வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கட்டுரை வெளி

வினை - எதிர் வினைக்கு மறு வினை
- பாட்டாளி

"ikindhu.blogspot.com" 2009/07 வலைப்பக்கத்தில் வெளியான 'வினை எதிர் வினை' 'நக்சல்பாரியின் முன்னோடி' என்ற விமர்சனக் கட்டுரை "புதிய பயணம்" இதழில் வெளியான கவிஞர் இன்குலாப் அவர்களின் நேர்காணல் குறித்து தவறாக எழுதப்பட்டிருப்பதால், நேர்கண்டவர்களுள் ஒருவன் என்கிற முறையில் அதற்கு விளக்கமளிக்க வேண்டியது எனது பொறுப்பாகிறது.
பொதுவாக, எந்தவொன்றையும் மூலத்தை முறையாகப் படித்தால்தான் திரிப்பு வேலைகளை வெளிப்படுத்திட முடியும். எனவே, நாம் நேராக மூலத்தை ஒரு முறை படித்து விடுவது நல்லது. புதிய பயணம் நேர்காணலில் ப.9ல் கவிஞர் இன்குலாப் கூறுகிறார்,
"சனவரி 26 குடியரசு நாள் போராட்டத்துக்கு நாங்கள் தயார் பண்ணிக் கொண்டிருக்கும் போது காளிமுத்துவும் காமராசனும் ஒரு முடிவுக்கு வந்தனர். சட்டப்பிரிவை எரிக்கிறதுன்னு யாருகிட்டயும் சொல்லாமலேயே தீ வைத்துக் கொளுத்தினாங்க. என் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் அடிபடுவது போராடுவது என்ற உணர்வோடு இருந்தோம். சனவரி 25ம் தேதி இவங்க கைதாகிறாங்க. இந்தச் செய்தியைப் பரப்பணும்கிற பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். மதுரை முழுவதும் நோட்டீஸ் விநியோகிக்கணும்கிற பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன். வெளியே தெரிந்தால் கைது செய்யப்படுவோம் என்ற நிலை. மாணவர்கள் கையில கொடுத்து நாலா திசைக்கும் அனுப்பிவிட்டு பின்னாடியே செல்வோம். நோட்டீசு முழுவதையும் ஒரு மணி நேரத்தில் விநியோகிச்சு முடிச்சோம்".
இதுதான் கவிஞர் இன்குலாப் அவர்களின் கூற்று. புதிய பயணத்தில் இருப்பதும் இதுதான். ஆனால் கட்டுரையாளர் இந்து(?) சொல்வதுபோல, "துண்டறிக்கை விநியோகச் செயல்திறன் பார்த்து ஆச்சர்யப்பட்டு காவல்துறை ஆய்வாளர், இதை யாரோ ஒரு நக்சல்பாரிதான் செய்தான் அப்படீன்னு பயந்தான்" என்று சொல்கிறார். (கதவு மார்ச் 2010 ப.11) கவிஞர் இன்குலாப் அவர்கள் சொல்லாத காவல்துறை அதிகாரி இங்கு எப்படி வந்தான்? தவிரவும் 'நக்சல்பாரி' என்ற சொல்லாடல் மேற்குறிப்பிட்ட அந்தப் பகுதியில் எங்கிருக்கிறது? நேர்காணலை ஒழுங்காகப் படிக்காத அல்லது படிக்கவியலாதபடி காழ்ப்பு கண்களை மறைக்க, தானாகவே உள் நோக்கம் கற்பித்துக் கொண்டு, காழ்ப்பும் ஒவ்வாமையும் ஒருங்கே கொண்டு கட்டுரையாளர் இந்து(?) இப்படி மனம் போனபடி நேர்காணலைத் திரிக்கிறார். அதை விமர்சனம் என்ற பெயரில் எழுதி வாசகர்களுக்குத் தவறாகப் பரப்புகிறார்.
உண்மையில் நக்சல்பாரிகளின் துண்டறிக்கை விநியோகத்திறன் பற்றி கவிஞர் இன்குலாப் பிற்பாடுதான், அதையும் தெளிவான வார்த்தைகளில் சொல்லுகிறார். அதை வாசகர்களுக்கு அப்படியே தருகிறோம்.
"அந்த அனுபவம் (மதுரையில் மேற்குறிப்பிட்ட பேராட்டத்தில் துண்டறிக்கை விநியோகித்த அனுபவம் - பாட்டாளி) நியூ காலேஜ் போராட்டத்தில் எனக்குப் பயன்பட்டது. (அடிக்கோடு எம்முடையது) நிர்வாகத்தை அம்பலப்படுத்த முடிவு செய்தோம். கைது ஆனவர்கள் ஆபீஸ் செக்கரட்டரி மற்றும் கரஸ்பாண்டன்ட் பெயரைச் சொல்லவே பயப்படுவாங்க. அவர் செய்த ஊழல்களைச் சுருக்கமா எழுதி, நண்பர்கள்ட்ட கொடுத்து தொழுகை நடக்கிற பள்ளிவாசல்கள் எல்லாத்திலேயும் விநியோகிக்கச் சொல்லி அனுப்பி வைச்சேன். பெரிய மேடு பள்ளி வாசல்ல அவர் தொழுதுகிட்டார். அவர் தொழுகை முடிச்சு வெளியே வந்தவுடனே, நேரிலேயே அவர் கையில் கொடுத்து விட்டேன். படிச்சுட்டு நிமிர்ந்தா யார் கொடுத்தான்னு தெரியாது. எல்லா பள்ளிவாசல்லயும் விநியோகமானதைச் தெரிஞ்சு நடுங்கினான். இதை யாரோ ஒரு நக்சல்பாரிதான் செய்தது அப்படீன்னு பயந்தான். அது மாதிரி நாங்க மதுரையில விநியோகிச்சோம்". (அடிக்கோடு எம்முடையது) புதிய பயணம் ப.9-10.
கவிஞர் இன்குலாப் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியிருப்பதை அடிக்கோடிட்டுள்ளேன். அந்த அனுபவம் பின்னாட்களில் நியூ காலேஜில் பணிபுரிந்தபோது உதவியது என்றும், அந்த நியூ காலேஜ் துண்டறிக்கை விநியோகம் போலத்தான் மதுரையில விநியோகிச்சோம் என்று மிகத் தெளிவாகக் கூறுகையில், (கவனிக்க: இந்த இடத்திலும் அந்த காவல்துறை ஆய்வாளன் வரவே இல்லை) கட்டுரையாளர் இந்து(?) தானடித்த மூப்பாக இட்டுக் கட்டிக் கொண்டு '65களிலேயே நக்சல்பாரியினை முன்னறிந்து சொல்லியவர்' என்று ஏகத்துக்கு இட்டுக் கட்டி கிண்டலடிக்கிறார். கட்டுரையாளர் இந்து(?) கலவரப்பட்டு எழுதும் அந்தக் காவல்துறை ஆய்வாளர் உண்மையில் எப்போது வருகிறார் தெரியுமா? கவிஞர் இன்குலாப் சொல்கிறார்,
"காளிமுத்துவும் காமராசனும் கைதான பிறகு போராட்டம் எங்க கையில இருந்தது. ஆகஸ்டு 15 அன்றைக்கு கருப்புக்கொடி ஏத்துறதுன்னு (அடிக்கோடு எம்முடையது) கல்லூரிக்குள்ளயே ஏற்பாடு நடந்தது. போலீசுக்காரங்க கல்லூரிக்கு வெளியே நிக்கிறாங்க. திடீரென்று ஒரு டிஎஸ்பி உள்ளே வரவும் மாணவர்கள் ஓடத் தயாராக நான் ஓடாதீங்கன்னு சொல்ல...." (புதியபயணம் ப.10.)
ஆக, ஜனவரி 26ல் காளிமுத்து நா.காமராசன் கைதுக்கான துண்டறிக்கை விநியோகப் போராட்டம் நடந்தது. அதற்குபின் கி†டத்தட்ட ஏழு மாதங்கள் கழித்து ஆகஸ்டு 15ல் நடந்த போராட்ட அனுபவத்தைச் சொல்கிறபோதுதான் அந்த காவல்துறை வருகிறது. உண்மை இப்படியிருக்க, பின்னாடி வரும் காவல்துறை ஆய்வாளரை (அவர் கூட காவல்துறை ஆய்வாளர் அல்ல. டிஎஸ்பிதான்) முன்னரே வலியக் கொண்டு வந்து சேர்த்துக் குழப்பி, அவதூறு பரப்பும் க†டுரையாளர் இந்து(?)வுக்கு நாம் கூட கொடுக்கலாம் ஒரு பட்டம் "இட்டுக் கட்டுதலின் முன்னோடி" என்று.
அடுத்து கட்டுரையாளர் எழுப்பியிருக்கும் இரண்டு கேள்விகள் குறித்து. ஏன் புதிய தலைமுறை பற்றிப் பேசவில்லை? புதியமனிதன் குறித்துப் பேசவில்லை? என்பது குறித்து.
முதலில் அந்த நேர்காணல் என்பது இன்குலாப் என்கிற ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில் செய்யப்பட்டதில்லை. அப்படிச் செய்திருந்தால்தான் அவரின் பத்திரிகை பணி குறித்துச் சென்றிருக்கும். புதியமனிதன் குறித்துக் கேட்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த நேர்காணல் என்பது, ஏதோ மொழிப் போராட்டம் என்பதை ஏகத்துக்கும் குத்தகை எடுத்தது தாங்கள்தான் என்று இன்றுவரை தம்பட்டம் அடித்துத் திரியும் திராவிட கட்சிகளுக்குப் பதில் சொல்லவும், பொதுவுடைமை இயக்கத்தார்க்கும் அதில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்பதை முகாமையாய் நிலை நிறுத்துவதையும் கொண்ட நேர்காணல் அது. இறுதியாக இன்றைய இடதுசாரி எழுத்தாளர்களின் நிலை குறித்துச் சொல்வதன் மூலம் நேற்றைக்கும் இன்றைக்குமான இடைவெளிகளை வெளிக் கொணரவே அந்த இரண்டாம் கட்டம்.
அடுத்து இந்த மறுவினையைப் படித்தாலே தெரியும். ஒழுங்கு படுத்தப்பட வேண்டியது யாரென்று. நிச்சயமாக புதியபயணம் இதழ்க் குழு அல்ல. மாறாக, இந்து(?) என்ற சனாதனப் பெயரில் மறைந்திருக்கும் கட்டுரையாளர்தாம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியவர் என்பது வாசகர்களுக்கே புரியும்.
அடுத்து, கட்டுரையாளர் இந்து(?) முன் வைக்கும் சில விபரப் பிழைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமையும் எமக்கு உண்டு. "1968ல் புதிய தலைமுறை பத்திரிகை தொடங்கி 1970வரை தொடர்ந்து நடத்திய" என்று ஒரு தகவல் அளித்துள்ளார் கட்டுரையாளர். அது பிழையான தகவலாகும். உண்மையில் புதிய தலைமுறை காலகட்டம் என்பது 1967முதல் 1969வரை ஆகும். புதிய தலைமுறையின் முதல் இதழ் 1967 ஜூலை மாதம் வெளிவந்தது. (ஆதரம் - புதிய தலைமுறை (1967 - 1969) பார்வையும் படைப்பும். ப.தமிழரசி. நிகழ் வெளியீடு ப.24) அதாவது 1967 மே 25 மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம் நக்சல்பாரியின் வரலாற்றுப் புகழ் மிக்க விவசாயப் போராட்டம் துவங்கிய (ஆதாரம் - நக்சல்பாரியின் புகழ் மிக்க முப்பதாண்டுகள். CPI (ML) மத்திய கமிட்டி வெளியீடு. ப.1) அடுத்த இரண்டாவது மாதத்திலேயே புதிய தலைமுறை இதழ் வந்து விடுகிறது.
அடுத்து கட்டுரை முழுக்க 'இன்குலாப்' என்ற பெயரைச் சொல்லக் கூசிடும் 'இந்து'(?) என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துத்துவ சனாதனக் குரல், கட்டுரை முழுக்க அவரை 'சாகுல் ஹமீது' என்று சொல்லிடும் அரசியல், உங்களால் 'பேசப்பட்ட வார்த்தைகளிலும் வெளிப்பட்டு' விடுகிறதே இந்து(?).
மொத்தத்தில் காழ்ப்பு, வெறுப்பு, ஒவ்வாமை இதனோடு ஒருவர் வாசிப்பை அணுகினால் அது இப்படித்தான் போய் முடியும் என்பதற்கு நாம் அளித்த பட்டத்திற்குரியவரான "இட்டுக் கட்டுதலின் முன்னோடி" இந்து(?)வே சாட்சி.

1 கருத்து:

selvakumar dp சொன்னது…

i got so many information, but it seems to be you don't like "indu" or "indu" don't like you.

both the guys are in same platform or not? i don't know...if you have anything for me to read ..please let me know..i will send you my email address as soon as possible.

with interest
iniyan