வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2015

மனசை அறுக்குது ஐ.மா.பா.







இம்மாத அம்ருதா இதழில் (ஏப்ரல் 15) வெளியான மூத்த முதுபெரும் தோழர் தியாகி ஐ.மா.பா குறித்த எமது அஞ்சலிக் கட்டுரை 

மனசை அறுக்குது ஐ.மா.பா.

                                                                                           - பாட்டாளி

           
            து 1968ன் அந்திமக் காலம். அப்போதுதான் கீழத்தஞ்சையில், வெண்மணித் தீயில்... சாதியாலும் வர்க்கத்தாலும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெண்கள், ஓடி ஒளிய முடியாத வயதான ஆண்கள் என 44 பேர்கள் பண்ணை ஆதிக்கத்தால் துடிக்கத் துடிக்க எரித்துக் கொல்லப்பட்ட காலம். செய்தி அறிந்து குன்றக்குடி அடிகளாரும், கிருஷ்ணம்மாள் ஜெகநாதனும், ஜெகநாத அய்யரும் ஒரு பக்கம் விரைந்து வந்து சேர, மறுபக்கம் திருவனந்தபுரத்தில் கட்சி மாநாட்டிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் விரைந்து வந்து சேர, அக்கம்பக்கத்திலிருந்த உணர்வாளர்கள், பொதுவுடைமையாளர்கள் எல்லோரும் பதைபதைப்போடு வந்து குழும, அந்தச் சுடுசாம்பல் மேட்டில் ஒரு உருவம் குத்த வைத்து உட்கார்ந்து, பொசுங்கிப்போன, சாம்பலாகிப்போன எலும்புகளையும், அந்தச் சுடுசாம்பலையும் மனசு கனக்க ஒரு காகிதத்தில் சேகரித்து பொட்டலமாக்கிப் பாதுகாத்தது. அவர்தான் ஐ.மா.பா என்று எல்லோராலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் ஐ.மாயாண்டி பாரதி அவர்கள். அவர்தான் பின்னாட்களில், ஒரு ஆகப் பெரிய பொக்கிஷமாகச் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருந்த அந்தச் சுடுசாம்பலையும், குருத்து எலும்புகளையும் கட்சியினருக்கு வழங்கிட, அவர் சேகரித்த அந்தச் சுடுசாம்பலும், குருத்து எலும்புகளும் இன்னும் வெண்மணி நினைவிடத்தில், அந்த வன்கொடுமைக்குச் சாட்சியமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
            இருளப்பன் மாயாண்டி என்கிற ஐ.மாயாண்டி என்கிறவர் பாரதி மேல் கொண்ட பற்றும், அவர் கவிதைகளின் மேல் கொண்ட தாளாத தாகமும், காதலும் அவரை பாரதி என்ற இணைப்பெயரைச் சூட்டிக்கொள்ள, ஐ. மாயாண்டி பாரதி என்கிற அப்பழுக்கற்ற சுதத்திரப் போராட்ட வீரர் ஒருவர் மதுரை மண்ணிலிருந்து இத் தமிழ்கூறு நல்லுலகிற்கு கிடைத்தார். நாம் இங்கு தோழர் ஐ.மா.பாவின் பிறப்பு, இறப்பு, வாழ்க்கைக் குறிப்பு என்றெல்லாம் பட்டியலிடப் போவதில்லை. அது ஏற்கெனவே இங்கு கொட்டிக் கிடக்கிறது. நமது கவனமெல்லாம் ஐ.மா.பா என்கிற ஆளுமை, அது இந்தத் தமிழ் கூறு நல்லுலகில் ஆற்றிய வினை, அதன் மீதான மதிப்பீடுகள், அதன் வழி நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள், படிப்பினைகள், அனுபவங்கள், இவற்றின் மீதுதான்.
            தோழர் ஐ.மா.பாவைச் பற்றிச் சொல்ல வருகிற போதெல்லாம், ‘அவர் சுதந்திரப் போராட்டத் தியாகி’ ‘ஏறினா ரயிலு. எறங்கினா ஜெயிலுஎன்கிற புகழ் பெற்ற வரிகள்தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் சிறைக் கொடுமை அனுபவித்தவர் அவர். அதை விட முக்கியமானது, நாடு நாற்பத்தியேழில் சுதந்திரம் பெற்றுவிட்ட பின்பும், அந்தச் சுதந்திர இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்த ஒரு சில தேச பக்தர்களில் ஐ.மா.பாவும் ஒருவர்.
            1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, ஐ.மா.பாவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், 1949ம் ஆண்டு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அப்போது தலைமறைவாகயிருந்த கட்சித் தலைமை அவரை கட்சி ஊழியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நடப்பு அரசியலை போதிக்கும் பணியினைக் கொடுத்து நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பியது. கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்க தோழர் ஐ.மா.பா நெல்லை சென்று கட்சி ஊழியர்களுக்கு அரசியல் கல்வி புகட்டிக் கொண்டிருக்கும்போது, சேலம் சிறையில் சில அரசியல் கைதிகள் உரிமை கேட்டுப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் சுதந்திர இந்தியாவின் இந்தியத் தலைமை 22 பேர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டது. இந்தச் சம்பவம் தோழர் ஐ.மா.பாவின் மனதை மிகவும் காயப்படுத்தியது. இவ்வளவு நாள் வெள்ளைக்காரன் செய்த வேலையைத்தானே சுதந்திர இந்தியத் தலைமையும் செய்கிறது என்று மிகவும் வேதனைப்பட்டார். வேதனையில் பல நாட்கள் சாப்பிடவில்லை அவர். சரியாகத் தூங்கவும் இல்லை. இதற்கு எதிராக ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவரைத் துளைத்துக் கொண்டே இருந்தது.
            இதேபோல எண்ணம் கொண்டிருந்த நான்கு தோழர்களும் ஐ.மா.பாவும் ஒரு குழுவாகச் சேர்ந்தார்கள். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது அந்தக் குழு. தூத்துக்குடி அருகே மீளவிட்டான்என்கிற இடத்தில் ரயிலைக் கவிழ்க்கவேண்டும் என்று முடிவெடுத்தது. ஐந்துபேர்களைக் கொண்ட அந்தக் குழு, குறிப்பிட்ட நாளன்று நள்ளிரவில் தண்டவாளத்தைக் கழற்றிவிட்டுக் காத்திருந்தது. அதிகாலையில் வந்த அந்த ரயில் பயங்கர சத்தத்தோடு கவிழ்ந்தது. உயிர் சேதம் ஏதும் இல்லை. காவல்துறை முழு வீச்சில் தேட, கடைசியில் இவர்கள்தான் என்று கண்டுபிடித்து, மேலப்பாளையம் அருகே கைது செய்தது.
            'ஏகலாம் சிறைச்சாலையே -
            நமக்கு அதைவிட வேறென்ன வேலையேன்னு
பாடிக்கிட்டே ஜெயிலுக்குப் போனார்களாம்.
            தோழர் ஐ.மா.பா அங்கே மிகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டார். சுதந்திர இந்தியத் தலைமையின் கீழுள்ள அரசினால் அவரது குறுக்கு எலும்பு, கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன. ஆயினும் வெஞ்சிறையும் சித்திரவதையும் ஐ.மா.பாவை குலைத்துவிடவில்லை. மாறாக, அடக்குமுறைக்கு எதிராக... ஆதிக்கத்திற்கு எதிராக... அது வெள்ளை ஆதிக்கமாயினும் சரி. இந்திய வல்லாதிக்கமாயினும் சரி. சமரமில்லாது அந்தக் கடைசி 99வயதுவரை, உடல் வலு இருக்கும்வரை எதிர் நின்று போராடியவர் அவர். உடல் ஒத்துழைக்காதபோது கடைசிவரை எதிர்ப்புக் குரல் கொடுத்துப் போராடியவர் அவர்.
           

            காலம் தன்னளவில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது இயங்கியல்தான் என்றாலும், இயங்கியல் புரிதலைத் தாண்டி... இன்றின் அவலங்கள் தந்த காயத்தில், நேற்றையவைகளை பொன்னுலகக் கனாவாக காணுகிறது மனது. அன்றெல்லாம் தலைவர்கள் அப்படியிருந்தார்கள். இப்படியிருந்தார்கள் என்று ஏக்கம் மேலிட புலம்பித் தவிக்கிறது மனது. அன்றைய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு வேறு. இன்றைய தாராளமய, தனியார் மய, உலக மயமாக்கல் சூழல் வேறு என்ற அரசியல் அரிச்சுவடி நமக்கு உள்ளூர உணர்த்தித் தொலைத்தாலும், அதை உதறி, பொன்னுலகக் கனாக் காணுகிறோம் நாம்.
            காலம் அதன் கதியில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருப்பதால், நிறை வாழ்வு வாழ்ந்த அன்றைய தலைவர்களை, தியாகிகளை இழந்து கொண்டே வருகிறோம்.  அதன் வரிசையில் 99 வயதுவரை நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தவர் தோழர் ஐ.மா.பா. அவர் சிறார்களுக்கு தன் கால சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை, சம்பவங்களைச் சொல்லிச் சொல்லி அலுக்காதவர். அதிலே அளவற்ற இன்பங் காண்பவர். நம் காலத்தில் இவ்வாறான நேரடியான களப்போராளிகளை, அவர்களின் கள அனுபவங்களை, நேருக்கு நேர் கேட்கும் வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. இன்னும் கொஞ்ச காலத்தில் மிச்சமின்றிப்போய்விட... இனி அவர்களின் எழுத்துக்கள் மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.
            “அதான் படிச்சு முடிச்சாச்சே. இன்னும் எதுக்குப் படிக்கணும்?” என்கிற இன்றைய சூழலில், ஏட்டுக் கல்வி என்பதைத் தாண்டி, அந்த வட்டத்தைத் தாண்டி, எதையும் படிக்கத் தேவையேயில்லை என்கிற இன்றைய கல்விமயச் சூழலில், ஐ.மா.பா போன்ற முதுபெரும் தோழர்களின், தலைவர்களின், நல்ல விழுமியமுள்ள மனிதர்களின்  எழுத்துக்கள் எந்தவித விளைவுகளை எதிர்கால சந்ததியர்களுக்குத் தந்துவிடப்போகிறது என்று நினைக்கிறபோது மனசு ரணம் ரணமாக அறுபடுகிறது.


