பகிர்வு வெளி......
உண்டு உறங்கிய புழங்கு வெளிகளிலிருந்து துரத்தப்படும்.......
இன்றைக்கு தமிழர்களிடம் இரு போக்குகள் காணப்படுகிறது. ஒன்று இயற்கை மற்றும் பிற உயிரினங்கள் மற்றும் உயிரற்ற கல் மண் மழை வான் போன்றவற்றை வணங்குவது. மற்றான்று அவற்றைச் சூறையாடுவது. என்ற இருபோக்குகள் காணப்படுகிறது. இது மிகவும் வினோதமானதாகும். இருவேறு எதிர் எதிரான முனைகள். ஒன்று வணங்குவது அல்லது அடிமையாக இருப்பது. மற்றது அதையே அழிப்பது அல்லது சீரழிப்பது........
சரியாகச் சொல்வதானால் இயற்கை பற்றிய ஒரு சரியான அறிவியல் பூர்வமான அறிவே இன்னும் தமிழர்களுக்கு உருவாகவில்லை என்பதுதான் யதார்த்தமே. நாகப்பாம்பு (நல்லபாம்பு) என்று வணங்கும் அதே மக்கள்தான் அப்பாம்பைக் கண்டவுடன் அடித்துக் கொன்று முட்டை பால் பச்சரிசி வைத்து புதைத்து வணங்கி நயினார் (நாகநாதர்) கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைக்கின்றனர்.
பாம்புகளுடன் சகஜ உறவு கொள்ளும் மேலைநாடுகளின் பண்பு வியக்கத்ததக்கதாக இருக்கிறது. பாம்பு வகைகளை கொடிய விசமுள்ளவை, விசமற்றவை என்று பிரித்து, அவற்றை அணுகும், கையாளும், வீடுகளில் வளர்க்கும், மேலை நாடுகளின் பண்பும், பாம்பு, பல்லி, பூச்சி வகைகளை உணவாகக் கொள்ளும் கீழைநாடுகளின் பண்பும் இங்கு இல்லாமல், பாம்பை கடவுளாக வணங்கும் போக்கு தமிழர்களிடம் இன்றும் நீடிப்பது ஏன் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
ஆனால், அதே தமிழகத்தில்தான் தோலுக்காக பல நூறு பாம்புகள் கொல்லப்படுவதும் அரியவகைப் பாம்பினங்கள் அழிந்து போவதும் நிகழ்கிறது. இதனுடன் அய்யப்பனின் வாகனமான புலி தோலுக்காக கொல்லப்படுவதையும், பிள்ளையாரின் மறு உருவமான யானை, தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதையும் கூட இணைத்துக் கொள்ளலாம். இம்முரண்பாடுகளின் இணைவுதான் இன்றைய தமிழகத்தின் சமூக யாதார்த்தமாகும்.
இத்தகைய பின்னணியில்தான் கடல் குறித்த தமிழர்களின் அணுகுமுறையும் காணவேண்டியள்ளது. கடலைப் புனிதாமாகக் கருதி வணங்கும் இதே நாட்டில்தான் கடலையும், கரையையும், கடல் வளங்களையும் சீரழிக்கும் வழக்கம் நடந்தேறிவருகிறது. சமவெளி மனிதர்களைப் பொறுத்தவரை, கடல் தங்களது உணவில் ஒன்றான மீனைத் தரவல்லது. ஆனால், எத்தனைபேர் மீனைப் பார்த்தவுடன் கடலை நினைப்பார்கள் என்று தெரியவில்லை.
கடல் பகுதியிலிருந்து வெகு தூரத்தில் மையப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கு மீன் என்றவுடன் மீன் சந்தை மட்டுமே நினைவுக்கு வரும். இந்துக்களைப் பொறுத்தவரை கடல் என்பது வருடத்திற்கு ஒரு முறை தங்களது இறந்த முன்னோர்களுக்கு திவசம் கொடுக்கும் புண்ணியஸ்தலம் மட்டுமேயாகும்.
வேறு சிலருக்கு சுற்றுலாத்தலம். மேலும் மாலை நேரத்தில் பொழுதுபோக்கும், காத்து வாங்கும் கடல் கரை. தங்களது உடல் பருமனைக் குறைக்க நடைபயிலும் நீண்ட நடை பாதை. இவ்வாறு மீன்பிடியல்லாத சாதியினருக்கு கடல் பலவாறு அவர்களது சிந்தனையில் பதிந்து போயுள்ளது.
இந்தச் சமவெளி மனிதர்களை மையமாகக் கொண்ட அரசு, அதிகார வர்க்கம், ஆளுவோர் ஆகியோரும் இவ்வாறே கடலைப்பற்றிக் கருத்துக் கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே மீனவர்களை, கடலின் குழந்தைகளை, கடல்கரையைவிட்டு விரட்டிவிட்டு அவ்விடங்களையெல்லாம் சுற்றுலாத்தலமாக, சமவெளி மனிதர்களின் உல்லாச வெளியாக மாற்றுவதற்கு முற்படுகின்றனர். மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திய, மீன்களை காயவைத்த, உண்டு உறங்கிய புழங்கு வெளிகள் எல்லாம் சுருங்கி வருகிறது. இந்த அறிவு நாணயமற்ற செயல்களை எதிர்த்து மீனவர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் கடலையும், கடல்கரைப் பகுதிகளையும் அசுத்தப்படுத்துபவர்கள், சுற்றுச் சூழலைக் கெடுப்பவர்கள் சமவெளி மனிதர்கள்தான். இந்துக்கள் ஆடி அமாவாசை, தை, மாசி அமாவாசை தினங்களில் பலலட்சம் பேர் ஒரே நேரத்தில் ஒன்று கூடி கடற்கரைப் பகுதியில் மலஜலம் கழித்து, குப்பை கூளங்களைக் கொட்டியும் சீரழிக்கின்றனர். மேலும் சமவெளி மனிதர்கள் புதிய புதிய வடிவில் கடலை அசுத்தப்படுத்துகின்றனர். இவர்களது வீட்டுக் கழிவுநீர் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்ட குழாய் மூலம் கடற்கரையில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. பணவெறி பிடித்த இறால் பண்ணை முதலாளிகள் இரசாயனக் கழிவு நீரை குழாய் மூலம் கடலில் கலக்க விடுகின்றனர். இராமேசுவரம் தீவைப் பொருத்தவரை இதே சாதி இந்துக்கள் மறு புறம் கடல் நீரைப் புனிதம் என்று கூறி, தங்கள் வீடுகளில் இறந்தவர் உடலை கடலில் இருந்து நீர் எடுத்து (நீர்மாலை) வந்து குளிப்பாட்டுகின்றனர். குழந்தை பிறப்பு முதல் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் தீட்டுக்கழித்தல் என்ற பெயரில் கடல் நீரைக் கொண்டுவந்து வீடுகளில் தெளிப்பர்.
முளைப்பாரி திருவிழாவின் போது, இராமேசுவரத்தில் மாரியையும், மாரியம்மன் (களிமண்ணால் செய்யப்பட்ட) சிலையையும் இறுதியில் கடலில் (அக்னிதீர்த்தம்) வந்தே கரைப்பார்கள். அதேபோல் விநாயகர் சதுர்த்தியின் மறுநாள் ஊரின் ஒட்டு மொத்த விநாயகர் பொம்மைகளும் (களிமண்ணால் ஆனது) கடலில் வந்தே போடப்படும். ஆனால், தற்போது இச்சிலைகள் ஆர்.எஸ்.எஸ்சின் வளர்ச்சிக்குப் பிறகு மிகப்பெரியதாக வளர்ந்தும், களிமண் அல்லாத பிற பொருட்களால் செய்யப்பட்ட, 1 வாரம் வரை வைத்து பூஜிக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலில் மூழ்கடிக்கின்றனர். இதனாலும் கடல் மாசுபடுகிறது.
இவ்வாறு சமவெளி இந்துக்கள் கடலையும் கரையுயும் பல்வேறு வழிகளில் சீரழிப்பதைக் கண்டு கொள்ளாத அரசு, 'மீனவர்கள் கடற்கரை அழகைக் கெடுக்கின்றனர்' என்று கூறி, அவர்களை அப்புறப்படுத்தி, அவ்விடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்கா, கேளிக்கை விடுதிகளை அமைத்து, அதனையும் ஆதிக்கசாதி வர்க்கத்தினருக்கு குத்தகைக்குவிட்டு, அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்து கொடுக்கிறது.
குமரன்தாஸ்
“சேதுக்கால்வாய்த் திட்டமும்
ராமேஸ்வரத் தீவு மக்களும்” நூலிலிருந்து......
குறிப்பு :
தோழர் குமரன்தாஸ் எழுதிய “சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேஸ்வரத் தீவு மக்களும்” நூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய “இலக்கியப் போட்டி 2010”க்கான பரிசினைப் பெற்ற நூல் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக