பாமரக் கண்ணாடி .......... 2
-
பாட்டாளி
வாள்க ! தெராவிடம் வாள்கவே !
வாள்க ! தெராவிடம் வாள்கவே !!
இந்த வருசத்தோட தெராவிட எயக்கத்துக்கு நூறு வயசாகிப் போச்சாமுங்க. ஆட்ட பாட்டங் கொண்டாட்டமுன்னு வெகு வெமரிசையாக் கொண்டாடனுமுன்னுட்டுக் கேட்டுக்கிட்டாருங்க நம்ம மஞ்சள் துண்டுத் தலெவரு. பின்னே பெரியாரு அண்ணாவோட சுண்டு வெரலப் புடுச்சுட்டு வளந்தவரில்லியா? அதுகாண்டி ஆஸ்தான மடத்துல வெழா எல்லாம் நடந்துச்சுங்க. நல்லவேளைங்க. மேடையில எயக்கத்தோட வரலாறு பத்திப் பேச நம்ம குஷ்பூ அம்மாவக் கூப்புடல. பொழச்சுப் போவட்டும் நம்ம சனங்கன்னுட்டு நம்ம தலெவருக்கு ரொம்பப் பெரீய்ய மனசுதானுங்க. போவட்டும்.
தலெவருதான் மஞ்சத் துண்டோட அலையுறாருன்னா, நம்ம தளபதியிருக்காருங்கல்ல. அவுரு இன்னா செஞ்சாருன்னீங்க. தலெயெச் சுத்தி சொம்மா பகுத்தறிவு ஒளி வட்டங் கௌம்ப, பொஞ்சாதியோட திருக்கடையூருக்குப் போயி, அங்கன இருக்குற அபிராமி சமேத அமிர்தகடேசுவரருக்குப் பூசை புனஸ்காரமுன்னுட்டு சொம்மா ஜே ஜேன்னு தெராவிட எயக்க நூற்றாண்டெ வெகு வெமரிசையாக் கொண்டாடிப் புட்டாருங்க போங்க. சனங்களே சொம்மா அசந்து பூடுச்சுன்னா பாத்துக்கங்களேங். இந்தப் பத்திரிகைக்காரங்க இருக்காங்களே. அவுங்க செத்த சும்மா இருக்கக் கூடாது. சொம்மா பக்திப் பழமா சாமி கும்புட்டுக்குட்டுருந்த நம்ம தளபதியெயும், அவரோட சம்சாரத்தையும் போட்டா எடுக்க அலையோ அலையுன்னு அலைய, கடெசீல தெராவிட ஒடன் பொறப்புங்க வந்து தொரத்தி விட்டுட்டாங்க. நல்லா வேணும். பின்ன சொதந்திரமா சாமி கும்புடக் கூட வுடமாட்டேங்கிறாங்களே.
பொறவு, அந்தப் பத்திரிகைக்காரங்களெ எல்லாத்தையும் வெரட்டி வுட்டுட்டு அமிர்தகடேசுவரர், அபிராமி, காலசம்ஹார மூர்த்தி சுவாமி போன்ற சாமிங்களுக்கெல்லாங் நம்ம தளபதி பெயருக்கு நல்லா சொதந்திரமா, நிம்மதியா நீண்ட ஆயுளுக்காக அர்ச்சனை செஞ்சுபுட்டு, அப்பொறமா வெளியில வந்தவுரு சொன்னாராம்.
“அட நம்மளுக்கு இந்த சாமி, கடவுளு இதிலெல்லாங் நம்பிக்கெ இல்லீங்கோ. நானு எப்பேர்ப்பட்ட பகுத்தறிவுப் பாசறையிலருந்து, பாரம்பரியத்துலருந்து வந்தவென்ந் தெரியுமா? அப்பொறங் எதுக்கு இங்கென வந்தேன்னு கேக்குறீங்களா? நம்ம சம்சாரத்தோட சகோதரி சாருமதி - சம்முவசுந்தரத்துக்கு அறுபதாங் கல்யாணமுங்கோ. அதுக்காண்டி ஒரு எட்டு வந்து வாழ்த்தீட்டுப் போவலாமுன்னு வந்தேங்கோ. நீங்க தப்புத் தப்பா நெனச்சுட்டா அதுக்கு நான் என்னங்கோ பண்ணுறதுன்னு சொல்லீட்டு, கீழெ வுளுந்தாலுங் மீசைல மண்ணு ஒட்டுலேங்குற கதெயா, படக்குன்னு காருல ஏறி சங்கரன்ங் கோவிலுக்குப் போயிட்டாருங்கோ.
அட, சங்கரன்ங் கோவிலுக்கு எதுக்குன்னு நீங்க சட்டுன்னு பழையபடி தப்பா நெனச்சுடப்படாது. சங்கரன்ங் கோயில்ல எடத் தேர்தலு நடந்துச்சுல்ல. அதுக்கு வேலெ செய்யத்தானுங்கோவ். நம்ம நாகூரு அனீபா பாய் பாட்டுத்தாங்க சட்டுன்னு நெனவுல வந்துச்சு. வாள்க! தெராவிடம் வாள்கவே! வாள்க! தெராவிடம் வாள்கவே!!
கேவலப் படுத்தீராதிங்கய்யா!
கேவலப் படுத்தீராதீங்க!
ஆனாலும் நம்ம மஞ்சத் துண்டுத் தலெவருக்கு இம்புட்டுக் கோவம் ஆகாதுங்க. பொறவு என்னா? சொம்மா யோசிக்காமக் கொள்ளாம, சட்டுன்னு சபதம் வுட்டுட்டாருன்னா பாத்துக்கங்களேன்ங். நம்ம மஞ்சத் துண்டுத் தலெவரு கஷ்டப்பட்டு, ரோதனைப்பட்டு, வம்பாடுபட்டு, வங்கொலயாக் கெடவாக் கெடந்து, வூரு வொலகத்துலயே இதுவரெக்கும் இல்லாதது மாதிரி, ரொம்பப் பெரீய்ய... ரொம்ப ரொம்பப் பெரீரீரீய்ய்ய்ய....... படிப்புக் கட்டெடம் ஒன்னக் கட்டி, அதாங்க இந்த நூலகம். அதுக்கு அண்ணாத்தொரயோட பேரயும் வச்சி...... அப்பப்ப இந்த மாதிரி செல நல்ல வேலையுஞ் செஞ்சுப்புடுவாரு நம்ம மஞ்சத் துண்டு தலெவரு.
ஆனா, அடுத்து ஆட்சியெப் புடுச்ச அந்த அம்மாவுக்கு இதுலெல்லாம் ரொம்பக் கடுப்பு. ஏக்கெனவே கடு கடுன்னுட்டுருந்துச்சு. இப்ப அதிகாரம் வேறெ கையில வந்துடுச்சா. சேனெ தின்னவன்ங் நாக்குங், செரங்கு வச்சவங் கையுங் சொம்மா இருக்குமா? அந்த அம்மா அங்கன இருந்த பொஸ்தகங்களெயெல்லாங் மூட்டெ மூட்டெயாக் கட்டி அப்புறப் படுத்திட்டு, அந்த எடத்துல கொழந்தெங்களுக்கான ஆசுபத்திரி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லிச் புடுச்சு. அட ஆசுபத்திரி கட்டணுமுன்னான நல்லாத் தாராளமாக் கட்டிக்க. அதுக்கு வேற எடமா கெடக்கல்ல. அதெ வுட்டுப்புட்டு அந்த எடத்துலதான்ங் கட்டுவேன்னு மொட வாதம், மொரண்டு வாதம் புடுச்சா அது தப்புல்லயா?
இதெப் பாத்துட்டுத்தான்ங் நம்ம மஞ்சத் துண்டுக்கு கோவம் பொத்துக்கிடுச்சு. அட பொத்துக்கிட்டதுதாம் பொத்துக்கிடுச்சு. முந்தி மாதிரி எதுனா கடிதம் கிடிதங் எளுதீட்டாப் பரவாயில்ல. அதெ வுட்டுப்புட்டு. இப்புடி முன்னெப் பின்னெ யோசிக்காமச் சட்டுன்னு சபதம் வுட்டுப்புட்டாரே. அதாங்க மனசுக்கு ஆவல. தாங்கல. இப்புடிச் சட்டுன்னு “அண்ணா நூலகத்தை மாற்றினால் தீக்குளிப்பேன்” அப்பிடி இப்புடின்னுட்டாரே. அதாங்க மனசுக்கு தாங்கல.