            தோழர் ஐ.மா.பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தியாகி. பொதுவுடைமைப் போராளி. எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர், என்பதைத் தாண்டி எமக்கு ஆச்சரியமூட்டிய விஷயம் அவர் இந்து மகா சபையில் உறுப்பினராக அல்ல, பொறுப்பாளராக இயங்கியது. சாவர்க்கரை இங்கு அழைத்து வந்தது என்பது போன்ற விஷயங்கள் கவனம் ஈர்த்தது. அது குறித்து கொஞ்சம் அவதானிப்போம்.
            ஒரு பொதுவுடைமைக்காரர், ஆரம்பத்திலிருந்தே ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றெல்லாம் களமாடிய ஒருவர், எப்படி இந்து மகா சபையில்? அன்றைய இந்தியாவில்.. அதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவினையற்ற ஒன்றுபட்ட இந்தியாவில், 1939ல் இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான்என்கிற தனி நாடு கோரிப் போராடினார்கள். இது பாரதமாதா, பாரதம், இந்து, இந்தியா என்கிற கற்பிதத்தில் மிதந்திருந்த லட்சோபலட்ச இந்து இந்தியர்களில்.. ஆரம்ப அரசியல் காலகட்டங்களில்... தோழர் ஐ.மா.பாவும் ஒருவர். அவர் அன்றைக்கு அந்த கற்பிதத்தில்தான் இருந்தார். அந்தத் தனி நாடு கோரிக்கையால் இந்திய தேசிய காங்கிரசில் அன்றைக்கு இருந்த முஸ்லீம்கள் முக்கியத்துவம் இழந்ததோடு மட்டுமல்ல. அவர்களைப் பகைமையுணர்வோடும் பார்க்கத் துவங்கினார்கள். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பாரதமாதாவை இரு கூறாகப் பிரிப்பதா? கூடாது! என்று இந்து மகா சபை உருவாக்கப்பட்டது. அதன் வழியில் இயங்கிய தோழர் ஐ.மா.பா 1940ல் மதுரை - ராமநாதபுர மாவட்ட இந்து மகா சபை அமைப்புச் செயலாளராக இயங்கினார். அப்படி அமைப்புச் செயலாளராக இயங்கி வந்த நாட்களில்தான் மதுரைக்கு சாவர்க்கரை அழைத்து வந்திருக்கிறார்.
            என்னவொரு முரண்? பின்னாட்களில் ஒரு பொதுவுடைமைப் போராளி.. ஆதி காலந் தொட்டே ஏகாதிபத்திய எதிர்ப்புக்காரர்... வரலாற்றில் இப்படியான முரண்களை நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டே இருக்கலாம். எமது திராவிடநாடும் தேசிய இன விடுதலையும்நூலில் இதுபோன்ற வேடிக்கையான, வினோதமான பல அரசியல் முரண்களைச் சொல்லியிருப்பேன். ஒரு இந்து மகா சபை அமைப்புச் செயலாளர்.. பின்னாட்களில் எப்படி அதிலிருந்து வெளியேறினார்? அதிலிருந்து வெளியேறி ஒரு காங்கிரசுக்காரராக இயங்கியவர் ஏன் அதிலிருந்து வெளியேறி ஒரு பொதுவுடைமைக்காரர் ஆனார்? ஒரு சுவையான அரசியல் முரண் வரலாறு இது.
            அப்போது ஒருபுறம் வெள்ளையனே வெளியேறுஇயக்கம் தீவிரமடைந்திருந்த நேரம். மற்றொரு புறம் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அப்போது நாடெங்கும் யுத்த எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். தோழர் ஐ.மா.பா யுத்த எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்திச் சிறையில் இருந்தார். அப்போது இந்து மகா சபையினர் அவரிடம் சென்று இரண்டாம் உலகப்போர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்புக் கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்தால் விடுதலை செய்து விடுவார்கள். அதனால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிடடு விடுதலை ஆகும்படி கூறினார்கள். ஆனால் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு இள ரத்தத்திலிருந்தே ஊறியிருந்ததால் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக, இந்து மகா சபை மீதே கடும் கோபம் கொண்டு, அதிலிருந்து வெளியேறினார் என்பது வரலாறு.
            மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தப்பித்துக் கொள்வது என்பது இந்து மகா சபைக்கு மட்டுமல்ல. காங்கிரசுக்கும் அது பொருந்தும் என்பது ஐ.மா.பா நமக்குச் சொல்லும்  வரலாறு. ஒருமுறை கடலூர் சிறையில் இருந்திருக்கிறார் தோழர் ஐ.மா.பா. அவரைப் பார்க்க அவர் மனைவி சிறைக்கு மனுப்போட்டு வந்திருக்கிறார். அந்தச் சம்பவத்தை தோழர் ஐ.மா.பா அவர்களின் வார்த்தைகளிலேயே கேட்கலாம்.
            “நான் கடலூர் ஜெயிலில் இருந்தப்ப, மனு எழுதிப்போட்டு பார்க்க வந்தா எம் பொஞ்சாதி. 'ஏன் மாமா, இந்தச் சீனாக்காரன் பண்ணுறது தப்புனு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா, உங்களை வெளியில் விட்டுருவாகளாமே?’ன்னு கேட்டா. அன்னைக்கு அவ கன்னத்துல ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டேன். 'இதுக்காடி நீ இங்க வந்தே, காங்கிரஸ்காரன் அனுப்பிவெச்சானா?’ன்னு கேட்டேன். அவ அழுதுக்கிட்டே போயிட்டா. ஆனா, அதுக்குப் பிறகு அவ சாகிற வரைக்கும், அவ மேல் கோபமா என் கை பட்டது இல்லை”.
            அவர் இந்து மகா சபையிலிருந்து வெளியேறியதற்கும், காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றில்லை என்பதுதான் அவர் நமக்குச் சொல்லும் பாடம்.

           
            தோழர் ஐ.மா.பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தியாகி. பொதுவுடைமைப் போராளி என்பதெல்லாம் அவரது அரசியல் ஆளுமை என்றால்... எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்பது அவரின் இலக்கிய ஆளுமை. தனது 22ஆவது வயதிலேயே எழுதியதுதான் படுகளத்தில் பாரத தேவிஎன்னும் விடுதலை வேட்கை எழுப்பும் நூல். அதில் அவரின் நடை என்பது, போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கும் வீரர்கள் மத்தியில், ஒரு வீரத் தளபதி எழுப்பிடும் வீர உரை போன்ற எழுத்து நடை அது.
            “அதோ! மேலே பாருங்கள் ! ஆகா! அதென்ன அவ்வளவு அற்புதம்!
            என்ற முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை எழுச்சி மிக்க வீர உரைகளின் அணிவகுப்புதான் அது. அதைவிட ஏகாதிபத்தியத்தை, பிற ஏகாதிபத்தியங்களை அவர் சாடும் வார்த்தையாடல் என்பது நமக்கு புதுமைப்பித்தனை நினைவுபடுத்திடும்.  அவ்வளவு தேர்ந்த பகடியும், படிமமும் அதில் இருக்கும்.
           
            “வருகிறாள் அகிலலோக அதிகாரிணி, ஏகாதிபத்திய வெறிகொண்ட இங்கிலாந்திணி, பேராசை பிடித்த பிரெஞ்சு தேவி, ஆணவக்குள்ளி அமெரிக்க அரசி, ஜனசத்துரு ஜப்பானியக்குள்ளி, ஜெர்மானிய ஹிட்லர் ஒரு பேய், ரோமானிய முசோலினி ஒரு பிசாசு, மாதாவைக் கொன்ற மாபாதகி
            அதேபோல அவர் எழுதும் கட்டுரைகளின் தலைப்பு எதுகைமோனை மிகுந்ததாய், நல்லதொரு உரைக் கவிதையாய் மிளிரும். 
            “செந்தமிழ் நாட்டு இளந்தமிழ் வீரனே! தீராதிதீரனே!” (1939, லோகசக்தி)
            “போருக்குப் புறப்படு!” (1939, லோகசக்தி)
            “சுதந்திரப் போருக்கு அழைப்பு!” (1939, லோகசக்தி)
            “கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்!” (1939, பாரதசக்தி)
            (வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி முதன்முறையாக எழுதப்பட்ட கட்டுரை இது)
            நூலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர் என்றெல்லாம் இயங்கியவர் அப்படி என்னதான் கல்வி கற்றிருக்கிறார் என்று பார்த்தால்...? எல்லாம் அனுபவக் கல்விதான். ஏட்டுக் கல்வி ஏக தூரம் இவருக்கு. பத்தாம்வகுப்பு பள்ளித் தேர்வில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் தோல்வியுற்று, குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார் என்கிற இந்தத் தகவல், சுய முன்னேற்ற எழுத்தாளர்கள், தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் இனி தங்கள் பட்டியலில் தோழர் ஐ.மா.பாவையும் இணைத்துக் கொள்ளலாம்.
           

            ஒருமுறை காந்தியார், தோழர் ஜீவா நடத்திக் கொண்டிருந்த காரைக்குடி ஆசிரமத்துக்கு வந்திருந்தபோது, தோழர் ஜீவாவின் சேவைகளைப் பார்த்துவிட்டு, ஜீவாவிடம் கேட்டாராம். இவ்வளவு அருமையாகச் செய்கிறீர்களே! உங்களுக்கு எவ்வளவு சொத்துள்ளது?” என்று. அதற்கு ஜீவா, “இந்தியாதான் எனது சொத்துஎன்றாராம்.  அதைக் கேட்ட காந்தியார், அகமகிழ்ந்து, “இல்லை. இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்துஎன்றாராம். அதுபோல, தமிழ்நாட்டையே தமது சொத்தாகப் பாவித்தவர் தோழர் ஐ.மா.பா. அதை அவரின் மொழியிலேயே கேட்போம்.
            “ரெண்டாவது உலக யுத்தம் தொடங்கினப்போ, ஆங்கிலேயர்கள் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தாங்க. யுத்த நிதி திரட்டினாங்க. 'பட்டாளத்தில் சேராதே... பணம் காசு கொடுக்காதேன்னு சிவகாசியில் பேசினேன். அதுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சப் ஜெயிலில் ஆறு மாசம் அடைச்சு, 50 ரூபாய் அபராதம் விதிச்சாங்க. எனக்கு ஜாமீன் கொடுக்க, அப்போ இருந்த வெள்ளைக்கார டெபுடி கலெக்டர், 'உனக்கு சொத்து ஏதும் இருக்கா?’ன்னு கேட்டார். 'இருக்குங்கய்யா... மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற மங்கம்மா சத்திரம் என் சொத்து. மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் எல்லாம் எங்க அப்பாவோட சொத்து. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எங்க பாட்டன், முப்பாட்டன் சொத்துதாங்கன்னு சொன்னேன். இதை மொழிபெயர்த்துச் சொன்னதும், டெபுடி கலெக்டர் கடுப்பாகி, 'இவனுக்கு ஜாமீன் கிடையாது. ஜெயிலில் தூக்கிப்போடுங்கனு சொல்லிட்டுப் போயிட்டாரு”.
            ஆக, துவக்ககால பொதுவுடைமைவாதிகள் இந்த தேசத்தையே தமது சொத்தாகப் பாவித்தவர்கள். தாமே தேசத்திற்கு சொத்தாகவும் இருந்தவர்கள். அவர்கள் வழி வந்த இன்றைய இடதுசாரிகள், கட்சி சார்ந்த மார்க்சியர்கள், சிந்தனை சார்ந்த மார்க்சியர்களின் இன்றைய நிதர்சனம் என்பது?... அது வேறொரு தளத்தில் பேசப்படவேண்டியது.
            தோழர் ஐ.மா.பா துவக்க காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல, உடல் தளர்ந்து, உள்ளம் தளராத தனது தள்ளாத இறுதிக் காலத்திலும், கனிம வளக் கொள்ளையர்களை, மதுரை மேலூரில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையை எதிர்த்தும் போராடியிருக்கிறார் என்பது நமக்கு சிலிர்ப்பூட்டுகிறதொன்றாகும்.
            இறுதியாக தோழர் ஐ.மா.பா அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு வருத்தத்தை அவரின் குரலிலேயே கேட்போம்.
            “ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் என் மனசை அறுக்குது!''
            சற்றுநேர மௌனத்துக்குப் பிறகு,
            ''அப்ப போலீஸ்காரன் எங்களை அடிக்கிறப்ப நாலு அடிதான் வலிக்கும். மீதி நாப்பது அடி பொத்து பொத்துனு சத்தம்தான் கேட்கும். இப்ப பேப்பர்களில் வர்ற செய்திகளைப் பார்த்தா ஒவ்வொரு வரியும் வலி தருது. இதுக்குத்தானா இத்தனை வருஷம் சிறைப்பட்டோம். அடிபட்டோம். குடும்பம் பெருசு இல்லை, நாடுதான் முக்கியம்னு அலைஞ்சோம்?’ன்னு வருத்தமா இருக்கு. சாதிச் சண்டைங்கிறான். மதக் கலவரம்கிறான். சொத்துக் குவிச்சிட்டாங்கங்கிறான். அரசியல்ல ஆலமரங்கள்கூட காளான்கள்கிட்ட அண்டி நிக்குது. ஒண்ணு மட்டும் சொல்றேன்... அதிக சொத்தும் பணமும் சேர்ந்தா, அது சனியன் பிடிச்சது மாதிரி. எனக்கு இருந்த சொத்துக்களைப் பிரிச்சு சொந்தபந்தங்களுக்குக் கொடுத்திட்டு, பென்ஷன் பணத்தில் நிம்மதியா இருக்கேன். எனக்கு புள்ளகுட்டி இல்லைங்கிற குறைகூட இல்லை. எல்லாருமே என் புள்ளைங்கதானே!'' என்கிறார் ஐ.மா.பா.
            மனசை அறுப்பது உங்களுக்கு மட்டுமல்ல ஐ.மா.பா.

- பாட்டாளி
நன்றி :
1. விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி எழுதிய படுகளத்தில் பாரததேவி - தி.வரதராஜன்

2. ரெட் சல்யூட்! - சௌபா

கருத்துகள் இல்லை: