புதன், 12 டிசம்பர், 2012
புதன், 3 அக்டோபர், 2012
தோழர் சிற்பி மகன்
மிகச் சிறந்த மக்கள் பாடகர். நல்ல நாடக கலைஞர்.
கலை இலக்கியங்களில் மட்டுமல்ல, மக்கள் விடுதலைக்கான கருத்தியல் தளத்திலும், புரட்சிக்கான களத்திலும் தொடர்ந்து பாடுபடுபவர்.
அவர் எழுதிய கல்வியியல் சார்ந்த கட்டுரையை
பெருமையோடு அறிமுகப்படுத்துகிறோம்
தோழமையுள்ள............
பாட்டாளி
தவறான இலக்குகளுடன் போட்டித் தேர்வுகள்
- சிற்பி மகன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆறரை லட்சம் பேருக்கு வெறும் 2000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதைக் கேள்வியுற்று பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிற்சி நிறுவனங்கள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றின் தகுதி திறன்களை விமர்சித்ததோடு, "வினாத்தாள் காரணமல்ல. அதை எழுதியவர்களும், அவர்கள் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற விதமும்தான் காரணம்" என தினமணியும் தலையங்கத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. ஆனால், இத் தேர்வினை நாம் இன்னொரு கோணத்தில் அணுக வேண்டியுள்ளது.
காலையில் நடந்த முதல் தேர்வில் மதிப்பெண்கள் பின்வருமாறு பகுக்கப்பட்டிருந்தன. கல்வி உளவியல் : 30. தமிழ் : 30. ஆங்கிலம் : 30. கணிதம் : 30. சூழ்நிலை அறிவியல் :30.மொத்தம் = 150. ஆசிரியர்ப் பயிற்சிப் பட்டயம் பெற்றவர்கள் (Second
Grade) அனைத்துப் பாடங்களையும் படித்து அறிந்திருக்க வேண்டும் என்பது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதி. அவர்களுக்கான ஆசிரியர் பயிற்சியும் அங்ஙனமே வழங்கப்படுகிறது. எனவே, இவ் வினாத்தாளில் கேள்வி எழுப்ப இயலாது.
மதியம் நடைபெற்ற இரண்டாம் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. அவர்களுக்கு 150 மதிப்பெண்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தன. கல்வி உளவியல் : 30. தமிழ் : 30. ஆங்கிலம் : 30. அறிவியல் பட்டதாரி எனின் கணிதமும் சேர்த்து : 60. மொத்தம் = 150. தமிழ் ஆங்கிலம் பயின்ற பட்டதாரி எனின் சமூக அறிவியலையும் (வரலாறு & புவிவியல்) சேர்த்து மொத்தம் = 150.
இங்ஙனம் இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கல்வி உளவியல் அனைவருக்கும் பொதுவாகத்தான் இருந்தாக வேண்டும். எனவே, அதற்குரிய 30 மதிப்பெண்களில் பிரச்சனை இல்லை. ஆனால், மற்ற 120 மதிப்பெண்களைப் பெற ஒவ்வொரு தேர்வாளரும் நான்கு நான்கு பாடங்களில் (subjects) ஆழமான அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும். இது சாத்தியமா? இப்படித்தான் நம் கல்விமுறை இது வரை அமைந்துள்ளதா? என்பதனை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்தவுடனே அறிவியல், கணிதம், வணிகவியல், கணினியியல் என மேல் நிலைப் பள்ளியிலேயே தனித் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுவிடுகின்றன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.ஏ வரலாறு, பி.எஸ்ஸி விலங்கியல், பி.எஸ்ஸி தாவரவியல், பி.எஸ்ஸி வேதியில், பி.எஸ்ஸி இயற்பியல், பி.எஸ்ஸி கணிதம், பி.காம் (வணிகவியல்) என பிரித்துக் கற்பிக்கப்படுகின்றன. இங்ஙனம் பிரித்துக் கற்பிக்கப்படுவது அவசியமானது. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் (subjects) நிறைய ஆழமும் அகலமும் கொண்ட தரவுகளும் செய்திகளும், விதிகளும விளக்கங்களும் பல்கிப் பெருகியிருப்பதால் அவற்றைச் சிறு சிறு துறைக¬ளாகப் பிரித்துக் கற்பிக்கப்படுவதுதான் அறிவியல் பூர்வமானது.
இந்நிலையில் அவரவர் பாடப் பிரிவில்தான் அவரவர் ஆழங்கால்பட்ட அறிவு உடையவராயிருப்பர். கணிதப் பட்டதாரி தாவரவியலிலும், விலங்கியலிலும் ஆழ்ந்த அறிவுடையவராயிருத்தல் இயலாது. ஆங்கிலம் பயின்ற மாணவன் தொல்காப்பியச் சூத்திரங்களை அறிந்திருத்தல் இயலாது. அவரவர் பாடப் பிரிவிற்கேற்ற ஆசிரியர் பணி என்பதால், இங்ஙனம் அறிந்திருத்தல் அவசியமும் இல்லை. அனைத்துப் பாடங்களிலும் நுண்மாண் நுழைபுலம் கொண்ட விதி விலக்குகள் இருக்கலாம். அவை விதிகளாகா.
தகுதித் தேர்வின் வினாத்தாள் எப்படி அமைக்கப்ட்டுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். தேர்வாளர்களின் தடுமாற்றத்திற்கும் இயலாமைக்கும் தோல்விக்கும் காரணம் இதுதான். ஒருவேளை ஒரு பட்டதாரி ஆசிரியர் அனைத்துப் பாடங்களிலும் (subjects) அறிவுத்திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டுமென அரசு விரும்புமேயானால், முதலில் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் அந்த மாற்றத்தைச் செய்திருக்க வேண்டும். பல்வேறு பிரிவுகளுக்குப் பதிலாக, "அனைத்துப் பாடங்களின் இளைஞர்" (Bachelor
of All subjects) என்று ஒரே பட்டப் படிப்பை அனைவரையும் கற்கச் செய்திருக்க வேண்டும். இது சரியா? தவறா? என்ற விவாதத்தைப் பொதுமக்களிடம், குறிப்பாகக் கல்விச் சிந்தனையாளர்களிடம் விட்டுவிடுவோம். அங்ஙனம் நடைமுறைப்படுத்திய பிறகு, இத்தகைய தேர்வு முறை அமைந்திருப்பின் அதில் கேள்வி எழ வாய்ப்பில்லை.
இதற்கு முன்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) பட்டதாரி ஆசிரியர்ப் பணிக்காக நடத்திய தேர்வுகளில் ஒரு நியாயம் இருந்தது/ அவரவர் பயின்ற முதன்மைப் பாடத்திற்கு (major subjects) 110 மதிப்பெண்களும், பொது அறிவிற்கு 10 மதிப்பெண்களும், கல்வி உளவியலுக்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கியிருந்தது. இப்படி வினாக்கள் அமைந்திருப்பின் இவ்வளவு பேர் தோல்விடைய வாய்ப்பே இல்லை.
தவிர, முந்தைய தேர்வுகளில் 150 வினாக்களுக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இத் தேர்வில் ஒன்றரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நுனி விரலில் விடைகளைக் கொண்டவர்கள் கூட ஒரு நிமிடத்தில் ஏறத்தாழ இரண்டு கேள்விகளுக்கு விடையளித்தல் (Shading) இயலாது.
அனைத்துப் பட்டதாரிகளும் தவறான வழியில் பட்டம் பெற்றவர்கள் எனக் கூறிவிட இயலாது. மேலும், கடந்த கல்வியாண்டில் பட்டம் முடித்துவிட்டு, அதே சிந்தனையோடும், கையோடும் போட்டித் தேர்வில் அமர்ந்தவராக இருக்க இயலாது. பட்டம் முடித்துச் சில பல ஆண்டுகளில், தான் படித்ததைத் திருப்பிப் பார்க்க இயலாத சூழலில், தன் தந்தையோடு அவர் செய்யும் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவராக இருந்திருக்கலாம். தக்காளித் தரகு மண்டியில் கணக்கெழுதுபவராக இருந்திருக்கலாம். தனியார் பள்ளிகளில் அற்ப ஊதியத்திற்காகப் பிழியப்படுபவராக இருந்திருக்கலாம். சிறு பெரு தொழிற்சாலைகளில், ஆலை மற்றும் பட்டறைத் தொழிலாளிகளாக இருந்திருக்கலாம். பங்குகளில் பெட்ரோல் ஊற்றும் பணியில் இருந்திருக்கலாம். இப்படி எத்தனையோ வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு போட்டித் தேர்விலும், தன்னைத் தயார்ப்படுத்தும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாய், நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின் பிள்ளைகளாய்ப் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வேலை பெறும் நோக்கில் தேர்வாளர்களின் உழைப்பும், வேலை தரும் நோக்கில் போட்டி வினாக்களும் அமைதல் வேண்டும். கழித்துக்கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு, வினாத்தாள் அமைப்பது நியாயமற்றது. அடுத்த தேர்வுக்கு எத்தனை லட்சம் பேர் தேர்வுக் கட்டணம் ரூ. 500க்காக அல்லாடப் போகிறார்களோ? இலக்குகளை நிர்ணயிக்கும் முன், சமூக யதார்த்தங்களைப் புரிந்து கொள்வது அவசியம். தேர்வுத்துறை கவனத்தில் கொள்ளுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


