அன்புத்
தோழர் பசு. கவுதமன் அவர்கள் 'ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின்
நினைவுகளும் நிகழ்வுகளும்' என்கிற அருமையான
நூலொன்றினைத் தொகுத்துள்ளார்கள். தஞ்சை, நாகை, திருவாரூர்ப்
பகுதியின் ஆற்றல்மிக்க பொதுவுடைமைக் கட்சித் தோழர்களில், தனித்துவமான போராளி
தோழர் ஏஜிகே. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வீரஞ் செறிந்த பல
போராட்ட நிகழ்வுகளை மட்டுமல்ல, அன்று களத்தில்
இயங்கிய, வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன தோழர்களின்
பங்களிப்பையும் சேர்த்துப் பதிவு செய்துள்ளது இந்நூலின் சிறப்பு.
வெண்மணி
வரலாற்றின்
பக்கங்களில் தகிக்கும் பெரு நெருப்பு. அதை ஒவ்வொருவரும்
அவரவர் நோக்கில் எழுதியிருக்கிறார்கள். குருதிப்புனலில்
இந்திரா பார்த்தசாரதிக்கு அது ஆண்மையற்றவனின் பாலியல் விகாரம் என்கிற ஊனப் பார்வை
இருந்தது. சோலை சுந்தரப் பெருமாளின் 'செந்நெல்' சிபிஎம் பார்வையில் எழுதப்பட்டது. பாரதி கிருஷ்ணகுமாரின் 'இராமையாவின் குடிசை' சிபிஎம்மின் பிரச்சாரப்படமாக்கப் பார்வையிருந்தது. நான் எழுதிய 'கீழைத்தீ' புரட்சிகர எம்எல் கட்சியின் பார்வையில் எழுதப்பட்டது. அதன் வரிசையில் தோழர் பசு. கவுதமனின் இந்நூல், அன்றைய நாட்களில் தந்தை பெரியாரின் தலைமையிலான
திராவிடர் கழகத்தின், 'திராவிடர் விவசாயத்
தொழிலாளர்கள் சங்க'த்தின் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந் நூலின் தொடர்ச்சியாய் "இன்னும்
விரிவான - மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுக்கப்பட்ட நீதிகளுமாய்
பச்சைத் தீ - வெண்மணிப் பதிவுகளில் தொடரும்" என்று சொல்லி நூலினை
முடிக்கும் நூலாசிரியர் தோழர் பசு. கவுதமன் அவர்களின் அடுத்த
பதிவை ஆவலுடன் வாழ்த்துகள் சொல்லி எதிர்நோக்குவோம்.
தோழர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது
