முகநூல் எழுத்தாளர் தோழர் மக்கள் பிரதிநிதி அவர்களும், 'தறியுடன்' நாவலாசிரியர் தோழர் இரா பாரதிநாதன் அவர்களும், தோழர் விடுதலை வேந்தன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும்,நிகழ்வுகளும் குறித்த ஆய்வுரையை
திருச்சி மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றச் செயலாளர் திரு. கலியமூர்த்தி வழங்கினார். கீழத்தஞ்சையின் திராவிடக் கழகப்
போராளியாகவும் பின் கம்யூனிசப் போராளியாகவும் விளங்கிய ஏ.ஜி.கே., பெரியாரிய தத்துவங்களையும், கம்யூனிசத் தத்துவங்களையும் தான்
போராடிய களத்தில் இணைத்துச் செயல்படுத்திக் காட்டினார். அதன்மூலம் கீழத்தஞ்சையின் வரப்புகளில்
பெரியாரியமும், மார்க்சியமும் கை கோர்த்து நடனமாடுவதை
அவர் சாத்தியமாக்கினார் என்று ஏ.ஜி.கேவின் வாழ்வை விளக்கிப்பேசிய கலியமூர்த்தி, அவரின் போராட்ட அனுபவங்களையும்,பண்ணைகளின் கொடுமைகளுக்கு எதிராக அவர்
முன்னெடுத்த போராட்ட வடிவங்களையும் விளக்கிப்பேசினார்.
முன்னதாக
தோழர் பாட்டாளி தமது ஏற்புரையை வழங்கினார்.
இவ்விரு நூல்கள் குறித்த தனது பார்வையை
மீ.த. பாண்டியன் முன் வைத்தார். ஏ.ஜி.கே திராவிடக் கழகத்தில் இருந்து பெரியாரிய
சுயமரியாதைக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்தாலும் அவர் ஒரு வர்க்கப் போராளியாகவே
இருந்தார் என்னும் பதிவைதான் இப்புத்தகத்தின் வாயிலாக நான் பார்க்கிறேன் என்றார். திராவிடக்கழகத்தில்
அவர் இருந்தபோது ஒரு வர்க்கப்போராளியாக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில்
இருந்தபோது சாதி ஒழிப்பு குறித்த பெரியார் சிந்தனைகளை விடாப்பிடியாக பிடித்துக்
கொண்டிருந்தார்..அப்படித்தான் இருக்கமுடியும்.ஏ.ஜி.கே அப்படித்தான் இருந்தார். இவ்விரு
குணாம்சங்களும் எந்த ஒரு இயக்கத்துக்கும் அப்போது மட்டுமல்ல இப்போதும் தேவை. இவ்விரண்டும்
இல்லாது இருக்கும் பட்சத்தில் அவ்வியக்கம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுத்தான்
நிற்கும் என்றார் மீ.த.பாண்டியன். பாட்டாளியின் திராவிடநாடும் தேசிய இனவிடுதலையும்
நூல் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.
நிகழ்வின்
இறுதியில் பாட்டாளியின் திராவிடநாடும் தேசிய இன விடுதலையும் நூல் குறித்து
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆய்வுரை
நிகழ்த்தினார். திராவிடம் என்னும் சொல் தீண்டத்தகாத சொல்லாக இப்போது இருப்பதாகவும், நாட்டில் நிலவும் அனைத்து
தீங்குகளுக்கும் திராவிடமே காரணம் என்றும் 2009க்குப் பிறகு அரசியலுக்கு வந்த
இளைஞர்கள் மட்டுமல்ல, அரசியல் புரிந்த தமிழ்தேசியர்களும் கூட
அப்படித்தான் பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திராவிடம்
குறித்த சரியான ஒரு பதிவை,
ஒரு ஆய்வை பாட்டாளி இந்நூலின் மூலம்
கொண்டு வந்திருக்கிறார். திராவிட என்னும் பெயர்ச்சொல் குறித்தும், பிராமணரல்லாத
என்னும் எதிர்மறை சொல்லுக்குப் பதிலாக பெரியாரால் அது எப்படி பயன்படுத்தப்பட்டது
என்பது குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். இவ்வுலகின் சமத்துவமற்ற நிலைக்கு
பார்ப்பனர்களும் அவர்களது தத்துவமான பார்ப்பனியமும்தான் காரணம் என சொன்னவர்
பெரியார். இத்தத்துவத்தைக் கொண்டு வந்த பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களை முறியடிக்க
ஒரு எதிர்ச்சொல்லை அவர் தேடிக்கொண்டிருந்தார். இப்படியாகத்தான் அவர் திராவிடம் என்னும்
சொல்லை பயன்படுத்த ஆரம்பித்தார். அச்சொல் தமிழிலக்கியத்தில் இருந்ததா இல்லையா
என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. சூத்திரர் என்னும் சொல்லுக்கு
மாற்றுச் சொல்லாக திராவிடர் என்னும் சொல்லை அவர் பயன்படுத்தினார். பெரியார்
திராவிட அரசியலுக்குள் வருவதற்கு முன்னரே திராவிடம் என்னும் சொல் தென்னிந்திய
நலவுரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பல
வரலாற்றுத் தகவல்களை எடுத்துரைத்த கொளத்தூர் மணி அவர்களின் ஆய்வு இன்றைய
"திராவிடமா ,தமிழ்த்தேசியமா" என்னும்
விவாதத்திற்கு மிகச்சிறந்த பதிலாகவும் அமைந்தது.
நிகழ்வின்
கடைசி வரை நண்பர்களும், தோழர்களும்
அமைதியாக, கவனமாக
கருத்துரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். நிகழ்வின் முடிவில் பல நண்பர்களும் நிகழ்வைப்
பாராட்டி சொன்ன வார்த்தைகள் எங்களுக்கு இது போன்ற பல நிகழ்வுகளை எதிர்காலத்தில்
நடத்தவேண்டும் என்ற உறுதியை எங்களுக்கு அளித்தது.
செய்தியை எழுதி வழங்கியவர்
தோழர் செ. சண்முகசுந்தரம்
தஞ்சை இலக்கிய வட்டம்











