தோழர் சு. அழகேஸ்வரன் அவர்கள்
கூர்மையான இடதுசாரிச் சிந்தனையாளர்.
நவீன இலக்கியங்களின் தீவீர வாசிப்பாளர்.
தன் வாழ்வின் பெரும்பகுதியை தொழிற்சங்கக் களத்திலேயே கழிப்பவர்.
திருச்சி படைக்கலத் தொழிலகத்தில் (OFT) நீண்ட காலப் பணி அனுபவம் உள்ளவர்.
தமிழியற் நூற் புலங்களில் இதுவரை கவனம் குவிக்கப்படாத எழுதப்படாத
இந்தியப் பாதுகாப்புத் துறை குறித்தும்
அதன் கொள்கைகள் குறித்தும்
படைக் கலத் தொழிற்சாலைகள் குறித்தும்
விரைவில் நூல் ஒன்று எழுதவுள்ளார்.
அதற்கான வெள்ளோட்டமே இக் கட்டுரை.
தோழமையுள்ள.....
பாட்டாளி
இஸ்ரேல் நாட்டுடனான இராணுவ உறவைத் துண்டிக்குமாறு
இந்திய அரசைக் கோருவோம்
- சு. அழகேஸ்வரன்
கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தில் காசா (GAZA) பகுதியில் இஸ்ரேல் கொடிய தாக்குதலை நடத்திவருகிறது. எவ்வித வசதியும் இல்லாத பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பலையும் இஸ்ரேல் படைகள் தாக்கி வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு பாலஸ்தீனியம் அழைப்பு விடுத்து பிரச்சார நடவடிக்கைகளை (Boycott, De-invest and Sanctions (BDS) Movement) மேற்கொண்டுள்ளது. இந்த பிரச்சார இயக்கத்தை இந்தியாவில் முனைப்புடன் கொண்டுசெல்லும் நோக்கில் கடந்த செப்-23,24 தேதிகளில் “பாலஸ்தீனத்தில் அமைதி வேண்டும்” (A Just Peace for Paleastine) என்ற பொருளில் தலைநகர் டெல்லியில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய இடதுசாரித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமாகிய மணிசங்கர் அய்யர் அவர்களும், பாலஸ்தீன மக்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர். முஸ்தபா பர்கோடி, வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மன்சூர்கான், வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் மொய்தீன்கான், பாலஸ்தீனப் போராளிக் குழுக்கள் பேச்சாளர்கள், ஜமால் ஜீமா, ஜமால் ஜகல் கா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் இஸ்ரேலுடனான இராணுவ உறவை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்றும்” சர்வதேச அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.1
பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் தேசபக்தி கொண்ட சிவிலியன் ஊழியர்கள் என்ற முறையில் இப்பிரச்சனை நம்முடன் நேரடித் தொடர்பு கொண்டதால் இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான புறக்கணிப்பு பிரச்சாரத்தை நாம் வலுவுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது. நேரடித் தொடர்பு என்று சொல்லும் பொழுது கீழ்க்கண்ட மூன்று விசயங்களை அர்த்தப்படுத்த விழைகிறேன்.
1. பாலஸ்தீன மக்களின் உரிமைக்கு ஆதரவு என்ற வரலாற்று பூர்வமான நிலைபாட்டிலிருந்து இந்திய அரசு தற்பொழுது இஸ்ரேல் சார்பு நிலைபாட்டிற்கு சென்று கொண்டிருக்கிறது.
2. ஆயுதத் தளவாட உற்பத்தியில் நாட்டின் சுயசார்பை கைவிட்டு இஸ்ரேல் நாட்டிடமிருந்து ஆயுதங்களை பெருமளவிற்கு இறக்குமதி செய்வது.
3. பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் நடத்திய ஊழலைக் காரணம் காட்டி பாதுகாப்புத் தொழிற்சாலைகளை கார்ப்பரேசனாக்கும் முயற்சிகள்.
1. திசைமாறிச் செல்லும் இந்திய அயலுறவுக் கொள்கை :
இந்தியாவுடன் வரலாற்று சிறப்புமிக்க நட்பையும், உறவையும் கொண்டிருந்த அரபு மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் இந்தியா தற்போது நடந்துகொண்டு வருகிறது. 1948-ல் பாலஸ்தீனத்தை யூதர்கள் பகுதி, அரேபியர்கள் பகுதியென ஐ.நா சபை பிரித்ததை எதிர்த்து வாக்களித்த இந்தியா மிகுந்த தயக்கத்துடனே 1950-ல் இஸ்ரேலிய அரசை அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களின் உரிமையை இஸ்ரேல் பறித்ததை தொடர்ந்து, இந்தியா ஏறத்தாழ 40 ஆண்டுகள் இஸ்ரேலுடன் முறைசார்ந்த உறவு எதையும் வைத்துக் கொள்ளவில்லை. 1975-ல் ஜியோனிசம் (Zionism) என்பது இனவாதம் என்னும் ஐ.நா சபையின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.2
ஆனால் சோவியத் யூனியன் தகர்ந்ததும் 1992-ல் ஏற்பட்ட உலக அரசியல் மாற்றங்களால் குறிப்பாக அமெக்காவின் நிர்ப்பந்தத்தின் கீழ் சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொண்ட சூழலில் நரசிம்மராவ் அரசு இஸ்ரேலுடன் முறைப்படியான இராஜதந்திர உறவுகொள்ளத் தொடங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்து வந்த காங்கிரஸ், பா.ஜ.க அரசாங்கங்கள் மிகத்துரிதமாக இஸ்ரேலுடன் இராணுவ, பொருளாதார அரசியல் உறவுகளை வளர்க்கத் தொடங்கின. மேற்கு ஆசியா குறித்த இந்தியாவின் புதிய கொள்கையானது ஒருபக்கம் இஸ்ரேல் ஆதரவு என்றால் மறுபக்கம் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரிப்பது என்கின்ற அதன் பாரம்பரியமான கொள்கையை கைவிடுதல் என்பதாக அமைகிறது. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ளாத உலகத்தலைவர்களில் ஒருவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிஸ்புல்லாக்கள் (HEZBOLLAH) சில இஸ்ரேலிய வீரர்களை கடத்தியதை காரணம்காட்டி லெபனான் மீது இஸ்ரேல் ஒரு போரைத் தொடங்கியபோது “ஹிஸ்புல்லா அமைப்பு இப்படி இஸ்ரேல் வீரர்களை கடத்தியிருக்கத் தேவையில்லை” என்று கூறியது. ஆனால் போர் தொடுத்த இஸ்ரேலை, இன்று காசாவில் உள்ள 50 லட்சம் பாலஸ்தீனர்களை முற்றுகையிட்டு உணவுக்கும், மருந்துக்கும்கூட வழியின்றி சாகடிக்க முயன்றபோதும் கண்டிக்கவில்லை.
2. பாதுகாப்புத்துறையில் நாட்டின் சுயசார்புக்கு மாறாக இஸ்ரேலைச் சார்ந்திருத்தல் :
1997-ம் வருடம் இஸ்ரேலின் ஜனாதிபதி எஸ்ஸார் வைஸ்மேன் (Ezer Weizman) முதன்முதலாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர், அன்றைய இந்திய நாட்டு ஜனாதிபதி திரு.சங்கர் தயால் சர்மா மற்றும் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இருநாடுகளுக்குமிடையே முதல் ஆயுதத் தளவாட ஒப்பந்தம் போடப்பட்டது. தரையிலிருந்து விண்ணிற்குப் பாயும் பராக்-1 என்ற ஏவுகணை வாங்குவது சம்பந்தமாக முடிவு செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு இஸ்ரேலிய நீர்மூழ்கிக்கப்பல்கள் அணுஆயுதங்களைக்கொண்ட ஏவுகணைகளை இலங்கை கடற்கரையோரப் பகுதியில் சோதனை செய்ய இந்தியா துணைநின்றது. 1999-ல் கார்கில் போரில் இஸ்ரேல் இந்தியாவிற்கு போர்விமானங்களை அளித்தது. காஷ்மீருக்கு இராணுவ நிபுணர்களை அனுப்பி வைத்தது. 2001-ல் இருநாடுகளுக்குமிடையே கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக்குழு (Joint Defence Co-Operation Group) அமைக்கப்பட்டது. இதையொட்டி இஸ்ரேல் ஃபால்கான் அவாக்குகளை (Phalcon AWACKS) வாங்குவதென்று முடிவுசெய்யப்பட்டதுடன் இஸ்ரேலிய நிறுவனமான சோல்டானிடமிருந்து அதிநவீன பீரங்கி ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
2003-ல் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவத் தொழிற்சாலையிலிருந்து வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. அதே ஆண்டில் இஸ்ரேலிய அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் எலியேசர் ஸ்டாண்ட்பெர்க் இந்தியாவிற்கு வந்து இந்தியாவின் ஏவுகணை நிறுவனமான இந்திய விண்ணியல் ஆய்வு மையத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் (Indian Space Recerch Organaisation ISRO). 2004-ம் வருடம் 1.1 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபால்கன் அவாக்குகளை வாங்குவதற்கும் 2005-ம் ஆண்டில் இஸ்ரேலிய விமானத் தொழிற்சாலையிலிருந்து 50 ஹெரோன் அவாக்குகளை வாங்க முடிவு செய்தது. 2008 ஜனவரி 21-ம் தேதியன்று ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள துணைக்கோள் ஏவுதளத்திலிருந்து இஸ்ரேலின் டெக்ஸ்சார் (Tecsar) என்னும் துணைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் டெக்ஸ்சார் தொழில்நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட ரீசாட்-2 (Risat-2) செயற்கைக்கோளை 2009-ல் இந்தியா வடிவமைத்து விண்ணில் ஏவியது.3
இன்றைய கட்டத்தில் ரஷ்யாவிற்கு அடுத்ததாக இஸ்ரேல் நாட்டிலிருந்துதான் இந்தியா அதிகமான யுத்தத் தளவாடங்களை இறக்குமதி செய்துகொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊக்குவிப்போடு லெபனான் மீது இஸ்ரேல் 2006 ஆகஸ்ட் மாதங்களில் நடத்திய ஆக்கிரமிப்புப் போரை லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் வெற்றிகரமாக எதிர்த் தாக்குதல் நடத்தி எல்லையை விட்டு வெளியேற்றினார்கள். இந்த எதிர்த் தாக்குதலில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவான கட்யுஷா (Katyusha) போன்ற ஏவுகணைகளையும், ராடார் கருவியின் உதவியுடன் ஏவப்படும் சி 802 நூர் ஏவுகணைகளையும் பயன்படுத்தி இஸ்ரேலிய போர்க்கப்பலை ஹிஸ்புல்லா அமைப்பினர் செயலிழக்கச் செய்தார்கள்.4
மேலும் ஆயுத உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்பை கைவிட்டு முழுக்க இஸ்ரேல் நாட்டைச் சார்ந்துள்ளதால் நமது ஆயுத உற்பத்தி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இஸ்ரேல் மிலிட்டரி இன்டஸ்ட்ரி இந்தியாவிற்கு ஆயுதம் வழங்குவதில் ஊழல் புரிந்துள்ளதால் தற்போது அந்த நிறுவனத்திடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்திய அரசு தடைசெய்துள்ளது. இதனால் இந்தத் தொழிற்சாலை ஒத்துழைப்புடன் Reverse Engineering முறையில் மேற்கொள்ளப்பட்ட 125 மார்க்-2 (125 Mark-2) என்ற உலோக ஊடுருவி உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி உலோக ஊடுருவி தொழிற்சாலை (HAPP) மற்றும் படைக்கலத் தொழிற்சாலை கமோரியாவும் (OFK) பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரின் விஞ்ஞான ஆலோசகராகவும், பாதுகாப்பு வளர்ச்சி அமைப்பின் செயலாளராகவும் பொறுப்பு வகித்தபோது இந்திய பாதுகாப்பு சுயசார்பு திட்டம் பற்றி கூறிய கருத்துக்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நிலையத்திற்கும், பாதுகாப்பு வளர்ச்சி அமைப்பிற்கும் “ஒத்துழைப்பு ஒப்பந்தம்” (Memorendom Of Understanding - MOU) கையெழுத்தான விழாவில் கலந்துகொண்ட அவர், “நாட்டின் பாதுகாப்பிற்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் நம்மால் உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். தற்போது 40 சதவிகித தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்து வரப்படுகிறது. 2005-ம் ஆண்டில் இது 70 சதவிகிதமாக உயரும். 10 ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு சுயசார்பு திட்டம் 1995 வகுக்கப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்தத் திட்டம் நிச்சயம் வெற்றிபெறும்” என்று தெரிவித்தார். அந்த சுயசார்பு திட்டம் என்ன ஆயிற்று? கடந்த 15 ஆண்டுகளில் நாம் திசைமாறி பயணித்து வந்துள்ளதை நினைத்துப் பார்க்கும்பொழுது சற்று அதிர்ச்சியாக உள்ளது.
3. ஆயுத பேர ஊழலும், கார்ப்பரேசனாக்கும் முயற்சியும் :
கடந்த ஆண்டு பணிஓய்வு பெற்ற படைக்கல வாரியத்தின் முன்னாள் தலைவர் சுதிப்தா கோஸ் (Sudipta Ghosh) பீகார், நாலந்தாவில் ஆயுத பிளாண்டுகளை நிறுவ இஸ்ரேல் நாட்டு இராணுவத் தொழிற்சாலையான இஸ்ரேல் மிலிட்டரி இன்டஸ்ட்ரிஸ் (Isreal Military Industry - IMI )-வுடன் நடத்திய பேரத்தில் ரூ.1200 கோடி ஊழல் புரிந்துள்ளார் என்று கடந்த 2009 மே மாதம் கைது செய்யப்பட்டார்.5 கடந்த 30.06.2010 அன்று புலனாய்வுத்துறை அவருக்கு குற்றப்பத்திரிகை (Chargesheet) வழங்கியுள்ளது.6
2006 - 07 மற்றும் 2008-09-ம் ஆண்டுகளில் படைக்கல வாரியம் செய்துகொண்ட ஒப்பந்தங்களை தணிக்கை செய்து அறிக்கை அளிக்குமாறு தலைமைத் தணிக்கை அதிகாரியை (Controller and Auditor General of India) மத்திய அரசு பணித்தது. தற்பொழுது தலைமைத் தணிக்கை அதிகாரி அரசிற்கு அறிக்கையை அளித்துள்ளார். அவ்வறிக்கையில், பீகார் நாலந்தா தொழிற்சாலைக்கான ஆயுத ஒப்பந்தம் இஸ்ரேல் நாட்டுடன் செய்வதுபற்றி திட்டமிடுவதற்காக கடந்த மார்ச் 2008 விலை நிர்ணயக் குழு (Cost Negotation Committee) ஒன்றை பாதுகாப்பு அமைச்சகம் திரு. சுதிப்தா கோஸ் அவர்கள் தலைமையில் அமைந்தது. அந்தக் குழு அந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான Bi - Modular Charge System BMCS-யை பெறுவதற்கான தொகை ரூ.941.13 கோடி என நிர்ணயம் செய்தது. ஆனால் அந்த மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் போடப்படாததால் டிசம்பர் 2008-ல் ஒப்பந்தம் செய்வது என முடிவு செய்து அப்போதைய தொகையாக ரூ.2160.51 என மறுநிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அமைச்சரவைக் குழுவிற்கு மேற்கண்ட திட்டத்தை அனுப்பி வைத்தபோது மார்ச் 2008-ல் நிர்ணயிக்கப்பட்ட தொகை குறித்து மூடிமறைக்கப்பட்டது.
உண்மையில் ஆகஸ்ட் 2006-ல் ரூ.654.79 கோடிகளுக்கு அளிப்பதற்கு இஸ்ரேல் மிலிட்டரி இன்டஸ்ட்ரிஸ் ஒப்புதல் தெரிவித்திருந்தது. ஆனால் அதை ஏற்காமல் ஒரு சர்வதேச டென்டரை அறிவித்ததையொட்டிதான் பாதுகாப்பு அமைச்சம் இந்த டென்டரை முடிவு செய்வதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைத்தது. ஆகஸ்ட் 2006-ல் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கும், 2008 மார்ச்சில் நிர்ணயிக்கப்பட்ட விலை மதிப்பிற்குமிடையே உயர்வு என்பது 15 சதவிகிதம்தான். ஆனால் 2008 டிசம்பரில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட தொகையான ரூ.2160.5 கோடி என்பது முந்தைய மதிப்புயர்வு சதவிகிதமான 15 சதவிகிதத்திற்கு மாறாக 67 சதவிகிதமாக மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டது என்றும் இதுதான் ஊழலின் ஊற்று மூலம் என்றும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.7
இந்த பேரத்தில் சுதிப்தா கோஸ் அவர்களுக்கும், ஐ.ஆ.ஐ-க்கும் இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. சுதிப்தா கோஸ் ஊழல் புரிந்ததைக் காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதென்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது, பாதுகாப்பு அமைச்சகத்திலிந்து 4 அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு வாரியக் கூட்டத்தில் அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள். கூடுதல் பொது மேலாளர் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரத்தை வாரியத் தலைவரிடமிருந்து பறித்து இனிமேல் பாதுகாப்பு அமைச்சகமே இந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்று முடிவெடுத்தது. அத்துடன் இந்த ஊழலுடன் தொடர்புள்ள 7 நிறுவனங்களை தற்காலிகமாகத் தடை செய்தது. (Banned for the time being).
பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவுகள் சம்பந்தமாக கடந்த ஜீன்- 2009 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ.கே. அந்தோணி அவர்களை சம்மேளனப் பிரதிநிதிகள் சந்தித்தார்கள். அப்பொழுது பாதுகாப்புத் துறையில் நிலவும் ஊழலைக் களைவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் சம்மேளனம் ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஊழலுக்குக் காரணம் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனம்தான் என்றும், எனவே ஆயுத கொள்முதல் நடவடிக்கைகளில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை அரசு சார்ந்திருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக பாதுகாப்பு வாரியத்திற்கு பிரதிநிதிகளை அனுப்புவதென்ற முடிவையும், பாதுகாப்பு வாரியத்தலைவரின் அதிகாரத்தைப் பறிப்பது என்ற நடவடிக்கையையும் கைவிட வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையானது பாதுகாப்பு வாரியத்தை கார்ப்பரேசனாக மாற்ற எத்தனிக்கும் மறைமுக முயற்சிதான் என்று தெரிவித்தார்கள். இதை ஏற்காத பட்சத்தில் சம்மேளனம் போராட்ட இயக்கத்திற்குச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்மேளனத்தின் இந்தத் தலையீட்டிற்குப் பின்னர் தற்காலிகத் தலைவர் (Incharge DGOF) நியமனம் செய்யப்பட்டார். மேலும் புதுடில்லியில் வாரியத்தின் கூட்டத்தை அமைச்சகம் நடத்தியது. அக்கூட்டத்தில் நான்கு அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். தற்போது தெரியவருவது என்னவென்றால் பாதுகாப்பு அமைச்சகப் பிரதிநிதிகளில் நால்வரில் இரண்டு பேர் நிரந்தர அழைப்பாளராக (Permenent Invitees) வாரியக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும், ஏனைய இரண்டு பேரான, கூடுதல் செயலர் பாதுகாப்பு அமைச்சகம் (Additional Secretary MOD)-யும் கூடுதல் செயலாளர் உற்பத்தி (Additional Secretary DP) ஆகியோர் ஒருசில மாதங்களுக்கு மட்டும் கலந்து கொள்வார்கள் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்ரேல் கம்பெனி சம்பந்தப்பட்ட வேறுஒரு ஆயுத ஊழலைப் பற்றியும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 2000 வருடத்தில் கப்பலிலிருந்து ஏவப்படும் (Ship - mounted) இஸ்ரேலிய பராக் ஏவுகணைகளை (Barak Missaile System) தயாரிப்பில் ரூ.1300 கோடி ஊழலில் சம்பந்தப்பட்டதாக மத்திய புலனாய்வுத்துறை அக்-2004 அன்று இஸ்ரேலிய ஆகாய விமானத் தொழிற்சாலை (Isreal Aircraft Industris - IAI) மற்றும் டில்லி ஆயுதத் தரகர் சுரேஷ் நந்தா என்பவர் மீது வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு குறித்து முறையாக விசாரிக்க வேண்டுமென்றும், ஊழல் புரிந்த இஸ்ரேலிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இடதுசாரிக் கட்சிகள் கடந்த மார்ச் 2008-ம் வருடம் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதினர்.8
ஹிஸ்புல்லா என்பது என்ன?
லெபனானிலும், உலகின் பிற பகுதிகளிலும் உள்ள “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு திறந்த மடல்” என்னும் ஆவணத்தின் மூலம் ஹிஸ்புல்லா (அல்லாவின் கட்சி) என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக லெபனானில் உள்ள சியா முஸ்லீம் மதகுருக்கள் 1995-ல் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். 2000 ஜீலை-ஆகஸ்ட் மாதத்தில் தென் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கெதிராக அது நடத்திய உறுதியான தீரமிக்க இராணுவ நடவடிக்கையின் காரணமாக பிற எல்லா ஆயுதம் ஏந்திய குழுக்களை விட வலுமிக்கதாகவும், செல்வாக்குப் பெற்றுள்ளதாகவும் வளர்ந்துள்ளது. இது கொரில்லா தாக்குதல்களை நடத்தும் வெறும் ஆயுதம் ஏந்திய குழு மட்டும் அல்ல, ஓர் அரசியல் கட்சியாகும். தேசிய மற்றும் உள்ளூர்களில் நிலையான அரசியலில் ஊழல்கரைபடியாத ஒரே ஒரு தூய்மையான அரசியல் கட்சி அதுதான். லெபனான் உட்பட அரபு நாடுகள் முழுவதும் விடுதலையை தனது குறிக்கோளாகக்கொண்ட தேசப்பற்றுள்ள ஒரு அமைப்பு. லெபனானிய சமுதாயம் முழுவதுமே இப்போது ஹிஸ்புல்லாவை ஒரு தேசிய விடுதலை இயக்கமாகக் கருதுகின்றனர்.
ஜியோனிசம்
2000 ஆண்டுகளாக உலகில் நாடற்றவர்களாக பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட, கடைசியில் நாஜிக்களால் பேரழிவிற்குள்ளாக்கப்பட்ட யூதர்களுக்கு உலக மக்கள் காட்டிய அனுதாபத்தை யூத மேட்டுக்குடியினர் ஜியோனிசம் என்னும் இனவெறித் தத்துவமாக மாற்றினார்கள். வறட்டுத்தனமான யூத மதக்கருத்துக்கள் அதிதீவிர தேசிய வெறி ஆகியவற்றின் கலவைதான் ஜியோனிசத்தின் கருத்துநிலைக் கோட்பாடுகளாகும். யூத மக்கள் “தன்னிகரற்ற தேசம்” என்றும், அவர்கள் மரபின - பண்பாட்டு வகையில் மற்ற எல்லா தேசங்களைவிடவும் மேன்மையானவர்கள் என்றும் ஜியோனிசம் கூறுகிறது. இதுவே இஸ்ரேலிய தேச அரசின் கருத்துநிலையாகவும் மாறிப்போனது.
ஆதாரம் :
2. யுத்த பூமியாகும் லெபனான் - எஸ்.வி.இராஜதுரை - பக்.129
3. India – Isreal realations from wikipedia.
4. யுத்த பூமியாகும் லெபனான் - எஸ்.வி.இராஜதுரை - பக்.93
5. Times of India - 6.6.2009.
6. CBI Press release /New Delhi/30.06.2010.
7. Comptroller and Auditer General of India. Report No. 15 of 2010 - 2011.
8.Letter of Left Partys to PM. Dated : 21.03.2008. www.alterinter.org/article1914.
குறிப்பு: ஜியோனிசம் மற்றும் ஹிஸ்புல்லா பற்றிய விளக்கங்கள் மேற்படி மார்க்சீய அறிஞர் எஸ்.வி.ஆர் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.