ஏற்கெனவே நீங்க ஒரு தடவெ உண்ணாவெரதம் இருக்குறேன்னு, அப்புடி இப்புடின்னுட்டுச் சொல்லி உண்ணா விரதத்தையே கொச்சப் படுத்துனீங்க. இந்தத் தமிழ்நாட்டுக்கு “தமிழ்நாடு”ன்னு பேரு வையுங்கப்பான்னு கேட்டுக் கேட்டே உண்ணா விரதம் இருந்தே செத்துச் போன சங்கரலிங்கனார், “எமது மண் எமக்கு வேண்டும். எமது தாயகம் எமக்கு வேண்டும்” என்று பல்லில் பச்சைத் தண்ணி கூடப் படாமல் உண்ணாவிரதம் இருந்தே செத்துப் போன தமிழீழத் திலீபன் போன்றவங்களெல்லாம் காப்பாத்தி வச்சுருந்த உண்ணாவிரத மரியாதையை நீங்க காலெச் சாப்பாட்டுக்கும் மத்தியானச் சாப்பாட்டுக்கும் எடையில நானும் உண்ணாவெரதம் இருக்குறேன்னு இருந்து கெடுத்து வச்சது போதாதா?
இப்படித் தீடீர்ன்னு தீக்குளிக்குறேன் அப்புடி இப்புடின்னு சொல்லி, எங்க முத்துக்குமாரை¬யும் செங்கொடியையும் கேவலப்படுத்தீராதிங்கய்யா. கேவலப்படுத்தீராதீங்க.
மாமியா ஒடச்சா.......
எங்க அப்பத்தாக் கெழவிதான் அடிக்கடி சொல்லும். “மாமியா ஒடச்சா மண்ஞ் சட்டி. மருமவ ஒடச்சா பொன்ஞ் சட்டி” அப்புடின்னு. அந்தக் கதெயாவுல்ல இருக்குது அந்தம்மாக் கதெ.
அந்தம்மா ஏக்கெனவே ஒன்னுக்கு பத்தா பஸ்சுக் கட்டணத்தெ சர்ருன்னு ஒசக்க ஏத்திப்புடுச்சு. ரெண்டு ரூவா டவுனு பஸ்சு இப்ப ஏழு ரூவா. இருவது ரூவா வெளியூருப் பஸ்சு இப்ப நாப்பது ரூவா. முந்தி நாப்பது ரூவான்னா இப்ப எம்பது ரூவா. இப்புடி ரெட்டை ரெட்டையா ஏத்திப்புட்டு, இப்ப சமீபத்துல ரயிலுல வெலெ ஏத்திப்புட்டாங்களாம். அதுக்கு அந்தம்மா அறிக்கெ வுடுது பாருங்க. என்னான்னு?
“ஏற்கெனவே விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு பொருத்தமற்ற நேரத்தில் இந்தக் கட்டண உணர்வு அறிவிக்கப் பட்டுள்ளது”. அப்புடி இப்புடின்னு ஆயிரத்தெட்டு பாட்டுப் பாடிட்டு, கடெசீல சொல்லுது. “மொத்தத்தில் இந்த இரயில்வே பட்ஜெட் என்பது சாமானிய இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது”. எப்புடி இருக்குது கதெ?
ஏற்கெனவே பாலு வெலயிலருந்து பச்சத் தண்ணி வெல வரெக்கும் வெலவாசியெ ஒசக்க உச்சத்துல ஏத்திப்புட்டு, பத்தாததுக்கு இப்ப கரண்டு வெலெயெ வேற ஏத்தணுமுன்னு சொல்லிக்கிட்டுருக்குற “தாயுள்ளம் கொண்ட அம்மா” சொல்லுது. ரயில்ல வெலெ ஏறி சனங்கள்ளாங் ரொம்பக் கஷ்டப்படப் போறாங்களாங். அடடா! எங்க மேலெதான்ங் எம்புட்டு அக்கறை. கரிசனங். போதும்மா. போதும்மா. ரொம்ப ஒங்க அன்பெ எங்க மேலக் காட்டாதீங்க. நாங்க தாங்க மாட்டோம்ங்.
மீண்டும் அடுத்த பாமரக் கண்ணாடி காட்டும் வரை காத்திருங்க........




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக