"மக்கள் விடுதலை" இதழில்
'பாமரக் கண்ணாடி' என்கிறதொரு தொடர் ஒன்றை
எழுதி வருகிறேன்.
அந்தத் தொடர் இனி நமது
'மொழியின் வெளி' யில் தொடர்ந்து பதிவேற்றப்படும்.
பாட்டாளி
மக்கள் விடுதலையை வாசிக்கிறவங்களுக்கு வணக்கமுங்க. நாந்தாங்க பாட்டாளி. நீங்க பூதக் கண்ணாடி பாத்துருப்பீங்க. அது வழியாப் பாக்கயில உள்ளது உள்ளபடி அப்புடியே அச்சு அசலா பெருசு பெருசாத் தெரியுமுல்ல. அதுமாதிரித்தாங்க இந்தப் பாமரக் கண்ணாடியும். நாட்டு நெலமெங்களெ உள்ளது உள்ளபடி அப்புடியே அச்சு அசலா பெருசு பெருசா அந்தப் பூதக் கண்ணாடி மாதிரியே இந்தப் பாமரக் கண்ணாடியும் காட்டும். சரி. தொடர்ந்து பாக்குறீங்களா?
ஆட்டங் காலி படுதாக் காலி
சமீபத்தில விலைவாசி உயர்வால ரொம்பப் பெரிய கவலையில ஆழ்ந்து விட்டாராம் அன்னை சோனியா. ரொம்பக் கவலைப்பட்டு கவலைப்பட்டு உடம்பக் கெடுத்துக்க வேணாமுங்க. பாவம். இப்பத்தான் நீங்க ஆப்பரேஷன் வேற செஞ்சிருக்கிறீங்க. ஆனாலும் ஏழைங்க எங்க மேல ரொம்பத்தான் இரக்கப்பட்டு (அஞ்சு மாநிலத் தேர்தல் வேற வருதுல்ல) மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ¨டன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினாராம்.
விலைவாசி உயர்வைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டுள்ள ஏழை நடுத்தர வகுப்பு மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரொம்ப நேரம் ஆலோசனை நடத்தின கையோடு ஒரு ஆய்வு செஞ்சாகணுமுன்னு கேட்டுக்கிட்டாராம்.
போன மாசத்துக்கு முந்துன மாசம் அக்டோபர் 15ஞ்சாந் தேதியோட உணவுப் பண வீக்க விகிதம் 11.43 சதமாக அதிகரிச்சிருச்சுன்னு ‘ஆய்’ ‘ஆய்’ன்னு ஆய்ஞ்சு முடிவு சொன்னாங்களாம். இந்தப் புள்ளி விவரங் குறிச்செல்லாங் நமக்கு எங்கங்க அம்புட்டு அறிவு இருக்குது. இருந்துருந்தா ஒங்களையும் அந்தக் காவிச் சாமியார்க் கும்பலையும் மாத்தி மாத்தி உக்கார வைச்சுட்டு, ஒங்ககிட்டய இப்பிடித் தொன்னாந்துட்டுக் கெடப்போமாங்க.
உடனே அன்னை சோனியா, என்னாங்க காரணமுன்னு அப்பாவித்தனமாக் கேட்டாங்களாம் என்னெய மாதிரியே. உடனே அந்த ஆய்வு செஞ்ச அதிகாரிங்களும் அமைச்சகமும் சொல்லுச்சாம்.
"மக்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. அசைவ உணவுகளையும், துரித உணவுகளையும் அதிகம் சாப்பிடத் தொடங்கி விட்டனர். அத்துடன் வீட்டுச் சாப்பாட்டை விட வெளியில் சமைப்பதைச் சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது" அட. இத்தோட நிறுத்தியிருந்தாங்கன்னா பரவாயில்லீங்கோ. அதெல்லாம் பணக்கார வூட்டு சமாச்சாரம்முன்னு விட்டுருக்கலாம். இதுக்கு மேல சொன்னாங்க பாருங்க. அட கொப்பந் தன்னான.
"தொழிலாளர்களிடையே அன்றாட வேலைக்கு கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருவதாலும், சாப்பாட்டுக்கு நிறைய செலவு செய்வதால் விலைவாசி உயர்ந்து வருகிறது"
அப்புடிப் போடு. நாங்கள்ளாங் ரொம்பச் சாப்புடுறதாலத்தான் விலைவாசி ரொம்ப ஏறுதாம். கொறச்சுக்குறோம் சாமி. கொறச்சுக்குறோம். இனிமே, பசிச்சாலுஞ் சரி. வவுத்து மேல ஈரத் துணியைப் போர்த்திக்கிட்டு பட்டினியாவே கிடந்துடுறஞ் சாமி. ஈரத் துணியெ வவுத்து மேல போட்டுக்கிட்டுப் பட்டினியாக் கெடக்குறது எங்களுக்கென்ன புதுசா என்ன? போவட்டுஞ் சாமி. போவட்டும். ஆனா, நீங்க எங்களுக்காக கரிசனப்பட்டு ஒங்க கொள்ளையை நிறுத்தாதீங்க சாமி. நிறுத்திறாதீங்க.
எப்பவும் போல ஆன்லைன்ல கொள்ளையடிங்க. உணவுப் பொருட்களைப் பதுக்கி வைச்சு சந்தையில ஒண்ணுக்கு முக்கால விலை வையுங்க. நாங்க வெளவிக்கிற அரிசியை, கோதுமையை வெளிநாடுகளுக்கு சல்லிசா ஏத்துமதி செய்யுங்க. அதேசமயம் அங்கருந்து ஒண்ணுக்குப் பத்தா அதிக வெலையில அதே சாமானுங்கள எறக்குமதி செஞ்சுக்கிடுங்க. அதுக்கு பதிலா ராணுவத்துக்கு நெறைய ஆயுதம் ஆயுதமா வாங்கிக்கிங்க. பின்ன நாங்க பசிக்குதுன்னு தட்டேந்தி போராடினா எங்கள அடக்கணுமுல்ல.
ஆனா, ஒண்ண மட்டுந் நல்லாத் தெரிஞ்சுக்குங்க. எங்க வவுத்துல வளர்ற தீ கொஞ்சங் கொஞ்சமா நெஞ்சுலயுங், கண்ணுல்லயுங் வளந்துருச்சுன்னு வச்சுக்குங்க. எங்க சனங்கெல்லாங் ஒண்ணாச் சேந்துருச்சுன்னு வச்சுக்குங்க. அப்பொறம் ஒங்க ஆட்டங் காலி. படுதாக் காலிதான்.
சிரிப்புப் போலீசு
நெனக்க நெனக்க சிரிப்புச் சிரிப்பா வருதுங்க. போன மாசத்துக்கு முந்துன மாசம் டெல்லீல மாநில ஆளுநர்கள் மாநாடு நடந்துச்சாம். அங்கன போயி அந்த மாநாட்ட முடிச்சு வச்சுப் பேசினாராம் நம்ம பெரதமரு. அவருதாங்க நம்ம மண்ணு மோகன் சிங்கு. அவரு பேசுனதக் கேட்ட பொறவு சொம்மா சிரிச்சுச் சிரிச்சு வவுத்து வலி வந்ததுதாங்க மிச்சம். அப்புடி என்னா பேசுனாருன்னு கேக்குறிங்களா?
“ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என நான் கருதுகிறேன்.” அப்பிடின்னு சொன்னா சும்மா சிரிப்பு வராது. நம்ம வடிவேலு ஒரு படத்துல சொல்லுவாருல்ல சிரிப்புப் போலீசுன்னு அதுமாதிரி.
