வருக...... வருக....... வணக்கம்

பக்கங்கள்

திங்கள், 27 மார்ச், 2017





       தோழர் சிவ. வெங்கடேஷ் தமுஎகசவின் பொறுப்புள்ள செயல்பாட்டாளர். சிபிஎம் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். அவரின் இணையர் தோழர் சீத்தா. தமிழ்நாடு அறிவியல் இயக்க தீவிர செயல்பாட்டாளர். இவ்விரு இணையர்களின் மகளின் மணவிழாவன்று தோழர் சீத்தா அவர்கள் எழுதிய 'ராசாத்தி' என்கிற சிறு நூலினை மணவிழாப் பரிசாக அளித்தார்கள். அச் சிறுநூல் குறித்து.......
       நல்ல சரளமான எழுத்து நடை.. சம்பவ அடுக்குதல்களில் மட்டுமல்ல, எங்கு துவங்க வேண்டும், எப்படித் துவங்க வேண்டும் என்கிற சரியான புரிதல் தோழர் சீத்தாவுக்கு கை கூடியிருக்கிறது.
       'தாயுமானவள்' 'அழகின் சிரிப்பு' இரண்டும் அருமையான நடைச் சித்திரங்கள். 'ஞாயிற்றுக் கிழமையும் வேண்டாம்' ஊடாட்டத்தின் வலியைச் சொல்லிடும் மெலிதான பதட்ட உணர்வை வாசிப்பவருக்குள்ளும் பற்ற வைத்திடும் நல்ல யதார்த்தக் கதை. 'எங்க பாக்ஸி குட்டி போட்டிருக்கு' குழந்தைகளின் விரியும் அழகிய மன உலகச் சித்திரம். கொஞ்சம் கவனம் தப்பினால் சினிமாத்தனமாகிவிடும் 'சிசுவின் குரல்'. எழுத்தாக்கத்தில் இன்னும் அதிர்வையும் தாக்கத்தையும் கோரும் 'ராசாத்தி'. கற்றலின் இனிமையைக் காயப்படுத்தி பிஞ்சில் வெம்ப வைக்கும் வித்தைகளைத் தோலுரிக்கும் 'கற்க கசடற' கட்டுரை. சகித்தலும் சுகித்தலுமாய் 'சரிசரி' என சிறிய நூலாயினும், சிறந்த எழுத்தாடல்களைக் கொண்ட நல்லதொரு நூலினைத் தந்திருக்கிறார் தோழர் சீத்தா.
       பொதுவாக ஒரு நல்ல எழுத்துக்கு அறிகுறி என்பது நம் மனத்தில் நினைத்ததை எழுத்து வழி எவ்வளவு தூரம் கடத்தியிருக்கிறோம் என்பதில்தான் நம் மொழிச் செயல்பாடும் மொழிதல் செயல்பாடும் அடங்கியிருக்கிறது. அந்தக் கடத்துதல் செயல்பாட்டின் அடுத்த கட்டம் அதை எத்தனை தூரம் வாசகனுள் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறோம் என்பதுதான். அதற்கு தேவை நிறைய வாசிப்பும், நிறைய எழுத்து முயற்சியும், பயற்சியும். எதைச் சொல்லவேண்டும் என்பதைவிட, எதையெல்லாம் சொல்லக் கூடாது, சொல்லத் தேவையில்லை என்கிற பக்குவம் அப்போதுதான் கைகூடும். தொடர்ந்து முயற்சித்தால் நல்லதொரு படைப்பாளியாய் மலர்வார் என்கிற நம்பிக்கையைத் தருகிறது தோழர் சீத்தாவின் 'ராசாத்தி நூல்'. அவர் படைப்புலகில் வலிமையாக இயங்கிட வாழ்த்துவோம்.  



கருத்துகள் இல்லை: