசின் பிரதிநிதிகளில் ஒரு சாரார் மாயாவதி அரசு கையகப்படுத்தும் விசயத்தில் குஐராத் மாநில மாதிரிகளைப் பின்பற்றவில்லை என்றும் ஆதங்கப்படுகிறார்கள்

          அதே வேளையில் சமூக ஆர்வலர்கள் இப்பிரச்சனைக்குக் காரணம் நில கையகப்படுத்தும் நடைமுறைகளில் உருவானதுதான். எனவே, நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோருகின்றனர்.

          ராகுல் காந்தியும், அஜீத்சிங்கும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய பின்னர் நில கையகப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுதான் உடனடித் தேவை. எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்படும் என்று பிரதமர் திரு. மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

          இன்னும் ஒரு படி மேலே போய் சோனியா காந்தியின் தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு இந்த நில கையகப்படுத்தும் சட்டத்தின் வரைவு அறிக்கையில் செய்யப்பட்ட திருத்தங்கள், சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி பேசி வருகின்றன. மேற்கண்ட விவசாயிகள் பிரச்சனை ஏராளமான சர்ச்சைகளுக்கு வித்திட்டாலும் பிரதமர் உள்பட பெரும்பான்மையானோர் நில கையகப்படுத்தும் சட்டத்தின் தேவைபற்றி வலியுறுத்தி வருகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

          எனவே, நாமும் இந்த நில கையகப்படுத்தும் சட்டம் குறித்த விவாதங்களில் சற்று கவனத்தைக் குவிக்கலாம் எனக் கருதுகிறேன்.

நில கையகப்படுத்தும் சட்டம் :
வரைவு அறிக்கை குறித்த விவாதங்கள்

          அரசு தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு இன்றைக்கு இருக்கும் ஒரே சட்டம் நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 1894 (The Land Acquisisation Act 1894) ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மாற்றம் ஏதுமில்லை.

          இச்சட்டத்தின்படி அரசு தனக்கு தனியார் இடம் தேவைப்பட்டால் ஒரு நோட்டீஸ் அளித்து விட்டு அரசு நிர்ணயித்த விலையை கொடுத்தால் போதும். அரசின் பொதுக்காரியங்களுக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டால் தனிநபர் சுதந்திரத்தில் குறுக்கீடு என்று வழக்குப் போட முடியாது. அதிகபட்சம் நிர்ணயிக்கப்பட்ட விலையை மறுபரிசீலனை செய்யக் கேட்டு விலையை நிர்ணயித்த அதிகாரியிடம் மனுப் போடலாம். ‘அரசு’ என்பது “நோட்டீஸ் அளிக்கும் அரசைக் குறிக்கும்” என்று விளக்கம் சொல்லப்பட்டிருப்பதால் மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றாமல் இதையே பயன்படுத்துகின்றன. மேலும் பொது நலம் (பப்ளிக் இன்ட்ரஸ்ட்) என்பது எவை என நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, தற்போது பல்வேறு மாநில அரசுகள் பொது நலன் என்ற பெயரில் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தி வருவதை எதிர்த்து நியாயமான விலை அளிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

          இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவதற்காக இச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் செய்வதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 2007 ஆம் ஆண்டு "நிலம் கையக (திருத்த) மசோதா" உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றவில்லை. தற்போது உத்திரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக இச்சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த புதிய வரைவு மசோதா முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று பிரதமர் தற்போது தெரிவித்துள்ளார்.

          இதற்கிடையில் கடந்த மே 18 ஆம் தேதியன்று வாரணாசியில் பேசிய சோனியா காந்தி, நில கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இப்பிரச்சனை பற்றிய ஒரு வரைவு அறிக்கையை உருவாக்குவதற்காக அவர் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழுவில் ஒரு பணிக்குழு உருவாக்கப்பட்டு வரைவு அறிக்கையும் உருவாக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கை பற்றி மே 25ஆம் தேதியன்று ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் விவாதித்தார்கள். இதுபற்றி மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. தேஷ்முக் அவர்கள் "உருவாக்கியுள்ள வரைவு அறிக்கையில் சில விவாதங்கள் இருப்பதால், அந்தப் பரிந்துரைகளை தனது அமைச்சகம் இறுதிப்படுத்தி சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்" என்று தெரிவித்தார்.

புதிய வரைவு மசோதா பற்றி
தேசிய ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகள்:

          அரசு கையகப்படுத்தும் நிலத்திற்கு அதன் பாதிப்பை விட 6 மடங்கு அதிகமாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு கையகப் படுத்தப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படவில்லை என்றால் அவற்றை பழைய உரிமையாளரிடமே திரும்ப அளித்து விட வேண்டும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசயங்கள் மேற்கொள்ள தேசிய அளவில் கமிஷன் ஒன்றை (National Commission for Land Acquisition. Resettlement and Rehabilitation) (NCLRR) அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்ததையொட்டி இவ்விசயத்தில் மிகவும் அடிப்படையான பிரச்சனையான தனியார் நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய பரிந்துரைகள் எதையும் இக்குழு செய்யவில்லை.

          மேலும், விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி மாநில அரசாங்கங்கள் அவற்றை ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கும் நடைமுறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது பற்றியும் இக்குழு பேசவில்லை. பேசப்போவதும் இல்லை.

வியாழன், 16 ஜூன், 2011



தோழமை நெஞ்சங்களுக்கு வேண்டுகோள் !

அன்பு நண்பர்களே ! வணக்கம்.


திரு. V.A. அருள் ஸ்டெனிஸ்லாஸ் ஜோசப் அவர்கள்,

தற்போது உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்.

திரு. V.A. அருள் ஸ்டெனிஸ்லாஸ் ஜோசப் அவர்கள்,
சாதாரண கூலிவேலை பார்ப்பவர்.
மனைவியை இழந்து ஆதரவின்றித் தன்னந் தனியாய் வாழ்பவர்.
சொற்பக் கூலி வேலையில் வயிற்றைக் கழுவி வரும் அவருக்கு,
இத்தனை பெரிய தொகையும், நோயும் எதிர்பாராதது.
அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும்
மருத்துவச் செலவுக்கு யாரிடம் போவது ?

அன்பு நெஞ்சங் கொண்ட உங்களிடம் வந்திருக்கிறோம்.
தாராளமாக நிதி உதவி செய்து அவரின் வாழ்க்கைப் பயணம் தொடர
வழி செய்யுங்கள் என அன்போடு வேண்டுகிறோம்.

நிதி உதவியை நேரில் அளிப்பவர்கள் தவிர,
பணவிடை, காசோலை, வரைவோலையாக அனுப்புபவர்கள்
கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு / முகவரிக்கு
அனுப்புமாறு வேண்டுகிறோம்.

V.A. அருள் ஸ்டெனிஸ்லாஸ் ஜோசப்
A/C No : 29649 Code : CBS 93
IOB TIRUCHIRAPALLI - CONTONMENT BRANCH

தோழமையுள்ள...... 
திரு. வே.பூ. இராமராஜ், பொதுச்செயலாளர், TVS SIEU
பேச : 9865172829
தொடர்புக்கு :
1/187, நாடார் சத்திரம், வாசன் சிட்டி,
சோமரசம் பேட்டை அஞ்சல், திருச்சி - 620 102.

பாட்டாளி
மாநில பொதுச் செயலாளர்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

சனி, 4 ஜூன், 2011



ஆசிய துணைக்கண்டத்தில் ஆயுதப் போட்டி


கௌதம் தத்

தமிழில் - சு அழகேஸ்வரன்

          2009ம் வருடம் மூன்று ரஷ்ய - இஸ்ரேலிய உளவு விமானங்கள் புதுதில்லிக்கு வந்தவுடன் இந்திய விமானப்படை தொழில்நுட்ப ரீதியாக பாகிஸ்தானைவிட பலமான நிலைக்குச் சென்று விட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் இன்று பாகிஸ்தான் இந்திய எல்லைகளை ஊடுருவித் தாக்கக் கூடிய திறன் பெற்ற சீனாவின் விமானங்களை தனது படையில் சேர்த்துக் கொண்டுள்ளதால் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட இடைவெளியை இட்டு நிரப்பி முன்னேறிய நிலைக்குச் சென்று விட்டதாக அறிய முடிகிறது.

   இதை எதிர்கொள்ள இந்தியா “வானத்தின் கண்” என்று அழைக்கப்படுகின்ற வான்தாக்குதல்களை முன்கூட்டி அறியும் மற்றும் கட்டுப்படுத்தும் முறையை (Air borne early warning and control system AEW&C) அதிகப்படியாக வாங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களின் தாக்குதல்களை முன்கூட்டி கண்டறிந்து எதிர்கொள்ள முடியும் என்று தற்போது இந்திய விமானப்படை அதிகாரிகள் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

          முன்னதாக 1.1பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மூன்று இஸ்ரேலிய ஃபால்கன்களை (Phalcon) வாங்கியதன் மூலம் உலக அளவில் இந்தியா மிகச் சிறந்த வான்வழி கண்காணிப்புத்திறனைப் பெற்றுள்ளது. இந்த ஃபால்கான்களை ரஷ்ய நாட்டின் Modified Transporter 1L – 76ல் பொருத்துவதின் மூலம் அவை வான் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் விரைவான தேடுதல் வசதியுடன் விரிவான பகுதிகளைப் பாதுகாப்பதற்கான திறனைப் பெற்றுவிட்டோம் என்றும் இந்திய அதிகாரிகள் வாதிட்டார்கள். ஆனால் ரஷ்யாவின் 1டு -76 ட்ரான்ஸ்போட்டா விமானத்தில் இஸ்ரேலிய ஃபால்கன் ரேடார்களை இந்தியா பொருத்தியுள்ளது போல் பாகிஸ்தான் சீனாவுடைய ZDK – 03 என்ற பெரிய விமானத்தில் பொருத்தக்கூடிய சுவீடன் நாட்டு Swedish Erieye system தனது படையில்  சேர்த்துள்ளதின் மூலம் மேற்கண்ட தொழில்நுட்ப இடைவெளிகளை இட்டு நிரப்பியுள்ளதாக இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

          சிறிய ஒரு நாட்டிற்குப் பெரியதொரு எண்ணிக்கையாகப் பத்துக்கும் மேற்பட்ட இம்மாதிரி போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

          இது இந்தியா தொடர்ச்சியாக Phalconகளை வாங்கிவருவதன் மூலம் துணைக்கண்டத்தில் இது ஓர் ஆயுதப்போட்டி ஏற்பட வழிவகுத்துள்ளது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ள வான் தாக்குதல் கண்காணிப்புக் கருவியை எல்லோரும் தற்போது எதிர்பார்த்துள்ளார்கள். இந்த தயாரிப்பானது பிரேசில் நாட்டின் எம்ப்ரேயா - இ.எம்.பி - 145 (EMBRAER –EMB 145) விமானத்தில் பொருத்தப்பட உள்ளது. இது இந்தியாவின் வான்படைத் தாக்குதல் திறனுக்கு பலமான அடித்தளத்தை உருவாக்க வல்லமை பெற்றது.

          இந்தியா சோதனை ஓட்டத்தை நடத்த உள்ள இந்த நிலையில் பாகிஸ்தான் ரிவர்ஸ் எஞ்சினியரிங் முறையில் சீனாவால் உருவாக்கப்பட்டுள்ள ZDK – 03 விமானங்கள் நான்கில் ஒன்றை தனது படையில் சேர்க்க உள்ளது. பாகிஸ்தான் சுவீடன் நாட்டிலிருந்து மூன்று எரிஐயை (Eri eye) ஏற்கனவே வாங்கியுள்ளது.

          பிரேசில் கிரீஸ் மற்றும் மெக்சிக்கோ நாடுகள் போல பாகிஸ்தானும் தனது இயக்க மையங்களுடன் எரிஐ களை தரை வழியாக இணைத்துள்ளது (Connected by Eri eye interface segment) என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். பிரேசில் நாட்டு வல்லுநர் ஸொயோ ரிகார்டோ எக்ஸ்பிரஸ் நாளிதழ்களிடம் இஸ்ரேலிய AWE&C ஸிஸ்டம் மிகவும் மேம்பட்டதாகையில் இந்தியா எப்பொழுதும் முன் நிற்கிறது என்ற போதிலும் பிறரும் வேகமாக தொடர்கிறார்கள் என்று கூறினார். இஸ்ரேல் அமெரிக்காவின் நிர்பந்தத்தின் காரணமாக ஃபால்கான்களை சீனாவிற்கு அளிக்க மறுத்து வருகிறது என்றும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

(“இது கடந்த 30.01.2011 அன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேட்டில் திரு. கௌதம் தத் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்”)




சனி, 12 பிப்ரவரி, 2011

அம்பேத்கர் திரைப்படம்

 


            தமிழ்நாட்டை மஞ்சள் துண்டு மகான் கருணாதியின் குடும்பமே கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பேரன்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது திரைப்படத் துறையும், திரைப்பட வெளியீடும், காட்சியிடத் திரையரங்கும்.

            வணிக ரீதியிலான சிறிய மூலதனத் திரைப்படங்கள் கூட திரையிடத் திணறும் இந்தச் சூழலில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வெளியீடான பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தைத் திரையிட எந்தத் திரை வணிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முன் வருவதில்லை.

            இந்தச் சூழலில் முற்போக்கு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு நகரிலும் அம்பேத்கர் திரைப்படத்தைத் திரையிட முன்முயற்சி எடுத்து தோழர்கள் திரையிட்டும் வருகிறார்கள்.

            அதன் வரிசையில் திருச்சி மாநகரிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன் கையெடுப்பில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சமூக சிந்தனை உயிர்ப்பியக்கம், சிஐடியு மற்றும் வங்கி, காப்பீடு ஊழியர்கள் சங்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது,

            திருச்சி மாநகரில் 'மெகா ஸ்டார்' திரையரங்கில் எதிர் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் இரவுக் காட்சியும் (இரவு 8.00 மணி), 16, 17 ஆகிய தேதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு என பகல் காட்சியும் திரையிடப்படவுள்ளது. திருச்சி மாநகர மக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

தோழமையுள்ள........
பாட்டாளி
மாநில பொதுச் செயலாளர்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்.

சனி, 22 ஜனவரி, 2011

கட்டுரை வெளி......





நேரடி வரிவிதிப்புக்கொள்கை
வரைவு அறிக்கை மீதான விவாதங்களும் - திருத்தங்களும்

- சு.அழகேஸ்வரன்

            அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செலவுகளுக்கு அடிப்படையானது அதன் வரிவருவாய். இந்த வருவாய் நேரடி வரிகள் மூலமாகவும், மறைமுக வரிகள் மூலமாகவும் திரட்டப்படுகிறது. நேரடி வரிகள் என்பவை குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஈட்டுகின்ற வருமானம் மற்றும் சொத்துகள் மீது விதிக்கப்படுபவை. மறைமுக வரிகள் என்பவை சரக்கு உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, சேவைப் பணிகள் தொடர்பாக விதிக்கப்படுபவை. இதில் மறைமுக வரிகளின் சுமையானது, சரக்குகள் மற்றும் சேவைகளை உபயோகிப்பவர்களான பொதுமக்கள் மீதே விழுகிறது. நேரடி வரிகள் மட்டுமே வரி செலுத்தக்கூடிய நபரின் அல்லது நிறுவனத்தின் வருமானம், சொத்து ஆகியவற்றின் மதிப்பைப் பொருத்து அந்தந்த நபர் அல்லது நிறுவனத்தின் மீது விழுகின்ற சுமையாகும்.

            அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரிவருவாயில் மறைமுக வரிகளின் பங்கு குறைவாகவும், நேரடி வரிகளின் பங்கு கூடுதலாகவும் அமைவது மக்கள் நலன் சார்ந்த வரிக்கொள்கையாகக் கருதப்படும். நம்நாட்டில் இன்று நிலைமை இவ்வாறாக இல்லை என்பது வெளிப்படை. இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நேரடி வரிகள் விதிப்பு கொள்கையில் விரிவான மாற்றங்களை கொண்டு வரும் நோக்கத்துடன் கடந்த 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தில் செய்யப்படஉள்ள திருத்தங்களை புதிய நேரடி வரிக்கொள்கை என்ற பெயரில் வரைவு அறிக்கையாகத் தயாரித்து விவாதத்திற்கு வைத்திருந்தது1. கடந்த 2009 ஆகஸ்ட் 12-ம் தேதி மத்திய நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி இந்தக் கையேட்டை அறிமுகப்படுத்தி அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கோரியிருந்தார்.

1. இக்கையேட்டில், வரிவிதிப்புச் சட்டங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமைப்படுத்திக் கொடுப்பதும், வரிவிதிப்பு தொடர்பான நீதிமன்ற வழக்கு இழுத்தடிப்புக்கான வாய்ப்பைச் சுருக்குவதும், இந்த புதிய முயற்சியின் நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

2. நேரடி வரிகள் அனைத்தையும் வருமான வரி, லாப பங்கீடு (Devident) மீதான வரி, பணமாக அன்றி இதர வகையில் பெறப்படும் சலுகைகள் மீதான வரி மற்றும் சொத்துவரி ஆகிய நான்கும் ஒரே வரிவிதிப்புக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மாத வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதுவரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகள் பலவும் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படும். விடுப்பு நாள்களை ஒப்படைத்து அதற்கு ஈடாகப் பெறப்படும் பணப்பயன், சில விசேசப்படிகள், விடுப்பு பயணச்சலுகை, மருத்துவச் செலவுகளுக்குப் பணம் வழங்குவது, வீட்டு வாடகைப்படி அல்லது சலுகை வாடகையில் குடியிருப்பு வசதி போன்றவையெல்லாம் இனி வரிவிதிப்புக்குள்ளாகும். அதைவிடக் கொடுமை வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு சேமிப்புகளுக்கு அவற்றை திரும்பப்பெறும் கட்டத்தில் (பணி ஓய்வின்போது, பணியைவிட்டு செல்கையிலோ) அந்தத் தொகைகள் அனைத்தின் மீதும் வரி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

            மேலும் இந்த வரைவு அறிக்கை பாராளுமன்றத்தின்; மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்படும் என்றும் இந்தச் சட்டம் 2011 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரைவு அறிக்கையின் மேல் கடும் சர்ச்சைகள் எழுந்தது. எனவே இவ்வறிக்கை பற்றி பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு திருத்தங்களுடன் 2010 ஜீன் 14 அன்று மீண்டும் புதிய வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டது. மேலும் திருத்தப்பட்ட இந்த வரைவு அறிக்கையின் மீதான கருத்துக்களை ஜீன் 30-க்குள் தெரிவிக்குமாறும் அரசு கோரியிருந்தது2.

புதிய வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள சில முக்கிய திருத்தங்கள் :

            திருத்தங்களுடன் வெளியிடப்படும் வரைவு அறிக்கையில் அரசு வருமான வரி விதிப்பு அளவுகளில் (TAX Slab) மாற்றம் செய்யும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வரிவிதிப்பு அளவுகளில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்ததே தவிர என்ன மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படவில்லை. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்கேட்ட பின்பே வரிவிதிப்பு அளவுகள் குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றும் மக்களவையில் இந்த நேரடி வரிகள் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும்போது வரிவிதிப்பு அளவுகள் தெரியவரும் என்றார்.

1. புதிய வரைவு அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.1.6 - ரூ.10 லட்சம் வருவாய் பிரிவினருக்கு 10% வரியும், ரூ.10 - ரூ.25 லட்சம் வருவாய் பிரிவினருக்கு 20% வரியும், ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவருக்கு 30% வருமான வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. (இப்போதைய நிலையில் ரூ.1.6 - ரூ.3 லட்சம் வருவாய் பிரிவினருக்கு 10% வரியும், ரூ.5 - ரூ.8 லட்சம் பிரிவினருக்கு 20% வரியும், ரூ.8 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உடையோருக்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).


2. சேமநல நிதி, பொது சேமநல நிதி, மற்றும் ஓய்வூதியத்திலிருந்தும் பணம் எடுக்கும்போது வரிவிதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு மாதச்சம்பளம் வாங்குவோர் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாதுகாப்புத்துறையில் ஊழியர் அமைப்பான, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (All India Defence Employees Federation) கடந்த மார்ச் 15-ம் தேதியன்று இந்த சரத்துக்களை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது.

            பிஎஃப் மற்றும் ஓய்வூதியத்திலிருந்து பணம் எடுக்கும்போது வரிவிதிக்கும் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வட்டியாக செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் வரிச்சலுகைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

II. நேரடி வரிகள் ஒழுங்குமுறை மசோதா

            அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியன்று மத்திய அமைச்சரவை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. நேரடி வரிவிதிப்பிற்கான நெறிமுறைகள் (Direct Taxcode-DTC) என்று அழைக்கப்படும் இந்த வரைவு அறிக்கை, நேரடி வரிகள் ஒழுங்குமுறை மசோதா என்ற பெயரில் (Direct Taxcode Bill) கடந்த 30.08.2010 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது3. பாராளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்குப்பின்னர் (Parlimentry selection Committee) பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்பின்னர் இந்த வரிவிதிப்பு அளவுகள் மத்திய பட்ஜெட்டில் ஒரு பகுதியாக இல்லாமல் மத்திய அரசின் சட்டமாக மாறிவிடும். அதனால் இது குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றங்கள் ஏதும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கோ அல்லது 10 ஆண்டுகளுக்கோ கூட அமலில் இருக்கும். இடையிலே வரம்புகளில் மாற்றம் தேவையென்றால் பாராளுமன்றத்தை அணுகி ஒப்புதல் பெறவேண்டும். ஆண்டுதோறும் பட்ஜெட்டில் வரிவிகிதங்கள் அறிவிக்கப்படமாட்டாது. மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கையின் வாயிலாக மாற்றங்களைச்செய்ய முடியாது.

புதிய அறிக்கையில் அமைச்சரவை செய்துள்ள மாற்றங்கள்:

            முன்பு ரூ.1லட்சத்து 60 ஆயிரம் வரை வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. மசோதாவில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10சதவிகிதமும், ரூ.5லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், ரூ.10 லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு 30 சதவிகிதமும் வரி விதிக்கப்படும்.

            தனிநபர்வரிவிதிப்பு மற்றும் வரிவிதிப்புஅளவுகள் சம்பந்தமாக தற்போதைய நடைமுறை / முதல் வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் / மசோதாவில் முன்வைக்கப்பட்டவைகள் சம்பந்தமாக ஓர் ஒப்பீட்டிற்காக கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்ப்போம்.


            இந்த மசோதா அமல்படுத்துவதன் மூலம் அரசிற்கு ரூ.53,172கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் எனவே 2012 - 13-ல் வரிவருவாய் ரூ.5 லட்சத்து 25கோடியாகத்தான் இருக்கும் என்றும் கடந்த 30.08.2010 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நிதித்துறை செயலாளரான திரு.சுனில்மித்ரா அவர்கள் தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு 2011 ஏப்ரல் முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று முன்னதாகத் தெரிவித்த கருத்துக்கு மாறாக 2012 ஏப்ரல் முதல்தான் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் வரிசெலுத்துபவர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் புதிய வரிவிதிப்பு பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்துகொள்வதற்காகவும் திட்டமிடுதலுக்காகவும் ஓராண்டு காலதாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்4.

            இனி, நடைபெற்ற பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் பிரச்சனைக்கு வருவோம். முன்னதாக நிதியமைச்சர் அவர்கள் இக்கூட்டத்தொடரில் மசோதா ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவித்தார் அல்லவா? ஆனால் நடந்தது என்ன? கடந்த நவம்பர் 9-ம்தேதி தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தால் பாராளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியதால் மக்கள் வரிப்பணம் ரூ.146 கோடி வீணானதுதான் மிச்சம். நேரடி வரிகள் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவேயில்லை.

            இந்நிலையில் உலக நிதி ஒழுங்குநிலை அமைப்பின் சார்பாக நிதித்துறை முறைகேடுகள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விசயங்களுக்கும் வரிகள் மசோதாவிற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் இம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்பொழுது திட்டவட்டமாக சில பிரச்சனைகளை எழுப்பி மசோதாவில் திருத்தங்களை நாம் கோரவேண்டியுள்ளது.

III.. நேரடி வரிகள் மசோதாவில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள்

            அமெரிக்காவில் உள்ள பன்னாட்டுக் கொள்கை மையம் என்ற நிறுவனத்தின் நிதி ஆராய்ச்சி பிரிவான உலக நிதி ஒழுங்கு நிலை (Global Financial Integrity-GFI) என்ற அமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச நிதியத்தின் பொருளாதார வல்லுனராக பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு மேற்கொண்ட சர்வதேச நிதித்துறை முறைகேடுகளைப்பற்றியதாகும்.

            இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியாவில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் சுமார் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் கோடி இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68% (620000 கோடி ரூபாய்) 1991-ம் ஆண்டுக்குப்பின் வெளியேறியுள்ளது. அதாவது 60 ஆண்டுகளில் கடத்தப்பட்ட பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு கடந்த 20 ஆண்டுகளில் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டுள்ளது5.

வரி நிர்ணயமும், வரி ஏய்ப்பும்:

            இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட காலத்தில் பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் “வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான வரி விகிதமும் அதிகரிக்க வேண்டும்” என்றிருந்த முந்தைய அரசுகளின் கண்ணோட்டம் கைவிடப்பட்டது. வருமான வரி அதிகமாக இருப்பதால்தான் பலரும் வரிஏய்ப்புச் செய்கிறார்கள் என்றும் அதிகபட்ச வருமானவரி 30% மேல் இல்லாமல் இருந்தால் எல்லோரும் நியாயமாகவும், நேர்மையாகவும் தங்களது வருமானத்தை வெளிப்படுத்தி வரி செலுத்தி விடுவார்கள் என்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள். வரி ஏய்ப்பை முற்றிலுமாக ஒழிக்கவும், கருப்பு பணமே இல்லாத பொருளாதாரமாக இந்தியாவை மாற்றவும் உலக வங்கியின் சார்பில் இவர்கள் முன்வைத்த உத்தி இதுதான்.

            ஆண்டுக்கு 5 லட்சம் வருமானம் உள்ளவரும், 500 லட்சம் வருமானம் உள்ளவரும் 30 சதவிகிதம் வரி கட்டுவது என்பது பகுத்தறிவிற்கு ஒவ்வாதது என்று சுட்டிக்காட்டபோது இக்கருத்துகள் எள்ளி நகையாடப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இக்காலத்தில் மாத வருமானம் பெரும் மத்திய தரக் குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக வரிவலைக்குள் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் பெருவாரியோர் நேர்மையாக வரி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, 30 சதவிகிதம் அதிகபட்ச வரிவரம்பால் பயனடைந்தவர்கள் பன்னாட்டு நிறுவனர்களும், கோடியில் வருமானம் உள்ள பிரிவினர்களும்தான். இதனால் அரசிற்கு எவ்வித பயனும் இல்லை. வரி ஏய்ப்பும், கருப்பு பணமும் ஒழியவில்லை என்பதுதான் உலக நிதி அறிக்கையின் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மையாகும். வரிவிகிதத்தைக் குறைப்பதால் வரிஏய்ப்பு குறைந்துவிடும் என்ற வாதத்திற்கு முன்னுதாரணமாக பொதுவாக அமெரிக்காவையே காட்டுகிறார்கள். நாம் அமெரிக்காவையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அந்நாட்டில் 2 சதம் அல்லது 3 சதம் கலால் வரி உள்ள பொருள்களில் வரி ஏய்ப்புச் செய்த குற்றத்திற்காக ஆண்டுதோறும் அபராதம் செலுத்தும் எண்ணிக்கை நாளும் உயர்கிறதே தவிர குறைவில்லை என்பதுதான் உண்மை6.

நேரடி வரிகள் மசோதாவும், அதிகபட்ச வரிவரம்பும்:

            இந்நிலையில்தான் தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கான முன்வைக்கப்பட்டிருக்கும் நேரடி வரிகள் மசோதாவில் அதிகபட்ச வரிவரம்பு பற்றிய சரத்து மீதான விமர்சனங்களை முன்வைத்து திருத்தங்களைக் கோரவேண்டியுள்ளது. இந்த மசோதாவில் ரூ. 10 லட்சம் மேல் வருமானம் பெறும் அனைவருக்கும் 30 சதவிகிதம்தான் அதிகபட்ச வருமான வரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 240 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வரிசெலுத்தாமல் வெளியேறுகிறது என்று உலக நிதி ஒழுங்கு நிலை அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ள நிலையில் இந்த வரி நிர்ணயம் ஒரு அநீதியாகும்.

அதிகபட்ச வரி வரம்பில் திருத்தம் கோருவோம்:

            முன்னதாக நேரடி வரிகளுக்கான வரைவு அறிக்கையில் மாத வருமானத்தினர் மற்றும் மத்திய தர வர்க்கத்திற்கு விரோதமாக முன்வைக்கப்பட்டிருந்த சரத்துகள் கடும் எதிர்ப்பின் காரணமாக அரசு விலக்கிக்கொண்டது (அரசு சேமநல நிதி, பொது சேமநல நிதி, ஓய்வு ஊதியத்திலிருந்து பணம் எடுக்கும்போது வரி விதிக்க பரிந்துரைக்கும் சரத்துக்கள்) அரசின் இந்த நடவடிக்கையில் மட்டும் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது. மேலும் கடந்த 12.01.2011 அன்று நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் தற்பொழுதுள்ள வருமான வரி வரம்பை ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டுமென்று நிதியமைச்சகம் வலியுறுத்தின. இது ஒரு சரியான முன்வைப்புதான் என்றபோதும் இத்துடன் நிறுத்திக்கொள்ளக்கூடாது. மாறாக, உலக நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கீழ்க்கண்ட விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். “சட்ட விரோதமாக இந்தியாவிலிருந்து வெளியேறிய நிதியை தடுத்திருந்தால் 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிலிருந்த 23060 கோடி டாலர் வெளிநாட்டு கடன்களையும் அடைத்திருக்க முடியும். எஞ்சுகின்ற தொகையை வறுமை ஒழிப்பிற்கு பயன்படுத்திருக்க முடியும்”.

            எனவே, எதிர்வரும் பிப்ரவரி 2011-ல் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2012 ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்7, வரி வரம்பில் திருத்தம் கோரி விவாதங்களையும், மக்கள் இயக்கங்களையும் முன்னெடுக்கவேண்டும்.

ஆதாரம்:

1. Direct Tax Code. www.Fin.min.nic.in
2. Revised Direct Tax Code. www.Fin.min.nic.in
3. Direct Tax Bill. www.Fin.min.nic.in
4. The Hindu, Tiruchirappalli Edition 31.08.2010.
5. The Drivers and Dinamics of Illicit Financial Flows From India 1948 – 2008 Authored by Dr.Kar. http://india.gfip.org.
6. தினமணி திருச்சிராப்பள்ளி பதிப்பு, தலையங்கம் 19.11.2010.
7. The Hindu, Tiruchirappalli Edition 15.12.2010.









வெள்ளி, 21 ஜனவரி, 2011

கருத்தரங்க அழைப்பிதழ்



 1938 - 1939 சன - 15, மார்ச் 11, 1965 சன - 25
மொழிப்போர் தியாகிகள் தொடங்கி...
2009 சன - 29,
தியாகி முத்துக்குமார் வரை


கருத்தரங்கம்

26.1.2011 புதன் மாலை 5 மணி,
மணியம்மையார் மழலையர் பள்ளி,
வடக்குமாசி வீதி, மதுரை 1

தலைமை
தோழர் பாட்டாளி
பொதுச் செயலாளர் த.ம.ப.க

வரவேற்புரை
த. அருள்மொழி த.ம.ப.க

கருத்துரை

பா. செயப்பிரகாசம்
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
பேரா. அறிவரசன்
நாகை. திருவள்ளுவன்
தலைவர், தமிழ்ப் புலிகள்
பி. வரதராசன்
தலைவர், புரட்சிக் கவிஞர் மன்றம்
லோகசங்கர்
துணைத் தலைவர், த.ம.ப.க
சிற்பிமகன்
துணைத் தலைவர், த.ம.ப.க

நன்றி உரை
க. இராம்குமார் த.ம.ப.க

1965 மொழிப்போர் போராளிகள்
பா.செயப்பிரகாசம்
ஐ.செயராமன் ஆகியோர்
கௌரவிக்கப்படுகிறார்கள்

தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
தொடர்புக்கு : 94431 84051