ஏற்கெனவே ஊரே நாறிக் கெடக்கு. ஊரு ஒலகத்துல இதெ வெளியில போயிச் சொல்லக் கூடாதாம். சொன்னா அது தேசிய அவமானமாம்.
இந்தாக் கையில வச்சுப் பேசறேனே செல்லுபோனு. அதுல என்னமோ அம்புட்டுப் பெரிய ஊழலாம். அதென்னமோ டூ ஜீயாம். வாயிக்குள்ளாறயே நொழயல. நமக்குச் திங்குற சுசியம் தெரியும். இல்லேன்னா சுசீந்திரந் தெரியும். இதெங்க தெரியப்போவுது. அதுல எக்கச்சக்கமா ஊழலாம். அப்பொறம் என்னமோ வெளயாட்டுப் போட்டில ஊழலாம். நம்மூருப் பக்குட்டு இந்த பொங்கச் சமயத்துல வெளாட்டுப் போட்டில்லாங் நடத்துவாங்கள்ள. அதுமாதிரித்தானாம் இது. ஆனா, இது உள்ளூருப் போட்டியில்லயாம். ஒலகம் பூராவும் வருவாங்களாம். அதுல போயி ஊழலாம். ஒலகம் பூரா நாறிப் போச்சாம். அப்ப வரலயா ஒங்க தேசிய அவமானம்?
அப்பொறம் என்னமோ ஆதர்சோ அதிரசமோ? எளவு வாயிக்குள்ளாறயே நொளைய மாட்டேங்குது. அதாங்க இந்தக் கார்க்கிலுப் போரு நடந்துச்சுல்ல. அப்ப அதுக்கு நாங் கூட காசு குடுத்தேங்க. அந்த போருல்ல செத்தவுங்களுக்கு வூடு கட்டிக் குடுத்தாங்களாம். அதுலயும் ஊழலாம். அட இம்புட்டு ஏன்? இந்தத் தீவாளி சமயத்துல நாம ராக்கெட்டு வுடுவோம்முல்ல. அதுமாதிரி பெரிசு பெரிசா ராக்கெட்டு விட்ட விஞ்ஞானிங்க செஞ்சாங்களாம் பாருங்க ஒலகப் பெரிய ஊழலு. நம்ம மொதத் தெரு கோழிகளவானி கோவாலு இருக்கானே. அவன மாதிரியேதாங்க. கொஞ்சங் கூடச் சத்தம் வராம ஈரத் துணியப் போட்டுக் கவுத்தி, அமுக்கி, கோழியக் களவாண்டுறுவான்ல. அதுமாதிரித்தாங்க. கொஞ்சங் கூடச் சத்தங் காட்டாம அப்படியே கோழியை அமுக்குற மாதிரி, கொஞ்சங் கூட சத்தங்காட்டாம அமுக்கிட்டாங்களே அந்த ராக்கெட்டு ஊழலு.
அட, இப்பப் புதுசாக் கௌம்பிருக்கே ஒரு ஊழலு. அதாங்க என்னமோ பரிச்சை வச்சு வேலெ குடுப்பாங்களாமுல்ல. அதாங்க.... அதாங்க..... அது வந்து..... வந்து.... நமக்கு இந்தப் பேரெல்லாஞ் சொல்லத் தெரியலிங்கோ. நாம என்னா ஒங்கள மாதிரி பெருசு பெருசாப் படிச்சவுங்களா? படிச்சுப்புட்டு பெரிசு பெரிசா தப்புப் பண்ண.
நாம ஒண்ணுந் தெரியாத மண்ணாந்தைங்க. நீங்க ரொம்பப் பெரிய பெரிய படிப்புப் படிச்சவராம். அதுலயும் மெடலு மெடலா, தங்கந் தங்கமா வாங்கியிருகீங்களாங். நாம என்னாங்க. நம்மூட்டுப் பொம்பளக்கி செட்டியார் கடெயில காதுக்கும் மூக்குக்கும் துக்குனி துளியூண்டு குண்டுமணி தங்கங் வாங்கீருக்கேன்ங். அத்தோடச் சரி. ஆனா, நீங்க அம்பூட்டுப் பெரிய படிப்புப் படிச்சவராம். நீங்க படிச்சு என்னா பண்றது. நம்ம பட்டுக்கோட்ட அண்ணந்தாங் பாட்டுக் கட்டும். “உளுது ஒழச்சு பாடுபடுறவந்தான் சோறு போடுறான். எல்லாந் தெரிஞ்சு எளுதிப் படிச்சவன்தான் கூறு போடுறான். நாட்டை நல்லாக் கூறுபோடுறான். இவெஞ் சோறு போடுறான். அவெங் கூறுபோடுறான்” அப்புடின்னு. அதுமாதிரித்தாங்கோ இருக்குது ஒங்க கதையும்.
எல்லா நெகழ்சிகளும் வழக்கம்போல ஒரே சினிமாக்காரவுங்க ஆக்கிரமிப்புத்தாங்க. இது வழக்கமான கதெதான. இதப்போய் புதுசாக் கதெ சொல்லுறமாதிரி சொல்லுற.
அப்புடிங்கிறங்களா? நாஞ் சொல்ல வர்றது அதெ இல்லிங்க. எல்லா நெகழ்ச்சிகளுக்கும் விளம்பரதாரர் யாருங்கிறிங்க? இந்த அணு சக்திக் கார்ப்பரேசன்ந்தானுங்க. இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குவது.... இந்த நிகழ்ச்சி மட்டும் இல்ல. எல்லா நெகழ்ச்சிகளையும் வழங்கியது இந்திய அணு சக்தி கார்ப்பரேசன்தான்.
எல்லா வெளம்பரங்கல்லயுங் கூடங்குளம் அணு மின் நெலயம் ஆபத்தில்லாதது. எந்த நோயையும் உண்டாக்காது. பயப்படாதீங்க. தாராளமா வெவசாயம் செய்யலாம். அதுபோலவே கடல்ல வாழுற எந்த உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்ல. தாராளமா கடல்ல மீன் பிடிக்கலாம். அப்புடின்னுட்டு ஒரே வெளம்பரந்தான். இதுக்கெல்லாம் காரணம் யாருங்கிறிங்க? நம்ம தலைவருங்கதான்.
அணு உலை ஆபத்தானதுன்னு எல்லாத்துக்கும் நல்லாத் தெரியுமுங்க. அதுனால ஆபத்தான அணு உலை வேண்டாமுன்னு தடுத்து நிறுத்துவாங்களா? அதெ வுட்டுட்டு மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வரை அணு உலையை நிறுத்தி வையுங்கள் அப்புடின்னு சொல்லச் சொல்ல, திரும்பித் திரும்பி அதெயே சொல்லச் சொல்ல, சும்மாருப்பானுங்களா? இந்த இந்திய அரசும் அந்த அதிகாரிங்களும். அதான்ங் இப்புடி வெளம்பரம் மேல வெளம்பரம்மா பண்ணிக் குமிச்சுட்டாங்க. மக்களோட அச்சத்தெத் தீக்கணுமா இல்லியா?
இந்த வெளம்பரத்துக்கெல்லாம் செலவு யாரோட காசுங்கிறிங்க? எல்லாம் நம்ம வரிப்பணம்தாங்க. என்னா பண்ணுறது? நம்ம காச எடுத்து நம்மளயே ஏமாத்துறாய்ங்க. இதெத்தான் நம்ம செல்லத் தாயிக் கெழவி சொல்லும். சொந்தக் காசுல்லயே சூனியம் வச்சுக்கிடுறதுன்னு. அதுதாங்க நடக்குது.
மீண்டும் அடுத்த பாமரக் கண்ணாடி காட்டும் வரை காத்திருங்க.......




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக